நேபாளத்தில் சிக்கி தவிக்கும் தமிழர்களை மீட்கும் பணி தீவிரம்

இமயமலையில் உள்ள கைலாஷ் மானசரோவருக்கு நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் நேபாள நாட்டின் வழியாக புனித யாத்திரை சென்றவர்களில் 1500 பேர் மழையின் காரணமாக வழியில் சிக்கிக்கொண்டுள்ளனர்.

இதில் தமிழகத்தை சேர்ந்த யாத்ரீகளும் சிக்கிக் கொண்டுள்ளதாக தெரிகிறது.

இவர்களை மீட்க அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருவதாக இந்திய வெளியுறவு துறை அமைச்சகம் கூறுகிறது.

கடுமையான மழை

நேபாளத்தில் கடந்த சில நாட்களாக கடுமையான மழை பெய்து வருகிறது. மழையின் காரணமாக பல இடங்களில் மண் சரிவு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக போக்குவரத்து அந்த பகுதியில் துண்டிக்கப்பட்டு இருக்கிறது.

இதனால் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும் இருந்து கைலாஷ் மானசரோவர் யாத்திரை சென்றவர்களில் 1500 பேர் அங்கிருந்து திரும்பிய போது வழியில் சிக்கிக்கொண்டுள்ளனர்.

நடவடிக்கை எடுத்து வருகிறோம்

இது தொடர்பாக தனது ட்வீட்டர் கணக்கில் ட்வீட் செய்துள்ள வெளியுறவு துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ், “நேபாளத்தின் சிமிகோட் பகுதியில் 525 பக்தர்களும், ஹில்சாவில் 550 பக்தர்களும், திபெத்திய பகுதிகளில் 500 சிக்கியுள்ளனர்.”

“நேபாளத்தில் உள்ள இந்திய தூதுரகம் நேபாள்கஞ்ச் மற்றும் சிமிகோட் பகுதிகளில் தங்களது பிரதிநிதிகளை அனுப்பிஉள்ளது. அவர்கள் யாத்திரிகர்களுடன் தொடர்பில் உள்ளனர். அவர்களுக்கு தேவையான உணவு மற்றும் இருப்பிட வசதிகளை அந்த பிரதிதிகள் மேற்கொண்டு வருகின்றனர்.” என்றும் தனது ட்வீட்டர் கணக்கில் பகிர்ந்துள்ளார்.

இந்நிலையில் இந்தியர்களை பத்திரமாக வெளியேற்றுவதற்கு ராணுவ ஹெலிகாப்டர்கள் மூலமாக நடவடிக்கையை மேற்கொள்ள நேபாளத்திற்கு இந்தியா கோரிக்கையை விடுத்துள்ளது என்று அவர் ட்வீட் செய்துள்ளார்.

நேபாளத்தில் சிக்கியுள்ள பக்தர்களுக்கும், அவர்களுடைய உறவினர்களுக்கும் உதவும் வகையில் சேவை தொடங்கப்பட்டுள்ளது.

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் பேசும் மக்களுக்கு அவர்களுடைய மொழியில் சேவையை பெறவும் நடவடிக்கையை எடுத்துள்ளது.

104 பக்தர்கள் மீட்பு

ஹில்சாவில் இருந்து சிமிகோட் பகுதிக்கு 104 இந்தியர்கள் பத்திரமாக அழைத்து வரப்பட்டுள்ளனர் என்கிறது ஏ.என்.ஐ செய்தி முகமை.

ஆண்டுதோறும் நூற்றுகணக்கான பக்தர்கள் இமயமலையில் உள்ள கைலாஷ் மானசரோவருக்கு தமிழகத்திலிருந்து புனிதயாத்திரை சென்று வருகின்றனர்.

ஒருவர் மரணம்

இதனிடையே, தேனி மாவட்டம் ஆண்டிபட்டியிலிருந்து கைலாஷ் மானசரோவருக்கு புனித யாத்திரை மேற்கொண்ட ராமசந்திரன் (67) உடல்நலக் கோளாறு காரணமாக நேற்று (திங்கட்கிழமை) இறந்துள்ளார்.

இவர் மழையின் காரணமாக அங்கு சிக்கிய யாத்ரீகர் இல்லை.

அவரது உடல் காத்மண்டுக்கு கொண்டுவரபட்டு பின் தமிழகத்திற்கு அனுப்பப்பட உள்ளது.

டெல்லியில் உள்ள தமிழக அதிகாரிகள் மழையில் சிக்கி உள்ள தமிழக பக்தர்களை மீட்க அனைத்து ஏற்பாடுகளையும் செய்துள்ளதாக கூறுகின்றனர்.

அதற்கான உதவி மையங்களையும் ஏற்படுத்தி உள்ளனர்.

உதவி மைய எண். 011-21610285/21610286 என்கிறது தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கை

-BBC_Tamil

TAGS: