காவிரி: உச்சநீதிமன்றத்தில் முறையீடு.. நாடாளுமன்றத்தில் போராட்டம்.. கர்நாடக அனைத்து கட்சிகள் அதிரடி

பெங்களூர்: உச்சநீதிமன்ற உத்தரவையடுத்து, காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் காவிரி நதிநீர் ஒழுங்காற்றுக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இரண்டு அமைப்புகளுக்கும் உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். காவிரி நதிநீர் மேலாண்மை வாரியத்தின் தலைவராக மத்திய நீர்வள ஆணையத்தின் தலைவர் மசூத் ஹுசேன் நியமிக்கப்பட்டுள்ளார்.

இதன் உறுப்பினர்களாக மத்திய நீர்வள ஆணையத்தின் தலைமைப் பொறியாளர் நவீன் குமார், மத்திய வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறை கமிஷனர் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும் சில மத்திய அரசு அதிகாரிகள் பகுதி நேர உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

கர்நாடகாவின் நீர்வளத்துறை நிர்வாக செயலாளர் (பொறுப்பு), கேரள நீர்வளத்துறை செயலாளர் டிங்கு பிஸ்வால், புதுச்சேரி பொதுப்பணித்துறை செயலாளர் மற்றும் மேம்பாட்டு கமிஷனர் அன்பரசு, தமிழக பொதுப்பணித்துறை முதன்மைச் செயலாளர் எஸ்.கே.பிரபாகர் ஆகியோர் பகுதிநேர உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

மத்திய நீர்வள ஆணையத்தின் தலைமைப் பொறியாளர் கோயல், காவிரி மேலாண்மை ஆணையத்தின் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த ஆணையத்தின் தலைமையகம் டெல்லியில் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு தலைவர், உறுப்பினர்கள், பகுதி நேர உறுப்பினர்கள் 9 பேர் நியமிக்கப்பட்டதைத் தொடர்ந்து, இந்த ஆணையத்தின் முதல் கூட்டம் வரும் ஜூலை 2ம் தேதி டெல்லியில் கூட்டப்படுகிறது. தமிழகம், கர்நாடகா, கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களின் உறுப்பினர்களும், மத்திய அரசு பிரதிநிதிகளும் இக்கூட்டத்தில், பங்கேற்கிறார்கள். இதில், பல்வேறு அம்சங்கள் பற்றி ஆலோசிக்கப்பட உள்ளது.

காவிரி மேலாண்மை ஆணையம் கூட உள்ள நிலையில், இன்று கர்நாடகாவில் அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டது. முதல்வர், குமாரசாமி தலைமையில் பெங்களூரில் உள்ள தலைமைச் செயலகமான விதானசவுதாவில் கூட்டம் நடைபெற்றது. இதில், எதிர்க்கட்சி தலைவர் எடியூரப்பா, மத்திய அமைச்சர் சதானந்தகவுடா, அமைச்சர்கள், நீர்வளத்துறை சார்ந்த அதிகாரிகள், கர்நாடக மூத்த வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில், காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்ட விதத்திற்கு பாஜக உட்பட அனைத்து கட்சிகள் சார்பிலும் அதிருப்தி தெரிவிக்கப்பட்டது. நாடாளுமன்றத்தில், விவாதம் நடத்திதான் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட வேண்டும், அதை கர்நாடக அனைத்து கட்சிகள் நாடாளுமன்றத்தில் வலியுறுத்தி இணைந்து செயல்பட வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டது.

வாய்ப்பு இருந்தால், அரசியல் சாசன அமர்வில் மேல்முறையீடு செய்து காவிரி மேலாண்மை ஆணையத்தை தவிர்ப்பது. இவ்விரு முடிவுகளையும் அனைத்து கட்சி கூட்டத்தில் எடுத்துள்ளனர். கர்நாடக அரசுக்கு அனைத்து கட்சிகளும் இந்த விஷயத்தில் முழு ஒத்துழைப்பு அளிப்பது என முடிவு செய்யப்பட்டுள்ளது.

tamil.oneindia.com

TAGS: