சென்னை: இந்தியாவில் 600 மில்லியன் மக்கள் கடுமையான தண்ணீர் பிரச்சனையை எதிர்கொள்வதாக நிதி ஆயோக் அதிர்ச்சி அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளது.
தென்மேற்குப் பருவமழை தொடங்கி முழு வீச்சில் பெய்து வருகிறது. கர்நாடகா, கேரளா மாநிலங்களில் ஆறுகளில் வெள்ள நீர் பெருக்கெடுத்துள்ளது. இந்த சூழ்நிலையில் நிதி ஆயோக் வெளியிட்டுள்ள அறிக்கையை படிக்க அதிர்ச்சிரமாகவே இருக்கும்.
75 சதவிகித குடும்பங்களில் குடிப்பதற்கான குடி தண்ணீர் அவர்களிடம் இருக்கப் போவதில்லை, 84 சதவிகித கிராமங்களில் குழாய் தண்ணீர் வசதி இல்லாமல் இருக்கின்றது என்றும் அந்த அறிக்கை தெரிவித்துள்ளது. நிதி ஆயோக் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் பல அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகியுள்ளன.
தண்ணீரின் தரம்
இந்தியாவில், 70 சதவிகித தண்ணீர் மாசடைந்த தண்ணீராகத்தான் இருக்கிறது. இந்தியா, உலக அளவில் தரம் வாய்ந்த தண்ணீர் குறியீட்டில் 122 இடங்களில் 120ஆவது இடத்தைப் பெற்றிருப்பதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டில் தண்ணீர் பிரச்சனை இருப்பதை முதல் முறையாக அறிக்கையாக வெளியிட்டிருக்கிறது நிதி ஆயோக் அமைப்பு.
2 லட்சம் மக்கள் மரணம்
இந்தியாவில், சுகாதாரமற்ற தண்ணீரைக் குடிப்பதால் ஆண்டுக்குச் சராசரியாக 2 லட்சம் மக்கள் உயிரிழப்பதாகவும், 2020ஆம் ஆண்டிற்குள் 21 முக்கிய நகரங்களில் நிலத்தடி நீரின் தட்டுப்பாடு அதிகரிக்கும் என்பதால், சுமார் 100 மில்லியன் மக்கள் பாதிக்கப்படுவார்கள்.
ஜிடிபி குறையும்
இந்தியாவில் வறட்சியானது அடிக்கடி ஏற்படுவதால், பல்வேறு சவால்களை சந்திக்க வேண்டியிருக்கிறது. இதனால் 2030இல் இந்தியாவில் தண்ணீர் தட்டுப்பாடு என்பது மிகவும் மோசமான நிலைக்குத் தள்ளப்படும், அப்போது இந்தியாவின் தேவைக்கு தற்போது தேவைப்படும் தண்ணீரின் அளவைவிட இருமடங்கு தண்ணீர் தேவைப்படும். இதனால் இந்தியாவின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் 6 சதவிகிதம் குறையும் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
600 மில்லியன் இந்தியர்கள் பாதிப்பு
நாட்டிலுள்ள தண்ணீர் பிரச்சனை இதே வீதத்தில் தொடர்ந்தால், வரும் 2030ஆம் ஆண்டில் நாட்டில் 40 சதவீத மக்களுக்கு தண்ணீரே கிடைக்காது. தற்போது 600 மில்லியன் இந்தியர்கள் தண்ணீர் பற்றாற்குறையின் காரணமாக அதிகபட்ச அழுத்தத்தில் சிக்கியுள்ளனர். நாட்டிலுள்ள 70 சதவீத தண்ணீர் கலப்படமடைந்துள்ளது மற்றும் தூய்மையான தண்ணீரை பெறுவதற்கான போதிய வாய்ப்பில்லாமல் இருக்கிறது.
நிலத்தடி நீர் பிரச்சினை
சென்னை, புதுடெல்லி, பெங்களூரு மற்றும் ஹைதராபாத் உள்ளிட்ட 21 இந்திய நகரங்களில் இன்னும் இரண்டாண்டுகளில், அதாவது 2020ஆம் ஆண்டில் நிலத்தடி நீர் முழுவதுமாக வற்றிவிடும். இதன் காரணமாக 100 மில்லியன் மக்களின் வாழவாதாரம் கடுமையாக பாதிப்புக்குள்ளாகும் என்று நிதி ஆயோக் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. நிதி ஆயோக்கின் இந்த அறிக்கையானது, இந்தியாவில், தண்ணீர் பிரச்சனை நாம் கற்பனை செய்து கூட பார்க்க முடியாத அளவிற்கு இருப்பதாகக் கூறுகிறது.