மனித உடலை பதப்படுத்தும் ரசாயனம் கொண்டு பதப்படுத்தப்படும் மீன்கள்? அதிர்ச்சியில் சென்னை மக்கள்!

சென்னை: காசிமேட்டில் மனித உடலை பதப்படுத்தும் ரசாயனம் கொண்டு பதப்படுத்தப்படும் மீன்கள் விற்பனை செய்யப்படுவதாக வெளியான தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதைத்தொடர்ந்து காசிமேடு மற்றும் சைதாப்பேட்டை மீன் மார்க்கெட்டுகளில் அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

கேரளாவில் தற்போது மீன்பிடி தடைக்காலம் அமலில் உள்ளது. இதனால் தமிழ்நாடு, கோவா, ஆந்திரா மாநிலங்களில் இருந்து கேரளாவுக்கு மீன்கள் அதிக அளவில் அனுப்பி வைக்கப்படுகிறது.

இந்த நிலையில் தூத்துக்குடியில் இருந்து கேரளாவுக்கு விற்பனைக்காக அனுப்பி வைக்கப்பட்ட மீன்களில் பிரேதத்தை பதப்படுத்தி வைக்க உதவும் ‘பார்மலின்’ என்னும் ரசாயனம் பயன்படுத்தப்பட்டு இருப்பதை கேரள அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.

கேரளா தடை

விதிப்பு இந்த ரசாயனம் புற்றுநோயை ஏற்படுத்தக் கூடிய அபாயம் கொண்டது. இதனால் தமிழ்நாட்டில் இருந்து அனுப்பி வைக்கப்படும் மீன்களை தங்களது மாநிலத்தில் விற்பனை செய்வதற்கு கேரள அரசு தடை விதித்தது.

100 கிலோ மீன்கள் பறிமுதல்

இதைத்தொடர்ந்து தமிழகத்தின் பல்வேறு இடங்களில் உள்ள மீன் மார்க்கெட்டுகளில் அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். நேற்று கும்பகோணம் மீன் மார்க்கெட்டில் நடத்தப்பட்ட ஆய்வில் ஆபத்தான ரசாயனம் கலந்து விற்பனை செய்யப்பட்ட 100 கிலோ மீன்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

மனித உடலை பதப்படுத்தும்

இந்நிலையில் சென்னையிலும் மனித உடலை பதப்படுத்த பயன்படுத்தப்படும் ஃபார்மலின் என்ற ரசாயனத்தை பயன்படுத்தி மீன்கள் விற்கப்படுவதாக புகார் எழுந்தது. இதையடுத்து காசிமேட்டில் அதிகாரிகள் இரண்டாவது நாளாக இன்று சோதனை நடத்தி வருகின்றனர்.

மக்கள் பீதி

காசிமேடு சந்தையில் இருந்து சென்னை நகரின் பல்வேறு பகுதிகளுக்கும் மீன்கள் விற்பனைக்கு வாங்கி செல்லப்படுகிறது. இதனால் மக்கள் பீதியடைந்துள்ளனர்.

-tamil.oneindia.com

TAGS: