கோஹிமா: நாகா இன மக்கள் வாழும் பகுதிகளை ஒருங்கிணைத்து தனிநாடு கோரும் நாகாலாந்து தேசிய சோசலிஸ்ட் கவுன்சில் (கப்லாங்) தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் பாதுகாப்புப் படையினர் 8 பேர் உயிரிழந்துள்ளனர்.
நாகாலாந்து, மணிப்பூர், அஸ்ஸாம் மாநிலங்களில் நாகா இன மக்கள் வாழும் பகுதிகளை ஒருங்கிணைத்து தனிநாடு கோரும் அமைப்பு நாகாலாந்து தேசிய சோசலிஸ்ட் கவுன்சில் (கப்லாங்) பிரிவு. தடை செய்யப்பட்ட இந்த இயக்கத்தினர் சீனா, மியான்மரில் முகாம்களை அமைத்து செயல்பட்டு வருகின்றனர்.
இந்த அமைப்பைத் தவிர பிற நாகாலாந்து தனிநாடு கோரும் இதர குழுக்களுடன் மத்திய அரசு அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இப்பேச்சுவார்த்தையில் முன்னேற்றமும் ஏற்பட்டு வருகிறது.
இந்நிலையில் நாகாலாந்து தேசிய சோசலிஸ்ட் கவுன்சில் (கப்லாங்) பிரிவு தீவிரவாதிகள் மோன் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினர் சென்ற வாகனம் மீது திடீரென தாக்குதல் நடத்தினர். கையெறி குண்டுகளை வீசியும் துப்பாக்கியால் சுட்டும் இத்தாக்குதலை நடத்தினர்.
இதில் பாதுகாப்புப் படையினர் 8 பேர் பலியாகினர். 3 ஆண்டுகளுக்கு முன்னர் இதேபோல் ஒரு தாக்குதலை நாகாலாந்து தேசிய சோசலிஸ்ட் கவுன்சில் (கப்லாங்) பிரிவு தீவிரவாதிகள் நடத்தியிருந்தனர். அதில் 8 ராணுவ வீரர்கள் மரணமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.