வன்முறையை தூண்டியதாக சேலத்தில் சுற்றுச்சூழல் ஆர்வலர் பியூஷ் மானுஷ் கைது

சேலம் விமான நிலைய விரிவாக்க பணிக்கு எதிராகவும், விவசாயிகளுக்கு ஆதரவாகவும் கூட்டங்களை நடத்திய ‘சேலமே குரல் கொடு’ அமைப்பை சேர்ந்த பியூஷ் மானுஷை இன்று தீவட்புபட்டி போலீசார் கைது செய்தனர்.

நேற்று திரைப்பட நடிகர் மன்சூர் அலிகான் கைது செய்யப்பட்ட வழக்கில் பியூஸ் மானூஷூம் குற்றஞ்சாட்டப்பட்டார். இவர் மீது அரசுக்கு எதிராக பேசுதல், வன்முறையை தூண்டுதல், கொலை மிரட்டல் விடுத்தல் ஆகிய பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தும்பிபாடி கிராம நிர்வாக அலுவலர் கொடுத்த புகாரின் பேரில் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இவரை ஓமலூர் காவல் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சேலம் காமலாபுரம் பகுதியில் விமானநிலையம் விரிவாக்க திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிப்பதற்கு நடிகர் மன்சூர் அலிகானை, சேலத்தை சேர்ந்த இயற்கை ஆர்வலர் பியூஷ் மானுஷ் கடந்த 3ஆம் தேதி அழைத்து வந்தார். அப்போது காமலாபுரம் பகுதியில் விவசாயிகளை சந்தித்து மன்சூர்அலிகான் ஆதரவு தெரிவித்தார்.

அதனையடுத்து மன்சூர்அலிகான் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி சர்ச்சைக்குள்ளானது.

மன்சூர்அலிகான் மற்றும் அவரை அழைத்து வந்த பியூஷ் மானுஷ் உள்பட சிலர் மீது போலீசார் வழக்கு பதிவுசெய்தனர். இந்த வழக்கில் பியூஷ் மானுஷ் முதல் குற்றவாளியாகவும், மன்சூர் அலிகான் 2வது குற்றவாளியாகவும் சேர்க்கப்பட்டனர். நேற்றைய தினம் தீவட்டிப்பட்டி போலீசார் சென்னையில் மன்சூர் அலிகானை அவரது வீட்டிற்கு சென்று கைதுசெய்து சேலம் அழைத்து வந்தனர். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில் பியூஷ் மானுஷ் இன்று மாலை கைது செய்யப்பட்டுள்ளார். ஓமலூர் காவல்நிலையத்தில் வைக்கப்பட்டுள்ள அவரிடம் போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். -BBC_Tamil

TAGS: