பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நாடுகளில் இந்தியா முதல் இடம் : தேசிய பெண்கள் ஆணையம் மறுப்பு

புதுடெல்லி, இங்கிலாந்தை தலைமையிடமாக கொண்ட ‘தாம்சன் ராய்டர்ஸ் பவுண்டேஷன்’ என்கிற அமைப்பு பெண்களுக்கான பாதுகாப்பு குறித்து உலகளவில் ஓர் ஆய்வை மேற்கொண்டது.

இது தொடர்பாக ஐரோப்பா, ஆப்பிரிக்கா, அமெரிக்கா, தென்கிழக்கு ஆசியா, தெற்கு ஆசியா மற்றும் பசிபிக் நாடுகளைச் சேர்ந்த 550 பேரிடம் கருத்து கேட்கப்பட்டது.

தொலைபேசி வாயிலாகவும், இணையதளம் மூலமும் கடந்த மார்ச் 26-ந் தேதி முதல் மே 4-ந் தேதி வரை இந்த ஆய்வு நடந்தது.

இந்த ஆய்வின் முடிவுகளை ‘தாம்சன் ராய்டர்ஸ் பவுண்டேஷன்’ நிறுவனம் நேற்று வெளியிட்டது.

அதில், உலகிலேயே பெண்களுக்கு பாதுகாப்பற்ற மற்றும் ஆபத்தான முதல் நாடு இந்தியா தான் என்கிற அதிர்ச்சி தகவல் வெளியிட்டது.

அதாவது, பெண்களுக்கு எதிரான வன்முறை, பாலியல் பலாத்காரம், வீட்டுவேலைக்காகக் கடத்துதல், கொத்தடிமையாக நடத்துதல், கட்டாயத்திருமணம், பாலியல் தொழிலில் வலுக்கட்டாயமாக ஈடுபடுத்துதல் போன்றவற்றில் இந்தியா முதல் இடத்தில் இருப்பதாக அந்த ஆய்வு அறிக்கை தெரிவிக்கிறது.

அதுமட்டுமல்லாமல், கலாசாரம் மற்றும் பண்பாடு ரீதியாகவும் பெண்கள் மிக மோசமான பாதிப்புக்கு ஆளாகிறார்கள் என்றும் திராவகம் வீச்சு, உடல் உறுப்புகளை சிதைத்தல், குழந்தை திருமணம், உடல்ரீதியாகத் துன்புறுத்துதல் போன்ற கொடூர சம்பவங்களும் இந்தியாவில் தான் அதிகமாக நடப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இந்தநிலையில், இது குறித்து தேசிய பெண்கள் ஆணைய தலைவர் ரேகா சர்மா, கூறுகையில்,

வெறும் 25 பெண்களிடம் மட்டுமே ஆய்வை நடத்தி விட்டு இவ்வாறு கூறுவதில்  எனக்கு உடன்பாடில்லை. வழக்குப்பதிவு எண்ணிக்கைகள் அதிகமாக உள்ளது என்ற போதிலும் முதலிடத்திற்கு செல்லும் அளவிற்கு குற்றங்கள் அதிகரிக்கவில்லை. அறிக்கையில் குறைபாடுகள் உள்ளது.

-dailythanthi.com

TAGS: