சமீபத்தில் தேசிய மற்றும் சர்வதேச அளவில் தலைப்பு செய்திகளை ஆக்கிரமித்த இந்தியாவின் தண்ணீர் பிரச்சனை பற்றிய அறிக்கை குறித்து அதனை வெளியிட்ட நிதி ஆயோக் அமைப்பின் துணைத் தலைவரான ராஜிவ் குமார் ஊடகங்களில் முதல்முறையாக பிபிசியிடம் பேசினார்.
இன்னும் இரண்டே ஆண்டுகளில், அதாவது வரும் 2020ஆம் ஆண்டுக்குள் இந்தியாவிலுள்ள 21 நகரங்களின் நிலத்தடி நீர் முற்றிலும் வற்றிவிடும் என்ற அதிச்சிகர தகவலை அது வெளியிட்டிருந்தது.
இந்த பிரச்சனையின் வீரியம் குறித்து பேசிய அவர், ஒவ்வோர் ஆண்டும் தண்ணீர் பற்றாக்குறை நிலவினாலும், ஒரு சமூகமாக நாம் எதிர்கொண்டுள்ள பிரச்சனைகள் குறித்து யோசிப்பதில்லை என்றும், நாம் எதிர்கொண்டுள்ள சவாலின் வீரியத்தை உணர்த்துவதே இந்த அறிக்கையின் பிரதான முயற்சி என்றும் குறிப்பிட்டார்.
தண்ணீர் மேலாண்மையில் மாநிலங்களின் செயற்பாட்டை மையமாக கொண்டு இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. 24 மாநிலங்களை உள்ளடக்கிய இந்த அறிக்கையில் குஜராத் முதலிடத்தை வகிக்கிறது. அதற்கடுத்தடுத்த இடங்களை மத்திய பிரதேசம் மற்றும் ஆந்திர பிரதேசம் ஆகியவை பிடித்துள்ளன.
- “இரண்டே ஆண்டுகளில் சென்னையில் நிலத்தடி நீர் முற்றிலுமாக வற்றிவிடும்”
- தண்ணீருக்காக ’20 கோடி’ மணி நேரம் செலவிடும் பெண்கள்
இந்த பட்டியலில் குஜராத் முதலிடத்தை பிடித்ததற்கான காரணம் குறித்து ராஜிவிடம் கேட்டபோது, “நீர் சேகரிப்பு, தடுப்பணைகள், நீர்த்தேக்கங்கள் போன்றவற்றை ஏற்படுத்தி நிலத்தடி நீர் மட்டத்தை அதிகரித்துள்ளதன் மூலம் குஜராத் நீர் மேலாண்மையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடைந்துள்ளது. மேலும், நாட்டிலேயே முதல்முறையாக விவசாயத்துக்காக பயன்படுத்தப்படும் நீருக்கு பணம் செலுத்தும் முறையை உருவாக்கியுள்ளதன் மூலம் தண்ணீர் பயன்பாட்டை சிக்கனப்படுத்தும் நடவடிக்கையை எடுத்துள்ளனர்” என்று அவர் விவரித்தார்.
இந்தாண்டு குஜராத்தில் கடுமையான தண்ணீர் பஞ்சம் நிலவி வரும் சூழ்நிலையில், அம்மாநிலம் இந்த பட்டியலில் முதலிடத்தை பெற்றுள்ளது பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.
இதற்கு பதிலளித்த ராஜிவ், பொய்த்துப்போன பருவ மழையே இதற்கான முக்கிய காரணமாக இருக்கின்றபோதிலும், நீர் மேலாண்மையில் குஜராத் செய்துள்ள விடயங்கள் இந்த பட்டியலில் அது முதன்மை இடத்தை பெறுவதற்கு காரணமாக அமைந்தது என்றார்.
இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் மற்றும் முடிவுகளின் நம்பகத்தன்மை குறித்து கேள்வியெழுப்பியபோது, மாநில அரசுகளால் திரட்டப்பட்ட தரவுகளை பகுப்பாய்வு செய்த இரண்டு தனிப்பட்ட முகமைகளின் வழியே இந்த முடிவுகள் தெரியவந்துள்ளதாகவும், மேலும், அந்த தரவுகள் தவறானவைகளாக இருப்பதற்கு அதிகளவிலான சாத்தியக்கூறு இருந்தாலும், ஏதோவொரு வகையில் தரவுகளை திரட்ட தொடங்கி இதுபோன்ற முடிவுகளை வெளியிடுவது அவசியம் என்றும் ராஜிவ் கூறுகிறார்.
நிதி ஆயோக் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள சில முக்கியமான விடயங்கள்:
- நாட்டிலுள்ள தண்ணீர் பிரச்சனை இதே வீதத்தில் தொடர்ந்தால், வரும் 2030ஆம் ஆண்டில் நாட்டில் 40 சதவீத மக்களுக்கு தண்ணீரே கிடைக்காது.
- தற்போது 600 மில்லியன் இந்தியர்கள் தண்ணீர் பற்றாற்குறையின் காரணமாக அதிகபட்ச அழுத்தத்தில் சிக்கியுள்ளனர்.
- நாட்டிலுள்ள 70 சதவீத தண்ணீர் கலப்படமடைந்துள்ளது மற்றும் தூய்மையான தண்ணீரை பெறுவதற்கான போதிய வாய்ப்பில்லாமையால் ஒவ்வோர் ஆண்டும் இரண்டு லட்சம் மக்கள் உயிரிழந்து வருகின்றனர்.
- 22 நாடுகளை கொண்ட உலகளவிலான தண்ணீரின் தரப் பட்டியலில் இந்தியா 120வது இடத்தை வகிக்கிறது.
- சென்னை, புதுடெல்லி, பெங்களூரு மற்றும் ஹைதராபாத் உள்ளிட்ட 21 இந்திய நகரங்களில் இன்னும் இரண்டாண்டுகளில், அதாவது 2020ஆம் ஆண்டில் நிலத்தடி நீர் முழுவதுமாக வற்றிவிடும்; இதன் காரணமாக 100 மில்லியன் மக்களின் வாழவாதாரம் கடுமையாக பாதிப்புக்குள்ளாகும்.
செயல்திறன் படைத்த அமைப்பு
பிரிட்டன்-இந்தியா நாடுகளுக்கிடையே சமீபத்தில் நடந்த கூட்டத்தில் பேசிய ராஜிவ், நிதி ஆயோக் அமைப்பை ‘செயல்திறன் படைத்த அமைப்பு’ என்று குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில், நீர் நெருக்கடி பற்றிய அறிக்கையை வெளியிட்ட பிறகு அதுசார்ந்து நிதி ஆயோக் அமைப்பு எடுக்கவுள்ள நடவடிக்கைகள் குறித்து கேட்டதற்கு, இந்த பட்டியலில் முதன்மையான இடத்தை பெற்ற மாநிலங்கள் கடைபிடித்த படிநிலைகள் குறித்த கையேட்டை அனைத்து மாநிலங்களுக்கும் அனுப்பவுள்ளதாக ராஜிவ் கூறினார்.
- நீர் பற்றாக்குறையை தவிர்க்க அணை கட்டும் 71 வயது மூதாட்டி
- கேப் டவுன் ‘ஜிரோ டே’: தைப்பூசத்தை முன்னிட்டு தண்ணீர் வழங்கும் தமிழர்கள்
திட்டக் குழுவை கலைத்துவிட்டு, கடந்த 2015ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டதே நிதி ஆயோக் அமைப்பாகும்.
திட்டக் குழுவுக்கும், நிதி ஆயோக் அமைப்புக்குமிடையே உள்ள வேறுபாடுகள் குறித்து கேட்டபோது, நிதி ஆயோக் அமைப்பு திட்டத்தை வகுத்து நேரடியாக செயற்படுத்த முடியுமென்றும், ஆனால் ஐந்தாண்டு திட்டங்களை வகுக்கும் திட்டக் குழு அவற்றை செயற்படுத்துவது கடினம் என்றும் கூறுகிறார்.
ஒரே நேரத்தில் சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற தேர்தல்கள்
நாட்டில் ஒரே நேரத்தில் அனைத்து மாநிலங்களின் சட்டமன்ற தேர்தல்களையும், நாடாளுமன்ற தேர்தலையும் நடத்துவதற்கு சென்ற ஆண்டு நிதி ஆயோக் அமைப்பு பரிந்துரை செய்திருந்தது.
மேலும், சமீபத்தில் இதுகுறித்து பரந்துபட்ட விவாதத்தை முன்னெடுக்க வேண்டுமென்று பிரதமர் நரேந்திர மோதி வலியுறுத்தியிருந்தார்.
சட்டமன்றங்களுக்கும், நாடாளுமன்றத்துக்கு இந்தாண்டு டிசம்பர் மாதம் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தப்படும் என்று பரவி வரும் தகவல் குறித்து அவரிடம் கேட்டதற்கு, இது முக்கியமான அரசியல் சார்ந்த விடயம் என்று கூறி பதிலளிப்பதற்கு மறுப்புத் தெரிவித்துவிட்டார்.
ஆனால், சட்டமன்ற, உள்ளாட்சி, இடைத்தேர்தல் மற்றும் நாடாளுமன்ற தேர்தல் போன்ற பல விதமான தேர்தலைகளை நடத்துவதால் வாக்காளர்களின் பங்கேற்பு குறைவதற்கு மாற்றாக ஒருங்கிணைந்த சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற தேர்தல்கள் இருக்குமென்று தான் தனிப்பட்ட முறையில் நினைப்பதாக அவர் கூறினார். -BBC_Tamil