நாட்டையே உலுக்கிய நிர்பயா வழக்கு.. குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனையை உறுதி செய்தது உச்சநீதிமன்றம்

டெல்லி: மரண தண்டைனையை எதிர்த்து நிர்பயா கொலை வழக்கு குற்றவாளிகள் 4 பேர் தொடர்ந்த வழக்கில் மரண தண்டனையை உறுதி செய்து உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.

டெல்லியில், கடந்த 2012-ம் ஆண்டு டிசம்பர் 16 ஆம் தேதி இரவு, ஓடும் பேருந்தில் மருத்துவ மாணவி ஒருவர் 6 பேர் கொண்ட கும்பலால் கொடூரமான முறையில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார்.

இதைத்தொடர்ந்து டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை, சிங்கப்பூர் மருத்துவமனை என தீவிர சிகிச்சையளித்தது. இருப்பினும் டிசம்பர் 29ஆம் தேதி மருத்துவ மாணவி சிகிசிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

நிர்பயா கொலை வழக்கு

நாட்டையே உலுக்கிய இந்த சம்பவத்தில் 6 பேரும் கைது செய்யப்பட்டனர். ஒரு குற்றவாளி சிறுவன் என்பதால் 3 ஆண்டுகள் சிறை தண்டனையுடன் தப்பினான். முக்கிய குற்றவாளி ராம்சிங், சிறையில் தற்கொலை செய்துகொண்டார்.

4 பேருக்கு மரண தண்டனை

மற்ற 4 பேர்களான முகேஷ், பவன், வினய், அக்‌ஷய் ஆகியோருக்கு விரைவு நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது. இதனை சுப்ரீம் கோர்ட்டு உறுதி செய்தது.

சுப்ரீம்கோர்ட்டில் மனுத்தாக்கல்

முகேஷ், பவன், வினய், அக்‌ஷய் ஆகியோர், மரண தண்டனையை மறுஆய்வு செய்யக்கோரும் மனுக்களை சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்தனர். இம்மனுக்கள் மீது கடந்த மே 4 ஆம் தேதி தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டது.

மரண தண்டனை உறுதியாகுமா?

இந்நிலையில், தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையில் நீதிபதி அசோக் பூஷன், ஆர் பானுமதி ஆகியோர் அடங்கிய அமர்வு இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது. அதாவது நிர்பயா கொலை வழக்கில் குற்றவாளிகள் 4 பேரின் மரண தண்டனையையும் உச்சநீதிமன்றம் உறுதி செய்துள்ளது.

சீராய்வு மனுக்கள் தள்ளுபடி

மேலும் சீராய்வு மனுவை விசாரிக்க எந்த முகாந்திரமும் இல்லை எனக்கூறி முகேஷ் உள்ளிட்ட 4 பேரின் சீராய்வு மனுக்களையும் உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த வழக்கில் குற்றவாளிகள் தப்புவார்களா அல்லது மரண தண்டனை உறுதியாகுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்த நிலையில் உச்சநீதிமன்றம் மரண தண்டனையை உறுதி செய்திருப்பதற்கு பலரும் வரவேற்பு தெரிவித்துள்ளது.

சுப்ரீம் கோட்டும் உறுதி

ஏற்கனவே சிறப்பு நீதிமன்றம் விதித்த மரண தண்டனை டெல்லி உயர்நீதிமன்றம் உறுதி செய்தது. இதனை எதிர்த்து குற்றவாளிகள் 4 பேரும் உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனுத்தாக்கல் செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

-tamil.oneindia.com

TAGS: