மதுரைக்கு எய்ம்ஸ் மருத்துவமனை: கோரிக்கை வென்றது எப்படி?

தமிழகத்திற்கு அறிவிக்கப்பட்ட அகில இந்திய மருத்துவ விஞ்ஞானக் கழக மருத்துவமனை (எய்ம்ஸ்) மதுரையில் அமையும் என தமிழக முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்திருக்கிறார். சுமார் 20 ஆண்டு கால கோரிக்கைக்குப் பிறகு மதுரையில் இந்த மருத்துவமனை அமையவுள்ளது.

தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் பழனிச்சாமி, “செங்கல்பட்டு, மதுரை, செங்கிப்பட்டி (தஞ்சாவூர்), பெருந்துறை, புதுக்கோட்டை என இதற்கென ஐந்து இடங்கள் பார்வையிடப்பட்டன. தற்போது மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. 200 ஏக்கரில் மதுரைக்கு அருகில் உள்ள தோப்பூரில் இந்த மருத்துவமனை அமையும். 750 படுக்கை வசதிகள் இதில் இருக்கும். 100 இளநிலை மருத்துவப் படிப்புக்கான இடங்களும் இதன் மூலம் உருவாக்கப்படும். 60 செவிலியர் படிக்கும் வசதியும் ஏற்படுத்தப்படும். இந்த மருத்துவமனை 1,500 கோடி ரூபாய் மதிப்பீட்டில் உருவாக்கப்படும்” என்று தெரிவித்தார்.

இந்தியா சுதந்திரம் பெற்றவுடன், தெற்காசியாவிலேயே மிகச் சிறந்த மருத்துவ வசதியையும் கல்வியையும் தரும் அமைப்பு ஒன்றை உருவாக்க விரும்பிய முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு, நியூசிலாந்து அரசின் நிதியுதவியுடன் முதலாவது எய்ம்ஸ் மருத்துவமனைக்கு 1952ல் அடிக்கல் நாட்டினார். 1956ல் நாடாளுமன்றத்தில் இயற்றப்பட்ட சட்டத்தின் மூலம் ஒரு சுயேச்சையான நிறுவனமாக எய்ம்ஸ் செயல்பட ஆரம்பித்தது.

aiims

இதற்குப் பல ஆண்டுகளுக்குப் பிறகு, நாடு முழுவதும் எய்ம்ஸ் போன்ற மருத்துவமனைகளை உருவாக்க வேண்டுமென முடிவெடுக்கப்பட்டு, மத்தியப் பிரதேசம், ஒடிஷா, ராஜஸ்தான், பிஹார், சதீஸ்கர், உத்தராகண்ட் ஆகிய இடங்களில் 2012ஆம் ஆண்டில் எய்ம்ஸ் மருத்துவமனைகள் துவக்கப்பட்டன.

ஆனால், 90களின் பிற்பகுதியிலிருந்தே தமிழ்நாட்டில் ஒரு எய்ம்ஸ் மருத்துவமனையை அமைக்க வேண்டுமென்ற கோரிக்கைகள் வலுப்பெற்றன. அப்படி அமைக்கப்படும் மருத்துவமனையை தென்மாவட்டமான மதுரையில் அமைக்க வேண்டுமென சிபிஎம்மைச் சேர்ந்த அப்போதைய மதுரை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பி. மோகன், நாடாளுமன்றத்தில் குரல்கொடுத்து வந்தார்.

“மோகன் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த அந்த பத்தாண்டுகளில் தென் மாவட்டங்களின் தொழில் வளர்ச்சி, மருத்துவ வசதி தொடர்பாக நாடாளுமன்றத்தில் பேசும்போதெல்லாம் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனையை அமைப்பது தொடர்பாக கேள்வியெழுப்பியுள்ளார். அதன் பிறகு, மதுரையின் அப்போதைய முக்கியப் பிரமுகர்களையெல்லாம் அழைத்து சென்று, மத்திய அமைச்சர்களைச் சந்திக்க வைத்து இது தொடர்பான கோரிக்கையை வலியுறுத்தியிருக்கிறார்” என்கிறார் சி.பி.எம்மின் மாநிலக் குழு உறுப்பினரும் எழுத்தாளருமான சு. வெங்கடேசன்.

அந்த காலகட்டத்தில் தென் மாவட்டங்களில் எய்ம்ஸ் என்றால் பெரிதாக யாருக்கும் தெரியாது; அதனை பொதுவெளியில் முதலில் பேசியது பி. மோகன்தான் என்கிறார் வெங்கடேசன். மதுரையில் இரண்டாவது கேந்திரிய வித்யாலயா பள்ளி, சென்னை – மதுரை இடையே இரண்டாவது ரயில் வழித் தடம், மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை ஆகிய கோரிக்கைகளை அவர் தொடர்ந்து வலியுறுத்திவந்தார் என்று சொல்லும் சு. வெங்கடேசன், எய்ம்ஸ் மதுரைக்கு அறிவிக்கப்பட்டிருப்பதன் மூலம் தற்போது இந்த மூன்று கோரிக்கைகளுமே நிறைவேற்றப்பட்டுவிட்டன என்கிறார்.

1999லிருந்தே எய்ம்ஸ் மருத்துவமனைக்கான கோரிக்கைகள் வைக்கப்பட்டுவந்தாலும் 2015ஆம் ஆண்டு பட்ஜெட் உரையில்தான் அப்போதைய நிதியமைச்சர் அருண் ஜேட்லி தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என்ற திட்டத்தை அறிவித்தார்.

அருண் ஜேட்லி

ஆனால், மத்திய அரசின் அறிவிப்புக்குப் பிறகும் எந்த இடத்தில் இந்த மருத்துவமனை அமையவிருக்கிறது என்ற விவரம் வெளியாகவில்லை. இந்த நிலையில், முதல்வராக இருந்த ஜெயலலிதா மறைந்துவிட, எய்ம்ஸ் மருத்துவமனையை தஞ்சாவூர், புதுக்கோட்டை, செங்கல்பட்டு, திருச்சி பகுதிகளில் அமைக்க பல்வேறு முனைகளிலிருந்து அழுத்தம் தரப்பட்டது.

இது தொடர்பாக செய்தியாளர் சந்திப்புகளில் பேசிய மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன், தமிழக அரசால்தான் இந்தத் திட்டம் தாமதமாவதாகத் தெரிவித்தார். “மத்திய அரசு எய்ம்ஸ் மருத்துவமனையை அறிவித்து மூன்று ஆண்டுகள் ஆகின்றன. ஆளாளுக்கு ஒவ்வொரு கருத்தைச் சொல்வதால் முடிவு ஏற்படவில்லை” என குற்றம்சாட்டினார் பொன். ராதாகிருஷ்ணன். ஆனால், தமிழக அரசால் தாமதம் ஏற்படவில்லையென மாநில சுகாதாரத் துறை செயலர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துவந்தார்.

முடிவில், தமிழக அரசு ஒதுக்கீடு செய்த பல்வேறு இடங்களையும் பார்வையிட்ட மத்திய குழு, மதுரையில் இந்த மருத்துவமனையை அமைக்க முடிவுசெய்துள்ளது.

All India Institute Of Medical Sciences

“இது எங்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாட்டில் எய்ம்ஸ் மருத்துவமனை வேண்டும் என்ற குரல் எழும்புவதற்கு முன்பாகவே, மதுரையில் இந்த மருத்துவமனையை அமைக்க வேண்டுமெனக் கோரிவந்தோம். 2015ல் தமிழ்நாட்டோடு சேர்த்து எய்ம்ஸ் அறிவிக்கப்பட்ட பல மாநிலங்களில் மருத்துவமனை கட்டடங்கள் கட்டி முடிக்கப்பட்டுவிட்டன. தமிழகத்திற்கு தாமதமாகத்தான் அறிவிக்கப்பட்டிருக்கிறது என்றாலும், இப்போதாவது வந்திருப்பது பெரும் மகிழ்ச்சி” என்கிறார் மதுரையில் உள்ள தமிழ்நாடு தொழில் வர்த்தக சபையின் முதுநிலை தலைவர் ரத்தினவேல் பாண்டியன். தமிழகத்தின் மூன்றில் ஒரு பங்கு மக்கள் தொகை இதனால் பலன் பெரும் என்கிறார் அவர்.

இனி இதற்கென மாநில அரசு சில வசதிகளைச் செய்துதர வேண்டியிருக்கும். முதலாவதாக தேசிய நெடுஞ்சாலையிலிருந்து மருத்துவமனை அமையும் இடத்திற்கு நான்கு வழிச்சாலை அமைத்துத் தர வேண்டும். போதுமான தண்ணீர் கிடைப்பதை உறுதிசெய்வதோடு, இருவேறு இடங்களிலிருந்து மருத்துவமனைக்கு 20 மெகா வாட் மின்சாரம் தடையின்றி கிடைக்கச் செய்ய வேண்டும். மருத்துவமனை அமையவிருக்கும் நிலத்தை எவ்வித நிதியும் பெறாமல் சுகாதாரத்துறை அமைச்சகத்திடம் ஒப்படைக்க வேண்டும்.

கடந்த பிப்ரவரி மாதம் மத்திய அரசின் நிதி ஆயோக் அமைப்பு வெளியிட்ட சுகாதார தரவரிசைப் பட்டியலில் இந்தியாவில் மூன்றாவது இடத்தில் தமிழ்நாடு உள்ளது. தேசிய அளவில் 10,000 பேருக்கு ஆறு மருத்துவர்களே உள்ள நிலையில், தமிழகத்தில் 10,000 பேருக்கு எட்டு மருத்துவர்கள் உள்ளனர். -BBC_Tamil

TAGS: