சிலை திருட்டு வழக்கில் 13 ஆண்டுகளாக தேடப்பட்ட குற்றவாளி கைது

சென்னை: சிலை திருட்டு வழக்கில், பல கோடி ரூபாய் மதிப்புள்ள சிலைகளைத் திருடியதாக 13 ஆண்டுகளாக தேடப்பட்டு வந்த குற்றவாளியை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸார் நேற்று சென்னையில் கைது செய்துள்ளனர்.

திருநெல்வேலி மாவட்டம், பழவூரில் நாறும்பூநாதர் கோயில் உள்ளது. இந்த கோயிலில் இருந்து 2005 ஆம் ஆண்டில் 13 ஐம்பொன் சிலைகள் திருடுபோயின. இந்த சிலைகள் திருடு போனது தொடர்பாக சுபாஷ் சந்திர கபூர், வல்லப பிரகாஷ், ஆதித்ய பிரகாஷ், தீனதயாளன் உள்ளிட்ட 18 பேர்கள் மீது சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸார் வழக்கு பதிவு செய்தனர்.

இந்த 18 பேரில் சுபாஷ் சந்திர கபூர், வல்லப பிரகாஷ், ஆதித்ய பிரகாஷ், தீனதயாளன் உள்பட 10 பேர் பல்வேறு சிலை திருட்டு வழக்குகளில் ஏற்கெனவே கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்கில் தொடர்புடைய மேலும், 6 பேர் வெளிநாடுகளில் இருப்பதாக போலீஸாருக்கு தகவல் தெரியவந்துள்ளது. மற்ற 2 பேரை போலீஸார் தேடி வந்தனர்.

இதையடுத்து, பழவூர் நாறும்பூநாதர் கோயில் சிலை திருட்டு வழக்கில் தொடர்புடைய தேனி மாவட்டம் உத்தமபாளையம் வட்டம் பரமதேவன்பட்டியைச் சேர்ந்த ராஜா மகன் பரமதுரை (42) என்பவரை போலீஸார் கடந்த 13 ஆண்டுகளாகத் தேடி வந்தனர்.

இந்நிலையில், பரமதுரை சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருப்பதாகக் கிடைத்த ரகசிய தகவலின்பேரில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி. பொன்மாணிக்கவேல் தலைமையில் போலீஸார் நேற்று பரமதுரையை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட பரமதுரை கும்பகோணம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

பழவூர் நாறும்பூநாதர் கோயில் சிலை திருட்டு வழக்கில் இதுவரை கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து நடராஜர், சிவகாமி அம்பாள், காரைக்கால் அம்மையார், மாணிக்கவாசகர், கிருஷ்ணர், அஸ்திரதேவர், வெயில்காத்த அம்மன், கோமதி அம்மன், சுப்பிரமணியர் ஆகிய 9 சிலைகள் மீட்கப்பட்டுள்ளன. இந்த சிலைகளில் நடராஜர் சிலை மட்டும் ரூ.15 கோடி மதிப்புள்ளது என்றும் மொத்த சிலைகளின் மதிப்பு இதைவிடப் பல மடங்கு இருக்கும் என்று போலீஸார் கூறுகின்றனர்.

tamil.oneindia.com

TAGS: