தொடர் சரிவில் இந்திய ரூபாய்: யாருக்கு என்ன பாதிப்பு?

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு மிகவும் வீழ்ச்சி அடைந்து, முதன் முறையாக 69 ரூபாயை விட குறைந்துவிட்டது.

இந்த ஆண்டில் மட்டும் ரூபாயின் மதிப்பு 8% குறைந்துவிட்டது. சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை அதிகரிப்பு மற்றும் அமெரிக்காவில் அதிகரித்த வட்டி விகிதம் ரூபாயின் வீழ்ச்சிக்கு காரணம்

2013 ஆகஸ்ட், இடம் – நாடாளுமன்றம், தலைவர் – சுஷ்மா ஸ்வராஜ்

“நாட்டின் மதிப்புடன் தொடர்புடையது நாணயம், அது மட்டுமல்ல, நாணயத்தின் மதிப்பு சரிவடையும்போது, நாட்டின் நன்மதிப்பும் வீழ்ச்சியடைகிறது …”

2013ஆம் ஆண்டில் மக்களவை உறுப்பினராக இருந்த சுஷ்மா ஸ்வராஜ் தற்போது வெளியுறவுத்துறை அமைச்சர். அப்போது அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து குறைந்து 68 ரூபாயாக வீழ்ந்தபோது, அப்போதைய நிதியமைச்சர் ப.சிதம்பரம் கொடுத்த விளக்கத்தில் திருப்தியடையாத சுஷ்மா, பிரதமர் மன்மோகன் சிங் இதற்கு பதிலளிக்கவேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

2013 ஆகஸ்ட் மாதம், இடம் – அகமதாபாத், தலைவர் – நரேந்திர மோதி

“இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து வீழ்ச்சியடைந்து வருகிறது. சில சமயங்களில், விரைவில் வீழ்வது யார் என்று மத்திய அரசுக்கும், ரூபாய்க்கும் இடையில் போட்டி நடக்கிறதோ என்று தோன்றுகிறது. நாடு விடுதலை அடையும்போது, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பும் ஒரு ரூபாயாக இருந்தது. அடல் பிஹாரி வாஜ்பாய் முதன்முறையாக அரசு அமைத்தபோது, ரூபாயின் மதிப்பு 42 ரூபாயாக இருந்தது. அவரது ஆட்சியின் இறுதியில், 44 ரூபாய் என்ற அளவிலிருந்தது. ஆனால் பொருளாதார நிபுணர் ஒருவர் பிரதமராக பதவி வகிக்கும் தற்போதைய ஆட்சியில் அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 60 ரூபாயாக குறைந்துவிட்டது.”

ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு, நரேந்திர மோதி குஜராத் மாநில முதலமைச்சராக இருந்தபோது அவர் இவ்வாறு உரையாற்றினார். ஆனால் பிறகு அரசியலில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டன. பொருளாதார நிலை பல ஏற்ற இறக்கங்களைக் கண்டது. ஆனால் காங்கிரஸ் ஆட்சியில் ரூபாயின் மதிப்பு வீழ்ச்சியடைந்தபோது மன்மோகன் அரசை சுற்றி வளைத்து கேள்வி கேட்ட தலைவர்கள், இப்போது அதே கேள்வி தங்களை நோக்கி திரும்பும்போது அமைதி காக்கிறார்கள்.

2014இல் நரேந்திர மோதி பதவியேற்றபோது டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு கிட்டத்தட்ட 60 ரூபாய் என்ற அளவில் இருந்தது. ஆனால் அதற்கு பிறகு ரூபாயின் மதிப்பில் அவ்வப்போது ஏற்றமும் இறக்கமும் தொடர்ந்து காணப்பட்டாலும், அண்மையில் கடந்த 15 மாதத்தின் மிகவும் குறைந்த நிலையை எட்டிவிட்டது ரூபாயின் மதிப்பு. கடந்த ஒரு மாதத்தில் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 2 ரூபாய் 29 காசுகள் குறைந்துள்ளது.

வியாழனன்று ரூபாயின் மதிப்பு 69 ரூபாய் 9 காசுகளாக இருந்தது. இதுதான் வரலாற்றிலேயே ரூபாயின் மதிப்பில் உச்சபட்ச வீழ்ச்சி.

இதற்கு முன்பு ரூபாயின் மதிப்பு மிகவும் குறைவானதும் மோதி அரசின் ஆட்சியில்தான். 2016, நவம்பரில் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 68.80 என்ற அளவுக்கு குறைந்தது.

அமெரிக்க டாலருக்கு நிகரான மதிப்பு, இந்திய ரூபாயில் மட்டுமா குறைவை ஏற்படுத்தியிருக்கிறதா? மலேசிய ரிங்கிட், தாய்லாந்தின் பாட் உட்பட பல ஆசிய நாடுகளின் நாணயமும் இந்த ஆண்டில் இறக்கத்தை கண்டுள்ளது.

ரூபாயின் கதை

ஒரு காலகட்டத்தில் இந்திய நாணயம், அமெரிக்க நாணயத்துடன் வலுவாக போட்டி போட்டது. 1947இல் இந்தியா சுதந்திரமடைந்தபோது டாலரும், ரூபாயும் சமமாக இருந்தன. அப்போது இந்தியாவிற்கு கடன் ஏதும் இல்லை. பிறகு 1951இல் நாட்டில் முதல் ஐந்தாண்டு திட்டம் தொடங்கப்பட்டபோது, இந்திய அரசு வெளிநாடுகளிடம் இருந்து கடன் வாங்கத் தொடங்கியது. அதன்பிறகு ரூபாயின் பயணம் சரிவை நோக்கித் தொடங்கியது.

1975 தொடக்கத்தில் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 8 ரூபாயாக இருந்தது, பிறகு 1985இல் அது 12 ரூபாயாக சரிந்தது. 1991இல் நரசிம்ம ராவ் ஆட்சி காலத்தில், இந்தியா தாராளமயமாக்கல் பாதையை தேர்ந்தெடுத்த பிறகு வீழத் தொடங்கிய ரூபாயின் மதிப்பு அடுத்த 10 ஆண்டுகளில் 47-48 என்ற அளவுக்கு வந்தது.

ரூபாயின் கண்ணாமூச்சி ஆட்டத்திற்கான காரணம் என்ன?

அமெரிக்க டாலர் மற்றும் இந்திய ரூபாயின் மதிப்பின் விளையாட்டை இப்படி புரிந்துக் கொள்ளலாம். உதாரணத்திற்கு, நாம் அமெரிக்காவுடன் வர்த்தகம் செய்கிறோம் என்றும், இரு நாடுகளிடம் அந்நிய செலாவணி இருப்பு சமமாக இருக்கிறது என்று வைத்துக்கொள்வோம். அதாவது. அமெரிக்காவிடம் 67 ஆயிரம் ரூபாயும், இந்தியாவிடம் 1000 அமெரிக்க டாலர் உள்ளது. அமெரிக்க டாலரின் மதிப்பு 67 ரூபாயாக இருப்பதால் இருவரிடம் இருக்கும் பணத்தின் மதிப்பு சமமாக இருக்கிறது என்று சொல்கிறோம்.

அமெரிக்காவிடம் இருந்து இந்தியா ஒரு பொருளை இந்தியா வாங்குகிறது, அதன் மதிப்பு 6,700 ரூபாய். அதற்காக இந்தியா 100 டாலர்களை கொடுக்கிறது.

இப்போது இந்தியாவின் அந்நிய செலாவணி இருப்பில் 900 அமெரிக்க டாலர் இருக்கிறது. இந்தியாவின் இருப்பில் இருந்து 100 டாலர் அமெரிக்காவிடம் சென்றுவிட்டது.

இந்த நிலை எப்போது சரியாகும்? அமெரிக்கா, இந்தியாவிடம் இருந்து 100 டாலர் மதிப்பிலான பொருட்களை வாங்கும்போது தானே? ஆனால் அது நடைபெறாவிட்டால்? அதாவது அமெரிக்காவுக்கான நமது ஏற்றுமதி, நமது இறக்குமதியைவிட குறைவு.

நாணய விவகாரங்களில் நிபுணரான எஸ்.சுப்ரமண்யம் இவ்வாறு கூறுகிறார்: இதுபோன்ற நிலையில் இந்திய ரிசர்வ் வங்கி தனது இருப்பில் இருந்து அமெரிக்க டாலர்களை வெளியிடுவதோடு, வெளிநாடுகளில் இருந்தும் அமெரிக்க டாலர்களை வாங்கி இந்தியச் சந்தைக்கு தேவையான டாலரை வழங்கவேண்டும்.

ரூபாயின் மதிப்பு எப்படி நிர்ணயிக்கப்படுகிறது?

தேவை மற்றும் வழங்கலின் அடிப்படையில் ரூபாயின் மதிப்பு நிர்ணயிக்கப்படுகிறது என்று சொல்கிறார் செலாவணி நிபுணர் எஸ்.சுப்ரமணியம். ஏற்றுமதி மற்றும் இறக்குமதியிலும் இதன் தாக்கம் இருக்கும். ஒவ்வொரு நாட்டிடமும் அந்நிய செலாவணி இருப்பு இருக்கும். அதைக் கொண்டுதான் வர்த்தகமும், பணப்பரிமாற்றமும் நடைபெறும். அந்நிய செலாவணி வரத்தைப் பொறுத்தே ஒரு நாட்டின் நாணயத்தின் மதிப்பு நிர்ணயிக்கப்படும். அமெரிக்க டாலரை பொதுவாக எல்லா நாடுகளும் ஏற்றுக் கொள்கின்றன. பெரும்பாலான நாடுகள் ஏற்றுமதிக்கான விலையை அமெரிக்க டாலர்களிலேயே குறிப்பிடுகின்றன.

ரூபாய் பலவீனமானது ஏன்?

டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு சூழ்நிலைக்கு ஏற்றாற்போல் ஏற்ற இறக்கங்களை சந்திக்கிறது. ரூபாயின் மதிப்பு பொருளாதார காரணங்களுக்காக ஒரு சமயம் குறைந்தால், சில சமயங்களில் ஆட்சியின் நிலைமையினால் மாறும். பல சமயங்களில் இரண்டும் இணைந்தே ரூபாயின் தலைவிதியை நிர்ணயிக்கின்றன.

டெல்லியில் இருக்கும் ஒரு பங்குச்சந்தை நிறுவனத்தின் ஆய்வுப் பிரிவின் தலைவர் ஆசிஃப் இக்பாலின் கருத்துப்படி, தற்போது ரூபாய் வீழ்ச்சியடைந்ததற்கு பல காரணங்கள் உள்ளன.

சர்வதேச அளவில் கச்சா எண்ணெயின் அதிகரித்துவரும் விலை இந்திய ரூபாயின் மதிப்பு குறைவதற்கான முதல் காரணம். கச்சா எண்ணெய் ஏற்றுமதி செய்யும் மிகப்பெரிய நாடுகளில் இந்தியாவும் ஒன்று. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை தற்போது 75 டாலராக உள்ளது. இது, கடந்த மூன்றரை ஆண்டுகளின் உச்சபட்ச விலையாகும். அதிக அளவு கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யும் இந்தியா, அதற்கான பணத்தை அமெரிக்க டாலர்களில் செலுத்துகிறது.

வெளிநாட்டில் இருந்து இந்திய பங்குச் சந்தையில் முதலீடு செய்திருக்கும் முதலீட்டாளர்கள் ஒரே நேரத்தில் தங்கள் பணத்தை திரும்ப எடுத்தார்கள். இந்த ஆண்டில் இதுவரை 46,197 கோடி ரூபாய்க்கும் அதிக அளவிலான பணம் இந்திய பங்குச் சந்தையில் இருந்து வெளியேறி இருக்கிறது.

அமெரிக்க அரசு வட்டி விகிதத்தை அதிகரித்திருப்பதால், இந்தியாவில் முதலீடு செய்திருக்கும் பணத்தை வெளிநாட்டு முதலீட்டாளர்கள் எடுத்துச் சென்று அமெரிக்க பத்திரங்களில் முதலீடு செய்கின்றனர்.

ரூபாயின் வீழ்ச்சியின் தாக்கம் என்ன?

ரூபாயின் மதிப்பு வீழ்ச்சியடைவதால் நமக்கு ஏற்படும் பாதிப்பு என்ன? நாணய நிபுணர் எஸ்.சுப்ரமணியத்தின் கருத்துப்படி:

  • விலைவாசி அதிகரிக்கும்.
  • இறக்குமதி செய்யப்படும் கச்சா எண்ணெயின் விலை அதிகரிக்கும்.
  • கச்சா எண்ணெய் விலை அதிகரித்தால் அடிப்படை தேவைகளான உணவுப்பொருட்கள், காய்கறிகள் உட்பட
  • இதைத்தவிர, அமெரிக்க டாலரில் செலுத்த வேண்டிய செலவுகள் மற்றும், நிலுவைக் கட்டணங்களுக்காக அதிக இந்திய ரூபாய் தேவைப்படும்.
  • வெளிநாட்டு சுற்றுலாவுக்கான செலவு அதிகரிக்கும்.
  • வெளிநாட்டில் கல்வி கற்பதற்கான செலவும் அதிகரிக்கும்.

ரூபாய் விலை வீழ்ந்திருப்பதால் யாருக்காவது நன்மை கிடைக்குமா?

சிலருக்கு நன்மை கிடைக்கும் என்கிறார் சுப்ரமணியம். வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்பவர்களுக்கு நன்மை ஏற்படும். அவர்களுக்கு கிடைக்கும் பணம் அமெரிக்க டாலராக கிடைக்கும். அதை ரூபாயாக மாற்றும்போது அவர்களுக்கு லாபம் அதிகமாகும்.

இதைத்தவிர, ஐ.டி மற்றும் மருந்து உற்பத்தி நிறுவனங்களும் தங்கள் பொருட்களை வெளிநாட்டில் விற்பதால் ரூபாயின் இறங்குமுகம் அவற்றிற்கு ஏறுமுகமாக இருக்கும். -BBC_Tamil

TAGS: