திண்டுக்கல்: பழனி முருகன் கோவிலின் நிர்வாக தலைமை அலுவலகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் முக்கிய ஆவணங்கள் எரிந்து நாசமாயின.
பழனி கோவில் மூலவர் சன்னதியில் உள்ள பழமை வாய்ந்த நவபாஷாண சிலைக்கு பதிலாக புதிய சிலை அமைக்க கடந்த 2004-ம் ஆண்டு முடிவு செய்யப்பட்டு சிலை வடிவமைக்கப்பட்டது.
புதிதாக வடிவமைக்கப்பட்ட சிலை சில மாதங்களிலேயே நிறம் மாறிப்போனதால் பக்தர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த முறைகேடு விசாரணையில் ஸ்தபதி முத்தையா உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.
இதனால் பழனி முருகன் கோவில் தொடர்ந்து செய்திகளில் அடிபட்டு வருகிறது. இந்நிலையில் பழனி முருகன் கோயில் அடிவாரத்தில் உள்ள இந்துசமய அறநிலையத்துறை இணை ஆணையர் தலைமை அலுவலகத்தில் இன்று திடீர் தீ விபத்து ஏற்பட்டது.
இந்த விபத்தில் அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த பல முக்கிய ஆவணங்கள் எரிந்து நாசமானதாக கூறப்படுகிறது. தகவலறிந்து வந்த தீயணைப்புத்துறையினர் போராடி தீயை கட்டுப்படுத்தினர்.
ஏசியில் ஏற்பட்ட மின்கசிவே விபத்திற்கு காரணம் என தெரியவந்துள்ளது. தொடர்ந்து சர்ச்சைகள் நீடித்து வரும் நிலையில் பழனி முருகன் கோவில் நிர்வாக தலைமை அலுவலகத்தில் தீ விபத்து ஏற்பட்டிருப்பது பக்தர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.