ஆளுநர் தன்னிச்சையாக செயல்பட முடியாது.. ஆம் ஆத்மி வழக்கில் உச்சநீதிமன்றம் வரலாற்று தீர்ப்பு

டெல்லி: டெல்லியில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு அதிகாரமா அல்லது துணை நிலை ஆளுநருக்கு அதிகாரமா என்ற மோதல் இருந்து வரும் நிலையில் இதுகுறித்த வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்று பரபரப்பு தீர்ப்பை வழங்கியது.

யூனியன் பிரதேசமான டெல்லியில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு இருந்தும், மத்திய அரசின் துணை நிலை ஆளுநர்களே பெரும்பாலான நியமனங்கள், முடிவுகளை எடுப்பது வழக்கமாக இருந்து வருகிறது.

மத்திய அரசு பிரதிநிதியான துணை நிலை ஆளுநர் முக்கிய பொறுப்புகளுக்கு உயரதிகாரிகளை நியமித்து வருகிறார். அதேபோன்று அரசு எடுக்கும் அனைத்து கொள்கை முடிவுகளுக்கும் துணை நிலை ஆளுநரின் ஒப்புதல் பெற வேண்டிய கட்டாயமும் உள்ளது. அதோடு, போலீஸ், சட்டம் ஒழுங்கு மற்றும் நிலம் சம்பந்தமான அதிகாரங்கள் அனைத்தும் மத்திய உள்துறை அமைச்சகத்தின் வசமே உள்ளது.

இப்போதைய ஆம் ஆத்மி அரசின் முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலுக்கும், துணை நிலை ஆளுருக்கும் இடையே மோதல் உச்சகட்டத்தை எட்டியது. எனவே, டெல்லியில் யாருக்கு உண்மையான அதிகாரம் இருக்கிறது என விளக்கக் கோரி டெல்லி ஹைகோர்ட்டில் கடந்த 2016ம் ஆண்டு ஆம் ஆத்மி அரசு வழக்கு தொடர்ந்தது.

இந்த வழக்கில் அவ்வாண்டு ஆகஸ்ட்4ல் ஹைகோர்ட் தீர்ப்பளித்தது. அதில் அரசியலமைப்புச் சட்டப்படி டெல்லியில் துணை நிலை ஆளுநர்தான் நிர்வாகத்தின் தலைவர் எனத் தீர்ப்பளித்தது. இந்தத் தீர்ப்பை எதிர்த்து ஆம் ஆத்மி கட்சி சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கின் விசாரணை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான 5 நீதிபதிகள் அமர்வு முன் நடந்து வந்தது. இருதரப்பு வாதங்களும் முடிந்த நிலையில் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டு இன்று வழங்கப்பட்டது.

தீர்ப்பில் கூறியுள்ளதாவது: மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கே அதிக அதிகாரம் உள்ளது. ஆளுநருக்கு தனிப்பட்ட அதிகாரமோ அல்லது தன்னிச்சையாக செயல்படும் அதிகாரமோ இல்லை. மாநில அரசுடன் ஆளுநர் இணைந்துதான் செயல்பட வேண்டும். அமைச்சரவையின் முடிவுகளை மதிக்க வேண்டியது ஆளுநர் கடமை. அமைச்சரவை முடிவுகளுக்கு முட்டுக்கட்டை போடகூடாது.

அரசு மற்றும் ஆளுநர் நடுவே விரிசல் ஏற்பட்டால் அதை பேச்சுவார்த்தை மூலமே தீர்த்துக்கொள்ள வேண்டும்.

டெல்லி இந்த நாட்டின் தலைநகர் என்பதால் சில சிறப்பு அதிகாரங்கள் தரப்பட்டுள்ளது என்பதையும் கருத்தில் கொண்டு, மாநில அரசு மற்றும் ஆளுநர் இரு தரப்பும் இணைந்து செயல்பட வேண்டும். சட்டம்-ஒழுங்கு, காவல்துறை சார்ந்த விஷயங்களை தவிர பிற விவகாரங்களில் ஆளுநர் தலையீடு இன்றி சட்டங்கள் இயற்ற டெல்லி அரசுக்கு  முழு உரிமை உள்ளது. இவ்வாறு தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

இதில் தலைமை நீதிபதி உள்ளிட்ட 3 நீதிபதிகள், டெல்லி அரசுக்கு  சாதகமாகவும், 2 நீதிபதிகள், துணை நிலை ஆளுநர்  தரப்புக்கு ஆதரவாகவும் தீர்ப்பளித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. பெரும்பான்மை நீதிபதிகளின் தீர்ப்பு டெல்லி அரசுக்கு சாதகமாக உள்ளது. இந்த தீர்ப்பை டெல்லி முதல்வர் கேஜ்ரிவால் வரவேற்றுள்ளார்.

tamil.oneindia.com

TAGS: