திரிபுரா மாநிலத்தில், ரயில் விபத்தை தடுத்து நிறுத்திய பழங்குடியின சிறுமிக்கு நாடு முழுவதிலுமிருந்து பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.
திரிபுரா மாநிலம், தன்சேரா பகுதியில் சுமதி(9) என்ற பழங்குடியின சிறுமி தனது பெற்றொருடன் வசித்து வருகிறார். இப்பகுதியில் பெய்த பலத்த மழையின் காரணமாக மண்சரிவு ஏற்பட்டு, தண்டவாளம் அபாயகரமான நிலையில் இருந்துள்ளது. இந்த நிலையில் கடந்த 15 ஆம் தேதி, தரம் நகரிலிருந்து தன்சேரா வழியாக 2000 பேருடன், பயணிகள் ரயில் ஒன்று அகர்தலா நோக்கி வந்து கொண்டிருந்தது.
ரயில் வருவதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த சிறுமி சுமதி, உடனடியாக தன் கையிலிருந்து சட்டையைக்காட்டி ரயில் வருவதை தடுத்து நிறுத்தியுள்ளார். சிறுமி சுமதியின் இந்த சாமர்த்தியத்தால் மாபெரும் விபத்து தவிர்க்கப்பட்டு, 2000 பயணிகள் உயிரோடு காப்பாற்றப்பட்டனர்.
இதனையடுத்து சிறுமியை பெருமைப்படுத்தும் விதமாக திரிபுரா மாநில சட்டமன்ற உறுப்பினர்கள் அவருக்கு ரொக்கப் பரிசுகள் வழங்கி பாராட்டி வருகின்றனர். அந்த வகையில் திரிபுரா மாநில சுகாதாரத்துறை அமைச்சர் சுதிப்ராய் பர்மன், சிறுமியை தனது வீட்டிற்கு அழைத்து விருந்தளித்து கெளரவப்படுத்தியுள்ளார். இந்த நிலையில் சிறுமி சுமதிக்கு, உதவும் நோக்கில் அவரது தந்தைக்கு ரயில்வே துறையில் பணி வழங்கப்பட்டுள்ளது.
-athirvu.in