கேந்திரபரா, ஒடிசாவின் கேந்திரபரா மாவட்டத்தில் வசித்து வருபவர் சரோஜ் காந்தா பிஸ்வால் (வயது 33). பள்ளி கூடம் ஒன்றின் ஆசிரியரான இவருக்கும், ஆதம்பூர் நகரில் உள்ள ரேஷ்மிரேகா பைடாலா என்ற பெண் ஒருவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. மணமகளும் ஆசிரியை பணியில் உள்ளார்.
இந்த நிலையில், திருமணத்திற்கு வரதட்சணை எதுவும் வேண்டாம் என கூறியுள்ள சரோஜ் அதற்கு பதிலாக 1,001 பழமர கன்றுகளை தர வேண்டும் என மணமகள் வீட்டாரிடம் கேட்டுள்ளார். இதற்கு அவர்களும் சம்மதித்து உள்ளனர்.
இதுபற்றி சரோஜ் கூறும்பொழுது, திருமணத்தில் வரதட்சணை வாங்கும் நடைமுறைக்கு எதிரானவன் நான். அதனுடன் எனது குழந்தை பருவ நாட்களில் இருந்தே இயற்கையின் மீது பற்று கொண்டவன். அதனாலேயே கனி தரும் 1,001 மர கன்றுகளை தரும்படி கேட்டு கொண்டேன் என கூறியுள்ளார்.
இந்த திருமணம் நடந்தபொழுது இசை வாத்தியங்களோ அல்லது பட்டாசு வெடிப்பதோ நடைபெறவில்லை. மர கன்றுகளே திருமண பரிசாக மணமகனுக்கு வழங்கப்பட்டன என மணமகள் வீட்டை சேர்ந்த ரஞ்சன் பிரதான் என்பவர் கூறியுள்ளார்.
-dailythanthi.com