இந்தியாவின் உதவியை நாடும் கொரியா..

கொரிய தீபகற்பத்தில் அமைதியை நிலைநாட்ட இந்தியாவின் உதவி அவசியம் என தென்கொரிய துணை வெளியுறவு மந்திரி இன்று புதுடெல்லியில் தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் சிங்கப்பூரில் நிகழ்ந்த டொனால்ட் டிரம்ப் மற்றும் கிம் ஜாங் அன் சந்திப்பின் போது அணு ஆயுத ஒழிப்பு தொடர்பான ஒப்பந்தம் கையெழுத்தானது. அதன் பிறகு கொரிய தீபகற்பத்தில் பல ஆண்டுகளாக நிலவிவந்த பதற்றமான சூழ்நிலை தற்போது ஓரளவு தணிந்துள்ளது.

இந்நிலையில், அரசுமுறை பயணமாக இந்தியா வந்துள்ள தென்கொரிய துணை வெளியுறவு மந்திரி என்னா பார்க், இன்று செய்தியாளர்களிடம் உரையாடினார். அப்போது அவர் குறிப்பிட்டுள்ளதாவது :-

தென்கொரிய அதிபர் மூன் ஜே-இன் அடுத்த மாத தொடக்கத்தில் இந்தியா வர உள்ளார். இந்த பயணத்தின் போது இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடன் நடைபெற உள்ள பேச்சுவார்த்தையின் போது, இரு நாடுகளுக்கு இடையேயான உறவுகளை வலுப்படுத்துவது தொடர்பாக அவர் விவாதிக்க உள்ளார்.

மேலும், கொரியா தீபகற்பத்தில் அமைதியை ஏற்படுத்தும் முயற்சியில் தென்கொரியா ஈடுபட்டு வருகிறது, இது சாதாரணமான ஒன்றல்ல மிகவும் கடினமான ஒரு முயற்சியாகும். இதற்கு இந்தியாவின் உதவியும் தேவைப்படுகிறது.

இந்தியா உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு, சர்வேதேச நாடுகளிடையே இந்தியாவிற்கு என தனி செல்வாக்கு உள்ளது. அதை பயன்படுத்தி சிங்கப்பூர் சந்திப்பு ஒப்பந்தம் வெற்றி பெறவும், அணு ஆயுத அச்சுறுத்தல் இல்லாத அமைதியான கொரிய தீபகற்பத்தை உருவாக்கவும் இந்தியா முன்வர வேண்டும்.

அணு ஆயுத ஒழிப்பு ஒப்பந்தத்தை நிறைவேற்றும் வகையில் வடகொரியாவை இணங்கச்செய்ய இந்தியா முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

-athirvu.in

TAGS: