சென்னை: தமிழகத்தில் தினமும் 47 போராட்டங்கள் நடக்கிறது என்று தமிழக அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது.
கடந்த சில மாதங்களாக தமிழகத்தில் அடிக்கடி போராட்டம் நடக்கிறது. ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு பின் மீத்தேன் போராட்டம், ஹைட்ரோ கார்பன் போராட்டம், காவிரி போராட்டம், ஐபிஎல் போராட்டம், ஸ்டெர்லைட் போராட்டம், சாகர் மாலா போராட்டம், இப்போது சேலம் போராட்டம் என்று வரிசையாக மக்கள் தங்கள் சுயஉரிமைக்காக போராடிக்கொண்டு இருக்கிறார்கள்.
ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு பின் தமிழகத்தில் நடக்கும் போராட்டங்களை அரசு எப்படியாவது முடக்க முயற்சி செய்து வருகிறது. மெரினாவிற்கு சுவர் எழுப்பி பூட்டு போடாதது மட்டுமே குறை. எல்லாவற்றிக்கும் மேலாக, ஸ்டெர்லைட் போராட்டத்தில் துப்பாக்கி சூடு நடத்தி, 13 பேர் கொலை செய்யப்பட்ட கொடூரமும் நடந்தது.
இந்த நிலையில் இந்த போராட்டம் குறித்து தமிழக அரசு அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் தினமும் 47 போராட்டங்கள் நடக்கிறது என்று தமிழக அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது.
சட்டசபையில் வெளியிடப்பட்ட அரசின் கொள்கை விளக்க குறிப்பில் இந்த தகவல் இடம்பெற்றுள்ளது. அதன்படி தமிழகத்தில் தினமும் 47 போராட்டங்கள் நடைபெறுகிறது. நாடு முழுவதும் நடைபெறக்கூடிய போராட்டங்களில் 15% தமிழகத்தில் நடக்கிறது.
போராட்டக்காரர்களை கட்டுப்படுத்த போலீஸ் பலப்பிரயோகம் செய்வது தமிழகத்தில் குறைவு. மற்ற மாநிலங்களில் அடிக்கடி துப்பாக்கி சூடு நடக்கிறது. ஆனால் தமிழகத்தில் லத்தி தாக்குதலும், கண்ணீர் புகை குண்டுகளும் மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. அதன்படி இந்திய அளவில் தமிழகத்தில் 0.5% மட்டுமே பலப்பிரயோகம் நடக்கிறது, என்று கூறப்பட்டுள்ளது.