பெங்களூர்: காவிரி மேலாண்மை ஆணைய விவகாரத்தில் கர்நாடக அரசு மீண்டும் முட்டுக்கட்டை போடுகிறது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. எனினும் அதை மத்திய அரசு கேட்கவில்லை. இதை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இதையடுத்து உச்சநீதிமன்றம் குறிப்பிட்ட காலத்தை கூறி அதற்குள் காவிரி நீர் பங்கிடுவதற்கான திட்டத்தை அமைக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு உத்தரவிட்டது.
காரணம்
இந்த திட்டத்தை உருவாக்க அமைச்சரவை ஒப்புதல் வேண்டும், ஆனால் அமைச்சர்கள் கர்நாடக தேர்தலில் பிசியாக இருந்ததாக மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் உப்பு சப்பில்லாத காரணத்தை கூறியது.
சம்மதம் தெரிவித்தது
இதையடுத்து திட்டத்தை உருவாக்கியே தீர வேண்டும் என்று காவிரியை பகிர்ந்து கொள்ளும் 4 மாநிலங்கள் சார்பில் பிரதிநிதி நியமிக்கப்பட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது. மத்திய அரசோ காவிரி மேலாண்மை ஆணையத்தை அமைக்க ஒப்புதல் கூறியது. அதுபோல் கர்நாடக அரசும் இதற்கு சம்மதம் தெரிவித்தது.
மேலாண்மை ஆணையம்
இந்த நிலையில் கர்நாடக முதல்வராக குமாரசாமி பொறுப்பேற்றுக் கொண்டார். இதையடுத்து தென்மேற்கு பருவமழை காரணமாக கனமழையால் கபினி உள்ளிட்ட அணைகள் நிரம்பின. இதையடுத்து கபினி அணையிலிருந்து நீர் திறந்துவிடப்பட்டது. இந்நிலையில் குமாரசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில் காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்க நாடாளுமன்றத்தின் ஒப்புதல் தேவைப்படுகிறது.
முட்டுக்கட்டை போடுகிறது
நாடாளுமன்ற ஒப்புதல் பெறாமல் ஆணையத்திற்கான அறிவிப்பு அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது என்றார். எனவே குமாரசாமி காவிரி மேலாண்மை ஆணையம் அமைப்பதற்கு முட்டுக் கட்டை போடுகிறார் என்றே தெரிகிறது.