சேலம்: சேலம்- சென்னை 8 வழிசாலைக்கு மக்கள் எதிர்ப்பு தொடர்கிறது. அதேநேரத்தில் இந்த 8 வழிசாலைக்கு எதிராக கருத்து தெரிவிப்பவர்கள், போராட்டத்தில் ஈடுபடக் கூடியவர்கள் என சந்தேகிப்பவர்களை உடனடியாக கைது செய்வதில் போலீசார் மும்முரமாக இருந்து வருகிறது.
சேலம்- சென்னை 8 வழிசாலைக்கு எதிரான போராட்டத்தில் நடிகர் மன்சூர் அலிகான் பங்கேற்றார். அப்போது 8 வழிசாலை அமைத்தால் 8 பேரை வெட்டுவேன் என ஆவேசமாக பேசினார்.
இது தொடர்பாக போலீஸ் முதலில் வழக்கு மட்டும் பதிவு செய்தது. இதன் பின்னர் சேலம் பகுதியில் அவசரகதியில் நிலங்களை அளவெடுக்க தொடங்கியது அரசு.
இதனால் சேலம்-சென்னை 8 வழிசாலைக்கு எதிராக சேலம் பகுதியில் பதற்றமான சூழல் உருவானது. இந்த பதற்றம் போராட்டமாக உருவெடுத்துவிடாமல் இருப்பதில் அரசு படுதீவிரமாக இருக்கிறது.
இதன் ஒருபகுதியாக நடிகர் மன்சூர் அலிகான் ஞாயிற்றுக்கிழமையன்று அதிரடியாக கைது செய்யப்பட்டார். அவரைத் தொடர்ந்து நேற்று திங்கள்கிழமையன்று சேலம் சமூக ஆர்வலர் பியூஷ் மனுஷ் விசாரணைக்கு என அழைத்துச் செல்லப்பட்டு கைது செய்யப்பட்டார்.
இவர்கள் மீது அரசுக்கு எதிராக மக்களை போராடத் தூண்டுதல் உள்ளிட்ட பிரிவுகளில் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இந்நிலையில் இன்று சேலம் ஆச்சாங்குட்டப்பட்டியில் நிலம் எடுக்க எதிர்ப்பு தெரிவித்த பொதுமக்களிடம் சமூக ஆர்வலர் வளர்மதி பேசிக் கொண்டிருந்தார்.
உடனடியாக அவரை போலீசார் வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்று கைது செய்தது. சேலம்- சென்னை 8 வழிசாலைக்கு எதிராக சிறு கருத்து தெரிவித்தாலும் கைது என்கிற நிலைமை உருவாகி உள்ளது.