தூத்துக்குடி: ஸ்டெர்லைட் போராட்டம் தொடர்பாக மக்கள் அதிகாரம் அமைப்பினர் மூளைச்சலவை செய்ததாக அப்பகுதி மீனவர்கள் பரபரப்பு புகார் கூறியுள்ளனர்.
தூத்துக்குடியில் கடந்த மாதம் 22 ஆம் தேதி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக 100வது நாள் போராட்டம் நடைபெற்றது. கிராம மக்கள் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
அப்போது வன்முறை வெடித்தது. இதனை கட்டுப்படுத்த முயன்ற காவல்துறையினர் பொதுமக்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் 13 பேர் கொல்லப்பட்டனர்.
நாடுமுழுவதும் அதிர்ச்சி
இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதுதொடர்பான பல்வேறு வழக்குகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
மக்கள் அதிகாரம் அமைப்பே காரணம்
இந்நிலையில் தூத்துக்குடி திரேஸ்புரம் நாட்டுப்படகு மீனவர்கள் சட்டப்பணிகள் ஆணையக்குழுவிடம் மனு ஒன்றை அளித்துள்ளனர். அதில் ஸ்டெர்லைட் போராட்டம் வன்முறையாக மாறியதற்கு மக்கள் அதிகாரம் அமைப்பினரே காரணம் என குற்றம்சாட்டினர்.
மார்ச் 24 பொதுக்கூட்டம்
இதுதொடர்பாக அவர்கள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது, ஸ்டெர்லைட் ஆலையால் நேரடியாக அதிக பாதிப்படைந்த அ.குமரெட்டியபுரம் மக்களால் கடந்த பிப்ரவரி மாதம் 12-ந்தேதி உண்ணாவிரத போராட்டம் நடத்தப்பட்டது. தொடர்ந்து நடந்த போலீசாரின் கைது நடவடிக்கையை கண்டித்து வணிகர் சங்கத்தின் கடையடைப்பு மற்றும் மீனவர்கள் வேலை நிறுத்தத்தோடு ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி மார்ச் 24-ந்தேதி பொதுக்கூட்டம் நடந்தது.
இளைஞர்களுக்கு மூளைச்சலவை
இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர். இந்த கூட்டம் எந்தவித வன்முறையும் இன்றி அறப்போராட்டமாக நடந்தது. அதன்பிறகு மக்கள் அதிகாரம் அமைப்பை சேர்ந்த வக்கீல்கள் கிராமங்களுக்குள் ஊடுருவி ஏப்ரல் மாதம் 23-ந்தேதி மாசுகட்டுப்பாட்டு வாரியத்தில் மனு கொடுக்கும் போராட்டம் அறிவித்தனர். அப்போது மக்களை திரட்டி முன்னின்று மனு கொடுத்தனர். தொடர்ந்து ஸ்டெர்லைட் எதிர்ப்பு கிராம மக்கள் கூட்டமைப்பு உருவாக்கி இளைஞர்களை மூளைச்சலவை செய்தனர்.
கவன ஈர்ப்பு போராட்டம்
பல்வேறு இடங்களில் குறிப்பாக மீனவ மக்கள் அதிகம் வசிக்கும் மாதா கோவில் பகுதி, பாத்திமாநகர், புதுத்தெரு, குரூஸ்புரம், திரேஸ்புரம் ஆகிய இடங்களில் கலெக்டர் அலுவலகம் முற்றுகை போராட்டம் குறித்து மக்கள் அதிகாரம் அமைப்பை சேர்ந்த வக்கீல்கள் நேரடியாக பிரசாரம் செய்தனர். இந்த நிலையில் மே மாதம் 20-ந்தேதி நடந்த அமைதி பேச்சுவார்த்தையில் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்படுவதை தடுக்க மாவட்ட நிர்வாகத்துக்கு ஒத்துழைப்பு அளிக்கும் நோக்கத்தில் எஸ்.ஏ.வி. பள்ளி மைதானத்தில் கவனஈர்ப்பு போராட்டம் நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டது.
வீரவசனம் பேசவைத்தனர்
அப்போது வணிகர்கள் மற்றும் இதர அமைப்புகளோடு இணைந்து நாங்களும் செயல்படுவோம் என்று உறுதியளித்தோம். ஆனால் மக்கள் அதிகாரம் அமைப்பு சமூக வலைதளங்களிலும், பொதுமக்கள் அமர்ந்து இருந்த போராட்ட களங்களில் நேரடியாகவும், பெண்கள் மற்றும் இளைஞர்கள் மனதில் எதிர்கருத்துக்களை பரப்பி உணர்வுகளை தூண்டி, கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிடுவது, போலீசாரின் அடக்குமுறையை எதிர்கொள்ள தயாராகுங்கள் என்று பெண்களையும் வீரவசனம் பேச வைத்து வேடிக்கை பார்த்தனர்.
நம்பியே வந்தோம்
ஏப்ரல் மாதம் மனு அளிக்க வழிநடத்தியது போன்று மே 22 போராட்டத்திலும் வழிநடத்தி செல்வார்கள் என்று நம்பியே மீனவ மக்களும், பொதுமக்களும் திரளாக அவர்களின் அறிவுறுத்தலின்படி மாவட்ட கலெக்டர் அலுவலக முற்றுகை போராட்டத்துக்கு மாதா கோவில் முன்பு இருந்து புறப்பட்டோம். மக்கள் ஊர்வலமாக புறப்படும் வரை மக்களோடு இருந்த இந்த திடீர் தலைவர்கள், 13 பேர் சுட்டுக் கொலை செய்யப்பட்ட போதும், அதன்பிறகும் எங்கு இருந்தார்கள்.
அவர்களுக்கு காயம் ஏற்படவில்லை
இவர்களால் உணர்வுகள் செறிவூட்டப்பட்ட மக்கள் கூட்டத்தை மாவட்ட கலெக்டர் அலுவலகம் நோக்கி முன்னேறி செல்லும் மக்களை கட்டுக்கோப்பாக நடத்தி செல்லாமல் எங்கே சென்றார்கள்? இந்த திடீர் தலைவர்களில் ஒருவருக்கு கூட சிறுகாயம் ஏற்படவில்லை. தற்போது அந்த வக்கீல்கள் தங்களை காத்துக் கொள்வதற்காக ஐகோர்ட்டில் மீனவ அமைப்புகளே மே 22 போராட்டத்தை முன்னெடுத்து சென்றனர் என்றும், அவர்களுக்கு எந்த சம்பந்தமும் இல்லை என்றும் தவறான வாதங்களை முன்னெடுத்து வருவதாக அறிகிறோம்.
பாதுகாப்பு அளிக்க வேண்டும்
இது மீனவ சமுதாய மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. மீனவ மக்கள் போலீசாரால் தொடர்ந்து அச்சுறுத்தப்பட்டு வருகிறோம். மீனவ மக்கள் மீது வழக்குகள், தேடுதல் என்ற பெயரில் நெருக்கடிகளை கொடுத்து அமைதியற்ற சூழ்நிலையில் வாழ்ந்து வருகிறோம். எனவே, மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு எங்களுக்கு சட்ட உதவிகள் செய்து மீனவ சமுதாய மக்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு உள்ளது.