தென்மாநிலங்களில் அதிகரிக்கும் வடமாநிலத்தவர் எண்ணிக்கை: பொருளாதாரத்துக்கு மேன்மையா, வீழ்ச்சியா?

(தென்னிந்திய மாநிலங்களுக்கு வட இந்திய மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் அதிக அளவில் வருவதற்கான காரணங்கள், தொழிலாளர்கள் உள்நாட்டுக்குள்ளேயே குடிபெயர்வதற்கான தேவை, அதனால் உண்டாகும் தாக்கம் உள்ளிட்டவை குறித்த கட்டுரைத் தொடரின் முதல் பாகம்.)

இந்தியா முழுவதும் 2011ஆம் ஆண்டு நடத்தப்பட்ட மக்கள்தொகை கணக்கெடுப்பில் மொழிகள் பற்றிய தரவுகளை சமீபத்தில் வெளியிட்டுள்ளது மத்திய அரசு.

அந்தத் தரவுகளை 2001இல் நடத்தப்பட்ட மக்கள்தொகை கணக்கெடுப்புடன் ஒப்பிட்டால், தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளைப் பேசுபவர்களின் எண்ணிக்கை வட மாநிலங்களில் குறைந்துள்ளதும், இந்தி, ஒடியா, வங்கம் உள்ளிட்ட வட இந்திய மற்றும் பிற மாநில மொழிகளைப் பேசுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதும் தெரியவந்துள்ளது.

2001இல் வட மாநிலங்களில் சுமார் 8.2 லட்சமாக இருந்த தமிழர்களின் எண்ணிக்கை அடுத்த 10 ஆண்டுகளில் 7.8 லட்சமாகக் குறைந்துள்ளது. இதேபோல 2001இல் எட்டு லட்சமாக இருந்த வட மாநிலங்களில் வாழும் மலையாள மொழி பேசுபவர்களின் எண்ணிக்கை சுமார் 7.2 லட்சம் என்ற அளவில் சுருங்கியுள்ளது.

தமிழ்நாடு மற்றும் கேரளத்தில் அதிகபட்சமாக இருந்தாலும் அனைத்து தென்னிந்திய மாநிலங்களிலும் இந்தி மொழி பேசுபவர்களின் எண்ணிக்கை இந்தக் காலகட்டத்தில் அதிகரித்துள்ளது.

தென்னிந்தியாவின் திராவிட மொழிகள் பேசுபவர்களின் மக்கள்தொகை குறைந்துள்ளதாகவும், வடஇந்தியாவின் இந்தோ-ஐரோப்பிய மொழிக் குடும்பத்தைச் சேர்ந்த மொழிகளைப் பேசுபவர்களின் எண்ணிக்கை சுமார் மூன்றில் ஒரு பங்கு அதிகரித்துள்ளது எனவும் அந்தத் தரவுகள் மூலம் தெரியவருகிறது.

பொருளாதாரத்துக்கு மேன்மையா, வீழ்ச்சியா?

அதாவது 2001இல் தென்னிந்திய மாநிலங்களில் வசித்த வட இந்தியர்களின் எண்ணிக்கை சுமார் 58.2 லட்சம். இது 2011இல் சுமார் 20 லட்சம் அதிகரித்து 77.5 லட்சமாகியுள்ளது.

வேலை வாய்ப்புகள் அதிகம்.. தொழிலாளர்கள் குறைவு..

“தென்னிந்திய மாநிலங்களில் வடஇந்திய மொழி பேசுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என்றால் வேலைவாய்ப்புகளுக்காக அதிக வட இந்தியர்கள் தென்னிந்தியா வந்துள்ளனர் என்பது வெளிப்படையாகத் தெரிகிறது,” என்று கூறும் பொருளாதார நிபுணர் ஜெயரஞ்சன், “அதன் காரணம் இங்கு வேலை வாய்ப்புகள் அதிகம். ஆனால், தொழிலார்களுக்கு தட்டுப்பாடு உண்டு. தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் மக்கள்தொகை கட்டுப்பாட்டால் இறப்பவர்களின் எண்ணிக்கையைவிட பிறப்பவர்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளது,” என்கிறார்.

“தென்னிந்திய மாநிலங்களுக்கு வட இந்தியத் தொழிலாளர்கள் வருவது ஆதாயம் உள்ளதா என்பதையும் தாண்டி, அவர்களுக்கான தேவை தென் மாநிலங்களில் இருப்பதாகவும், வட மாநிலங்களில் பொருளாதார வளர்ச்சியில் சமநிலை இல்லாமல் இருப்பது இந்தியாவின் ‘Engine of Growth’ (வளர்ச்சிக்கான உந்துவிசை) ஆக உள்ள தெற்கு மற்றும் மேற்கு மாநிலங்களுக்கு சாதகமாக உள்ளது,” என்றும் அவர் கூறுகிறார்.

‘தொழில்துறைகள் முடங்கிவிடும்’

“கட்டுமானம், உற்பத்தி ஆகிய துறைகளில் தென்னிந்திய மாநிலங்கள் வட இந்தியத் தொழிலாளர்களை அதிகம் சார்ந்துள்ளது. அவர்கள் இல்லாவிட்டால் அந்தத் துறைகள் முடங்கிவிடும்,” என்று வட இந்தியத் தொழிலாளர்கள் இல்லாமல் போனால் உண்டாகும் பொருளாதார தாக்கங்கள் குறித்தும் அவர் விவரித்தார்.

பொருளாதாரத்துக்கு மேன்மையா, வீழ்ச்சியா?

வட மாநிலத்தவர்கள் தென் மாநிலங்களில் வசிப்பதால், அவர்களின் உணவு, உடை போன்றவை சார்ந்த பொருளாதார நடவடிக்கைகள் அதிகரித்துள்ளது குறித்து கருத்து தெரிவித்த அவர், “தமிழர்கள் வெளிநாடுகளில் குடியேறியுள்ளதால் தமிழ் சினிமாவுக்கான வியாபாரம் அந்த நாடுகளிலும் அதிகரித்துள்ளது. ஓர் இனம் வேறு இடத்துக்கு செல்லும்போது அவர்களின் உணவுகள், பக்தி நம்பிக்கைகள், பழக்கவழக்கங்கள், பாடல்கள் போன்றவையும் அவர்களுடன் வருவது இயல்பானதுதான்,” என்றார்.

இந்தியாவிலேயே தொழில் வளர்ச்சி அதிகம் உள்ள பகுதிகளில் கோவை, திருப்பூர் நகரங்களைச் சுற்றியுள்ள மேற்கு தமிழகமும் ஒன்று.

இப்பகுதியிலுள்ள ஜவுளி மற்றும் பின்னலாடை நிறுவனங்களில் பணிபுரிய வங்கதேசம், நைஜீரியா உள்ளிட்ட நாடுகளை சேர்ந்தவர்கள் திருப்பூரில் வந்து அனுமதியின்றி தங்கியதால் கைது செய்யப்படும் சில சம்பவங்களும் சமீப ஆண்டுகளில் நிகழ்ந்துள்ளன.

வடமாநிலத்தவர்

அந்த அளவுக்கு தமிழகத்துக்கு வெளியில் இருந்து வந்து தங்கிப் பணிபுரிபவர்களின் எண்ணிக்கை மேற்குத் தமிழகத்தில் சமீப ஆண்டுகளில் அதிகரித்துள்ளது. இதே கால கட்டத்தில் திருப்பூர் பகுதியில் இருந்து வெளிநாடுகளுக்கு செய்யப்படும் பின்னலாடை ஏற்றுமதியும் அதிகரித்துள்ளது.

நேற்றைய தொழிலாளி.. இன்றைய முதலாளி..

வெளிமாநிலத் தொழிலாளர்களின் தேவை குறித்து பிபிசி தமிழிடம் பேசினார் திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கத் தலைவர் ராஜா சண்முகம்.

பொருளாதாரத்துக்கு மேன்மையா, வீழ்ச்சியா?

“தொழிலாளர்கள் தேவை தொடர்ந்து அதிகரித்து வருவதால், வட மாநிலத்தில் இருந்து அதிக எண்ணிக்கையிலான தொழிலாளர்கள் இங்கு வருவது தொழில்துறைக்கு நல்லதுதான். முன்பெல்லாம் முகவர்கள் மூலம்தான் வட மாநில தொழிலாளர்கள் வருவார்கள். இப்போதெல்லாம் முகவர்கள் இல்லாமலேயே தங்களுக்குத் தெரிந்தவர்கள் மூலம் வேலைவாய்ப்பு பெறும் அளவுக்கு அவர்களின் எண்ணிக்கை சமீப ஆண்டுகளில் அதிகரித்துள்ளது,” என்கிறார் அவர்.

“முந்தைய ஆண்டுகளில் தனி ஆட்களாக வந்தவர்கள் தற்போது தங்கள் குடும்பத்துடன் வருகிறார்கள். ஆனால், அவர்களைத் தங்க வைப்பதற்கான இடங்களை அனைத்து தொழில் நிறுவனங்களாலும் ஏற்படுத்தித் தர முடியாது. வட மாநில தொழிலாளர்களுக்கான உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த அரசும் முயல வேண்டும்,” என்று ராஜா சண்முகம் வலியுறுத்துகிறார்.

கடந்த ஆண்டுகளுடன் ஒப்பிடும்போது சமீப காலங்களில் வட மாநிலங்களிலும் பொருளாதார வளர்ச்சி அதிகரித்து வருவதால், அடுத்த சில ஆண்டுகளில் அவர்கள் தங்கள் சொந்த மாநிலத்துக்கே திரும்பிவிட்டால், இங்குள்ள பொருளாதார நடவடிக்கைகளில் எதிர்மறைத் தாக்கம் உண்டாக வாய்ப்புள்ளதா என்ற கேள்விக்குப் பதிலளித்த அவர், “பத்து ஆண்டுகள் ஒரே ஊரில் இருந்தால் அதுவே சொந்த ஊர் எனும் நிலை வந்துவிட்டது. நேற்றைய தொழிலாளி, இன்றைய முதலாளி. எனவே, அவர்கள் திரும்பிச் செல்வது என்பது அவ்வளவு எளிதில் நடந்துவிடாது, ” என்கிறார் அவர். -BBC_Tamil

TAGS: