உலகறிந்த மொழிகளில் உள்ள நூல்களை எல்லாம் தன்னகத்தே கொண்டு பெருமைப்படும் நூலகங்களுக்கு மத்தியில், உலகம் அறிந்திராத மொழியின் பிரதிகளை, சுவடிகள் வடிவில் கொண்டு சிறப்புப் பெருமை பெறுகிறது சென்னை நூலகம்.
சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் உள்ள தமிழக அரசினர் கீழ்த்திசை சுவடிகள் நூலகத்தில் இதுவரை அறிந்திராத மொழியில் எழுதப்பட்டுள்ள சுவடியில் உள்ள தகவலைப் படிக்க உலகம் முழுவதும் ஆர்வலர்களின் உதவி தேவை என நூலகர்கள் தெரிவித்துள்ளனர்.
- ஓலைச்சுவடியில் மொய் எழுதும் வழக்கம்: தமிழக மாணவியின் கள ஆய்வில் கண்டுபிடிப்பு
- அண்ணா நூற்றாண்டு நூலகத்தை பயன்படுத்த அதிகாலை முதலே வரிசை!
இருநூறு ஆண்டுகளாக 70,000க்கும் மேலான சுவடிகளை பாதுகாத்துவரும் இந்த நூலகத்தில் உள்ள அரிய சுவடி ஒன்றில் இடம்பெற்றுள்ள செய்தி, எந்த மொழியில், என்ன எழுதப்பட்டுள்ளது என்பதை தெரிந்துகொள்ள பலமுயற்சிகளை நூலகர்கள் எடுத்துவருகின்றனர்.
”வெளிநாடுகளில் இருந்து ஓலைச்சுவடிகளை தேடிப் படிக்க வரும் நிபுணர்கள் பலரிடம் இந்த சுவடியை காட்டிவிட்டோம். விளம்பரமும் கொடுத்துவிட்டோம். இதுவரை எந்தத் தகவலும் இல்லை. சிறப்பு கவனம் எடுத்து அந்த சுவடியை பாதுகாத்து வருகிறோம்,” என்கிறார் தலைமை நூலகர் சந்திரமோகன்.
மொழியறியாத சுவடியோடு, வேறு எங்கும் காணக்கிடைக்காத ஓலைச்சுவடிகளை இந்த நூலகத்தில் காணலாம் என்று அந்த நூலகத்தை நமக்கு அறிமுகப்படுத்தினார் அவர்.
ஓலைச்சுவடி பெட்டகமான நூலகம்
”ஓலைச்சுவடி என்றாலே பட்டையாக, நீளமாக மட்டுமே பார்த்திருப்பீர்கள். இங்கே எங்கள் நூலகத்தில், வட்ட வடிவத்தில், சிவலிங்க வடிவத்தில் சுவடிகள் உள்ளன. திருமுருகாற்றுப்படை சுவடி ஒன்று மிகச்சிறிய வட்ட வடிவு ஓலையில் எழுதப்பட்டுள்ளது. மிகசிறிய அளவில், வெறும் 11 சென்டிமீட்டர் நீளமும், 2.5 சென்டி மீட்டர் அகலமும் கொண்ட கரிநாள் சுவடி ஒன்று உள்ளது. குழந்தைகளுக்கு தமிழ் மொழியைக் கற்றுக்கொடுக்க எழுதிவைக்கப்பட்ட சுவடியில் எழுத்துகள் குழந்தைகளுக்கு ஏற்றவாறு பெரிய எழுத்துகளை கொண்டுள்ளது. ஆங்கிலேயர்கள் தமிழைக் கற்றுக்கொள்ள உதவிய ஆங்கிலம்-தமிழ் அகராதி உள்ளது,” என நூலகத்தில் உள்ள அரிய சுவடிகளை நம்மிடம் காட்டினர் சந்திரமோகன்.
மொழிவாரியாக பார்த்தால் தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, அரபி, பர்மிய மொழி, பாரசீகம், உருது, கன்னடம், சமஸ்கிருதம் உள்ளிட்ட மொழிகளில் சுவடிகள் பாதுகாக்கப்படுகின்றன. இந்திய மொழிகள், சிங்களம், பிரெஞ்சு, ஜெர்மனி, மராத்தி, பெங்காலி உள்ளிட்ட மொழிகளில் இருபதாயிரத்திற்கும் மேற்பட்ட குறிப்பு புத்தகங்களும் இங்குள்ளன.
சித்த மருத்துவம், யுனானி மருத்துவம், இயற்கை வளம், வரைபடங்கள், பக்தி இலக்கியங்கள், கோயில் ஆகமங்கள், இலக்கணம், அகராதி போன்ற வெவ்வேறு பிரிவுகளை சேர்ந்த சுவடிகள் உள்ளன.
சுவடி நூலகம் தொடங்குவதற்கு முக்கிய முயற்சிகளை எடுத்தவர்கள் ஆங்கிலேயர் காலத்தில் தமிழகம் மற்றும் ஆந்திராவில் பணியாற்றிய ஆங்கிலேயே அதிகாரிகள்தான். இந்தியாவின் சர்வேயர் ஜெனரலாக இருந்த காலின் மெக்கன்சி, ஆந்திராவில் மாவட்ட ஆட்சித் தலைவராக இருந்த சி.பி.ப்ரௌன் மற்றும் மொழியியல் அறிஞர் பேராசிரியர் லெய்டன் ஆகியோர் சேகரித்த சுவடிகள்தான் இந்த நூலகத்தை அலங்கரிக்கின்றன. மெக்கன்சியின் பணிக்காலத்திற்குப் பிறகு அவர் இங்கிலாந்து சென்றதாகவும், அவரது மறைவுக்கு பின்னர் சுவடிகளை அவரது மனைவியிடம் ஆங்கிலேய அரசு சுமார் 10,000 பவுண்ட்கள் கொடுத்து அவற்றை பெற்றதாகவும் குறிப்புக்கள் உள்ளன.
இரண்டாம் உலகப்போர் நடந்த காலத்தில் சென்னை பல்கலைக்கழகத்தில் இருந்து சுவடி நூலகத்தை ஆங்கிலேய அதிகாரிகள் தற்காலிகமாக திருப்பதிக்கு மாற்றிப் பாதுகாத்துள்ளனர். சுவடிகளை படித்து, தனியாக ஒரு குறிப்பேட்டில் எழுதிவைக்கும் பழக்கம் இருந்து வந்துள்ளது.
ஆங்கிலேயர் காலத்தில் சுவடிகளில் இருந்து தொகுக்கப்பட்ட விளக்கப்பதிவேடுகள் வரலாற்று ஆவணங்களாக மாறியுள்ளன.
சுவடிகளைப் பாதுகாப்பதோடு மட்டுமில்லாமல், ஆர்வத்துடன் வருபவர்களுக்கு ஓலைச்சுவடிகளை தேடித் தரவும், விளக்கவும் நிபுணர்கள் உள்ளனர். ”இந்தியாவின் பல மாநிலங்களில் இருந்து ஆர்வத்துடன் தகவலைத் தேடி வருபவர்களுக்கு இங்குள்ள தமிழ், உருது, சமஸ்கிருத அறிஞர்கள் உதவுகின்றனர். வெளிநாடுகளில் இருந்து ஆய்வாளர்கள் வருவதாக தெரிவித்தால், அவர்களின் தேவைக்கு ஏற்ற சுவடிகளை தேடி எடுத்துவைத்துவிடுவோம். ஓலைச்சுவடிகளில் இருக்கும் தகவல்களை கொண்டு தற்கால தமிழ் மொழியில் எழுதப்பட்ட புத்தகங்களும் உள்ளன,” என்கிறார் நூலகர் சந்திரமோகன்.
பன்னாட்டு அறிஞர்களை ஈர்க்கும் நூலகம்
சுவடிகளை பாதுகாப்பதோடு, 1898ம் ஆண்டில் இருந்து தொடர்ந்து புத்தகங்களையும் இந்த நூலகம் வெளியிட்டுள்ளது. முதன்முதலாக வெளியிடப்பட்ட புத்தகத்தில் இந்த நூலகத்தில் சேர்த்துவைக்கப்பட்டுள்ள சுவடிகள் பற்றி விளக்கமாக எழுதப்பட்டுள்ளது.
இந்த நூலகத்தில் உள்ள சுவடிகளை ரசாயனங்களைக் கொண்டு பாதுகாக்கின்றனர்; சுவடிகளை படம் எடுத்து மைக்ரோ பிலிமாகவும் சேகரிக்கின்றனர். டிஜிட்டல் முறையில் ஸ்கேன் செய்து, இணையத்தில் வெளியிட தமிழக அரசு ரூ.4.50கோடி ஒதுக்கியுள்ளது.
பாரதிதாசன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆய்வாளர் ஜெ.மோகன் கீழ்த்திசை நூலகத்தை தொடர்ந்து பயன்படுத்திவருகிறார். ”கடந்த ஐந்து ஆண்டுகளாக சமஸ்கிருத இலக்கணம் தொடர்பான ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளேன். இந்த நூலகத்தில் உள்ள சுவடிகள் வேறுஎங்கும் கிடைக்கப் பெறாதவையாக உள்ளன. சாப்திகசிந்தாமணி என்ற சுவடியில் உள்ள தகவல்கள் எனது ஆய்வுக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது,” என்கிறார் மோகன்.
ஓலைச்சுவடி நூலகத்திற்கு வரும் இளைஞர்கள் பலர் மருத்துவ குறிப்புக்கள், ஜோதிடம் மற்றும் கணிதம் தொடர்பான தகவல்களை கேட்பதாக நூலகர்கள் கூறுகின்றனர். லண்டன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மொழியியல் ஆராய்ச்சியாளர்கள், சௌதி அரேபியாவைச் சேர்ந்த வலாற்று ஆய்வாளர், சீனா, ஜப்பான், இலங்கை, சிங்கப்பூர் போன்ற நாடுகளில் இருந்து ஆசிரியர்கள் என பலரும் இந்த நூலகத்தை பற்றிய தங்களது கருத்துக்களை பார்வையாளர்கள் குறிப்பேட்டில் பதிவு செய்துள்ளனர். -BBC_Tamil