கோவை : சேலம் – சென்னை 8 வழி பசுமை வழிச்சாலை திட்டத்தால் 72,273 விவசாயிகள் பாதிகப்படுவார்கள் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் கோவையில் பத்திரிகையாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், சேலம் – சென்னை 8 வழி பசுமை வழிச்சாலை திட்டத்திற்காக நிலம் கையகப்படுத்தும் பணி தொடர்ந்து வருகிறது.
இந்த திட்டத்தால் 72,273 விவசாயிகள் பாதிக்கப்படுகிறார்கள், ஒரு லட்சம் மரங்கள் வெட்டப்படுகின்றன. பல ஆயிரம் ஏக்கர் விளை நிலங்கள் பாதிக்கப்படுகின்றன. இதுகுறித்து விவசாயிகளிடம் அரசு எந்த ஒரு கருத்துக் கேட்புக் கூட்டத்தையும் நடத்தவில்லை.
மாறாக இந்த திட்டம் குறித்து எதிர்த்துக் கேள்வி கேட்பவர்களை அரசு தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி கைது செய்கிறது. அவர்கள் மீது கொலை, சதி வழக்குகள் பதியப்படுகின்றன.
பியூஷ் மனுஷ், வளர்மதி உள்ளிட்ட சமூக ஆர்வலர்கள் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர். அரசு கொண்டுவரும் திட்டங்களின் மீது கருத்து கூறும் குடிமக்களை, சமூகவிரோதிகள் என விமர்சிக்கிறார்கள். மாற்றுக்கருத்து கூறும் குடிமக்கள் சமூகவிரோதிகளாக சித்தரிக்கப்படுகிறார்கள்.
ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதில் தமிழக அரசு இரட்டை வேடம் போடுகிறது. தமிழகத்தில், மிக மோசமான நிலையில் நிர்வாகம் சீர்கெட்டு கிடக்கிறது. ஊடகங்கள் அச்சுறுத்தப்படுகின்றன என்று தெரிவித்துள்ளார்.