8 வழி சாலை: இரண்டாம் கட்ட கருத்து கேட்பு கூட்டத்தில் இருந்து விவசாயிகள் வெளிநடப்பு

8 வழி பசுமை சாலை திட்டத்திற்காக இரண்டாம் கட்ட கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்று வருகிறது. ஒரு சில விவசாயிகள் தவிர பெரும்பாலான விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

சேலம் – சென்னை இடையே அமையவுள்ள 8 வழி பசுமை சாலை திட்டத்திற்கு நிலம் அளவீடு செய்யும் பணி முடிந்த நிலையில் கடந்த 6 ம் தேதி முதல்கட்ட கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது. இந்நிலையில் இன்றைய தினம் இரண்டாம்கட்ட கருத்து கேட்பு கூட்டம் இன்று சேலத்தில் நடைபெற்றது.

8 வழி பசுமை சாலை திட்டத்திற்காக விவசாயிகளிடம் இரண்டாம் கட்டமாக நடத்தப்படும் இக்கருத்து கேட்பு கூட்டத்தில் அடிமலைபுதூர், ஆச்சாங்குட்டப்பட்டி, அரமனூர், குப்பனூர், கத்திரிபட்டி, அயோத்தியாபட்டினம், மாசிநாயக்கன்பட்டி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த 208 விவசாயிகளுக்கு அரசாணை அனுப்பப்பட்டிருந்தது.

8 வழி சாலை

இதில் ஏராளமான விவசாயிகள் கலந்துகொண்டு தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்தநிலையில் குப்பனூர் பகுதியை சேர்ந்த கருத்து கேட்பு கூட்டத்தில் கலந்து கொண்ட விவசாயிகள் சுமார் 30 பேர் திடீரென்று வெளிநடப்பு செய்து, கூட்டம் நடைபெறும் திருமண மண்டபத்தின் வாசலில் நின்று பசுமை சாலை திட்டத்தை கைவிடக்கோரி கோஷங்கள் எழுப்பினர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.

இது குறித்து விவசாயிகள் கூறும்போது, கருத்து கேட்பு கூட்டம் என்ற பெயரில் ஒவ்வொரு விவசாயிகளையும் தனித்தனியாக கைதிகள் போல் விசாரணை செய்வதாக குற்றம் சாட்டினர். இந்த கருத்து கேட்பு அனைத்து விவசாயிகளையும் ஒன்று திரட்டி பொதுவாக கேட்க வேண்டும் என்றும் அவர்கள் கூறினர்.

இழப்பீடு தொகை குறித்து முதலமைச்சர் மற்றும் ஒவ்வொரு மாவட்ட ஆட்சியர்களும் முரண்பாடான தொகையை அறிவிப்பதாகவும், அதிக அளவிகான இழப்பீடு தொகை தருவதாகவும் ஆசை வார்த்தை கூறி ஏமாற்றுவதாக குற்றம் சாட்டிய விவசாயிகள், இழப்பீடு தொகை குறித்து சர்வே எண்வாரியாக அரசிதழில் வெளியிட வேண்டும் என்று கேட்டுக்கொண்டனர். தங்களது கோரிக்கை முறையாக ஏற்கப்படாததால் கருத்துக்கணிப்பு கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்துள்ளதாக அவர்கள் தெரிவித்தனர். -BBC_Tamil

TAGS: