எட்டு வழிச்சாலை போராட்டம்: மாணவி வளர்மதி பிணையில் விடுதலை

எட்டு வழிச்சாலை திட்டத்தை தடுக்க மக்களுக்கு எப்போதும் துணை நிற்பேன் என்று சேலம் மத்திய சிறையில் இருந்து ஜாமீனில் வெளியே வந்த வளர்மதி தெரிவித்துள்ளார்.

சேலத்தில் எட்டு வழிச்சாலை அமையவுள்ள இடங்களில் விவசாயிகளை போராட்டத்திற்கு தூண்டியதாக இயற்கை பாதுகாப்பு அமைப்பை சேர்ந்தவரும், இதழியல் பாட மாணவியுமான வளர்மதி கடந்த மாதம் கைது செய்யப்பட்டார்.

கடந்த 19ம் தேதி சேலம் மாவட்டம் ஆச்சாங்குட்டப்பட்டி பகுதியில் எட்டு வழிச்சாலை திட்டத்துக்கு எடுக்கப்படவுள்ள நிலம் அதிகாரிகளால் அளக்கப்பட்டபோது, பொதுமக்களுடன் இணைந்து நின்றதற்காக காவல்துறையினரால் வளர்மதி கைது செய்யப்பட்டு சேலம் பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டார்.

அவருக்குப் பிணை கேட்டு சேலம் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி நேற்று முன்தினம் அவருக்கு பிணை வழங்கினார். இதையடுத்து சேலம் பெண்கள் சிறையில் இருந்து வியாழக்கிழமை விடுதலையானார் வளர்மதி.

சிறைக்கு வெளியே வளர்மதி ஆதரவாளர்கள் அவருக்கு வரவேற்பு அளித்தனர். அப்போது சிறை நுழைவாயில் முன் நின்று தனது ஆதரவாளர்களுடன், எட்டு வழிச்சாலை திட்டத்தை கைவிடக்கோரி முழக்கங்கள் எழுப்பினார்.

பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், “என்னைப் போன்றவர்களை கைது செய்ததற்கு காரணம் இனி மக்களுக்காகப் போராடக்கூடாது என்பதே” என்றார். விவசாயத்தை அழித்து மக்களின் எதிர்ப்பை மீறி தமிழக முதல்வர் இத்திட்டத்தை நிறைவேற்றப் பார்ப்பதாக குற்றம் சாட்டினார்.

முதல்வர் பதவியிலிருந்து கொண்டு மக்கள் தாமாக வந்து நிலம் தருவதாக அப்பட்டமாக பொய் கூறுவது ஏற்புடையதா என்று கேட்ட அவர், அரசு அடக்குமுறையை ஏவினாலும் தனது போராட்டம் நடந்துகொண்டே இருக்கும் என்றார். மேலும் இந்த திட்டத்தால் பாதிக்கப்படும் விவசாயிகளை நேரில் சந்தித்துப் பேசுவதுடன், அவர்களுக்கு எப்போதும் துணையாக இருப்போம் என்றார் அவர். -BBC_Tamil

TAGS: