வழக்குரைஞராகப் பதிவுசெய்த முதல் திருநங்கை சத்யஸ்ரீ ஷர்மிளா

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சிலில் வழக்கறிஞராக பதிவு செய்துள்ள திருநங்கை சத்யஸ்ரீ ஷர்மிளா, இந்தியாவில் வழக்குரைஞராகப் பதிவு செய்யும் முதல் திருநங்கை தாமே என்கிறார்.

ராமநாதபுரத்தை பூர்வீகமாக கொண்ட அவர் சேலத்தில் சட்டம் பயின்றுள்ளார். தமது வழக்குரைஞர் பணியைப் பயன்படுத்தி தனது சமூகத்திற்கு சட்டரீதியான உதவி செய்து அவர்களை முன்னேற்றப்போவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஊடகங்களிடம் பேசிய சத்தியஸ்ரீ ஷர்மிளா தன்னுடைய இலக்கை அடைய கடும் சவால்களை எதிர்கொண்டு வந்ததாக கூறினார்.

”வழக்குரைஞராக வேண்டும் என்பது என நீண்டநாள் கனவு . நான் நீதிபதியாக வேண்டும் என மூத்த நீதிபதிகள் வாழ்த்தியுள்ளனர். எனது திருநங்கை சமூகத்திற்காக சேவை செய்வேன். அனைத்து துறைகளிலும் திருநங்கைகள் முன்னேறும் காலம் இது. இந்திய அளவில் முதல் திருநங்கை வழக்கறிஞராக பதிவு செய்துள்ளேன் என்பதில் மகிழ்ச்சி,” என்று அவர் தெரிவித்தார்.

மேலும் தனது உழைப்புக்கு பலரும் உதவியுள்ளனர் என்று கூறிய அவர், ”என் திருநங்கை அம்மா ஷர்மிளா, எனது சகோதரி தேவி ,சுதா, ஜெயா என பலரும் உதவியுள்ளனர். திருநங்கை நலனில் அக்கறை உள்ள அமைப்புகள் பலரும் எனக்கு உதவியுள்ளன,” என்று தெரிவித்தார்.

வழக்குரைஞராகப் பதிவு செய்திருக்கும் திருநங்கை.

திருநங்கை சத்யஸ்ரீ ஷர்மிளாவின் முயற்சியால் பல திருநங்கைகள் சட்டத்துறையில் நுழைவார்கள் என்கிறார் வழக்கறிஞர் திவ்யா.

”முதல் முறையாக திருநங்கை ஒருவர் வழக்கறிஞராக பதிவுசெய்துள்ளார் என்பது பாராட்டப்படவேண்டிய ஒன்று. திருநங்கை சமூகத்தினர் சந்திக்கும் கொடுமைகள் ஏராளம். தற்போது திருநங்கை ஒருவர் வழக்கறிஞராக உள்ளார் என்பது திருநங்கைகள் பலருக்கும் நம்பிக்கை ஏற்படுத்தும். வழக்குகள் பதிய முன்வருவார்கள். அதேபோல பல திருநங்கைகள் சட்டம் படிக்கமுன்வருவார்கள். சத்தியஸ்ரீ ஒரு தொடக்கப்புள்ளி,” என்றார் வழக்கறிஞர் திவ்யா. -BBC_Tamil

TAGS: