”என் பதின்பருவத்தை கரும்பு தோட்டத்தில் கொத்தடிமையாக வேலை செய்து தொலைத்துவிட்டேன். என் கல்வி, என் குடும்பம், என் சுதந்திரம் என எல்லாம் வெறும் ரூ.50,000 கடனுக்கு அடகுவைக்கப்பட்டது,” மூன்று ஆண்டுகளாக வெளியுலகத்தைப் பார்க்காமல் கொத்தடிமையாக வேலைசெய்த 22 வயது முருகேசனின் வார்த்தைகள் இவை.
மீட்கப்பட்ட நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு, முருகேசன் திருவள்ளூர் மாவட்ட நிர்வாகத்தின் கொத்தடிமை கண்காணிப்பு குழுவின் உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார். கொத்தடிமையாக வேலைக்கு செல்லவதை எதிர்த்து விழிப்புணர்வு ஊட்டுவது, மீண்டுவந்தவர்களுக்கு நிவாரணத்தொகை பெற்று கொடுப்பது என தன்னார்வலராக மாறியுள்ளார்.
வீடு கட்டிய கடனுக்காக அடிமையான குடும்பம்
திருவள்ளூர் மாவட்டத்தில் பொன்பாடி கிராமத்தில் விவசாயக்கூலி குடும்பத்தை சேர்ந்த முருகேசன், அவரது தாய்,தந்தை மற்றும் அக்காவின் குடும்பத்தினர் என ஒன்பது நபர்கள், தங்களுக்கென ஒரு அறை கொண்ட வீட்டை கட்டுவதற்காக வாங்கிய ரூ.50,000 கடனுக்காக ஸ்ரீராமலு என்பவரிடம் மூன்று ஆண்டுகளாக கொத்தடிமையாக வேலைசெய்ய கட்டாயப்படுத்தப்பட்டதாக கூறுகிறார்.
பள்ளிப்படிப்பை பாதியில் விட்டு 15வயதில் வேலைக்குபோன முருகேசன் தனது 17வயதுவரை அடிமையாக இருந்தார். ”எங்களின் வீடு கட்டப்பட்டு, கதவு,ஜன்னல் கூட வைக்கவில்லை. கடனை முடித்துவிட்டு புதுவீட்டுக்கு போகலாம் எனக்கூறி கரும்புதோட்டத்தின் முதலாளி வேலைக்கு கூட்டிச்சென்றார். எத்தனனை நாட்கள் வேலை செய்யவேண்டும், எப்போது விடுவிக்கப்படுவோம் என்ற எதுவும் சொல்லவில்லை. நாங்கள் ஏழையாக இருந்ததால், கடனை அடைக்கும்வரை பேசமுடியாது என்று எண்ணினோம். எங்களுக்கு அப்போது விழிப்புணர்வு இல்லை. வங்கியில் கடன் வாங்குவதற்கும் பயம், அதனால் வேலைக்குப் போனோம்,” என வெள்ளந்தியாக பேசுகிறார் முருகேசன்.
”எங்கள் ஒன்பது நபர்களுக்கும் சேர்த்து ரூ.500 மாத சம்பளம் கொடுப்பதாக சொன்னார், இருபது கிலோ அரிசியும் கொடுக்கப்பட்டது. காலை முதல் இரவு வரை வேலைசெய்துகொண்டே இருப்போம். என்ன நாள், என்ன கிழமை, என்ன மாதம் என எதுவும் எங்களுக்கு தெரியாது. மூன்று ஆண்டுகள் எப்படி சென்றது என்பதே எங்களுக்கு தெரியாது. நான்கு மணி நேரம் மட்டுமே தூங்குவோம். சில நாட்களில் தூங்காமல் வேலைசெய்யவேண்டிய நிலையும் இருந்தது. காட்டு வேலையோடு முதலாளியின் வீட்டுவேலையும் செய்ய நிர்ப்பந்திக்கப்பட்டோம்,” என்கிறார் முருகேசன்.
”வெளியுலகத்தைப் பார்க்கவில்லை”
மூன்று ஆண்டுகளாக வெளியுலகத்தைப் பாரக்கவில்லை என்று கூறும் முருகேசன், ”தலைமுடியை நாங்களாகவே வெட்டிக்கொள்ள வேண்டும். சவரம் செய்யக்கூட வெளியே செல்லஅனுமதி இல்லை. பழைய, கிழிந்த ஆடைகளை எங்களுக்கு கொடுத்தார்கள். சில நாட்களுக்கு ஒரு முறை என் அப்பா மட்டும் கரும்புதோட்டத்திற்கு அருகில் உள்ள கடையில் சமையல் பொருட்கள் வாங்க அனுமதிக்கப்பட்டர், அதுவும் கண்காணிக்க ஆட்கள் இருந்ததால், யாரிடமும் பேசமுடியாத நிலை. காட்டுவாசிகள் போல வாழ்ந்தோம். எங்கள் வாழ்க்கை முழுவதும் அடிமையாகவே இருக்கப்போகிறோம் என்ற துயரத்தில் இருந்தோம். உடல்நிலை மோசமானாலும், வேலைசெய்ய கட்டாயப்படுத்தப்பட்டோம்,” என்றார்.
”கடந்த மூன்று ஆண்டுகளாகத்தான் நாங்கள் சுதந்திரமாக இருக்கிறோம். இன்னும்கூட கொத்தடிமையாக வாழ்ந்த நாட்களின் காயங்கள் ஆறவில்லை. அச்சம் தீரவில்லை. வழக்கு நடந்துவருகிறது என்பதால் இன்னும் பயத்தில் இருக்கிறோம். என் சகோதரியின் பிரசவத்திற்காக மருத்துவமனை செல்லக்கூட அனுமதிக்கவில்லை; பழைய சம்பவங்களை நினைக்கும்போது கொடுமையான வாழ்க்கையில் இருந்து நாங்கள் மீண்டோம் என்பது ஆச்சரியமாக உள்ளது” என்கிறார் முருகேசன்.
கொத்தடிமை முறையை ஒழிக்கும் பணி
கொத்தடிமை கண்காணிப்பு குழுவில் இருப்பது பற்றி கேட்டபோது அவரது முகத்தில் சின்ன சிரிப்பை பார்க்கமுடிந்தது. ”கொத்தடிமையாக வேலைக்கு போவதற்கு முன்னர், நான் ஏழாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தேன். அரையாண்டுத் தேர்வில் முதல் ரேங்க் வாங்கியிருந்தேன். ஆனால், வேலைக்கு போனதால் படிப்பு பாதியில் தடைபட்டது. என்னை போல யாரும் பள்ளிப்படிப்பை விட்டுவிடக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறேன். எங்கள் கிராமத்தில் பள்ளிக்கு குழந்தைகளை அனுப்பாமல் இருந்த பத்து குடும்பங்களைப் பற்றி தகவல் சேகரித்தேன். பள்ளித்தலைமை ஆசிரியரிடம் பேசி, மீண்டும் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பிவைத்தேன். நானே மீண்டும் பள்ளிக்கு போவது போல உணர்ந்தேன்,”என்கிறார் முருகேசன்.
கொத்தடிமை முறையை ஒழிக்க கடந்த 16 ஆண்டுகளாக இந்தியாவில் வேலைசெய்துவரும் இன்டர்நேஷனல் ஜஸ்டிஸ் மிஷன் என்ற அமெரிக்க தொண்டு நிறுவன ஊழியர்கள் மற்றும் திருவள்ளூர் மாவட்ட நிர்வாக அதிகாரிகளால் முருகேசனின் குடும்பம் மீட்கப்பட்டது.
”முருகேசனின் குடும்ப உறவினர் ஒருவர் கொடுத்த தகவலின் பேரில்தான் இவர்களை கண்டுபிடித்தோம். அரசு அதிகாரிகளின் உதவியுடன் ஒன்பது பேரையும் மீட்டு அவர்களின் மறுவாழ்வுக்கு உதவிவருகிறோம். கொத்தடிமை வாழ்க்கையில் இருந்து விடுவிக்கப்பட்ட சமயத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்களில் முருகேசன் மற்றும் அவரது குடும்பத்தினர் உடல் மெலிந்து, களைப்புற்று இருப்பதைப் பார்க்கமுடியும். அடிப்படைவசதிகள் இல்லாமல் அவர்கள் வாழ்ந்தனர் என்பதை அறியமுடிந்தது. அவர்களின் வழக்கு நடந்துவருகிறது. ஆனால் தற்போதுகூட அவர்களால் கோர்வையாக அவர்களுக்கு நடந்த அநீதிகளை சொல்லத்தெரியவில்லை. பலமுறை ஆலோசனை அளித்து, நம்பிக்கை கொடுத்துவருகிறோம்,”என்கிறார் இன்டர்நேஷனல் ஜஸ்டிஸ் மிஷன் அமைப்பைச் சேர்ந்த ஷரோன்.
”ஏழை குடும்பங்களின் பயத்தை பயன்படுத்துகிறார்கள்”
முருகேசன் குடும்பத்தைப் போல வாங்கிய கடனை தீர்க்கமுடியாமல் இருக்கும் ஏழை குடும்பங்கள் பலர் கொத்தடிமையாக சில ஆண்டுகள் வேலைசெய்துவிட்டால், கடன் தீர்ந்துவிடும் என்று நம்புகிறார்கள் என்கிறார் அவர்.
”ஏழைமக்களின் அறியாமையைப் பயன்படுத்தி முகவர்களின் உதவியுடன் பண்ணை மற்றும் ஆலை முதலாளிகள் இவர்களை சுரண்டுகிறார்கள். கொத்தடிமைக்கு எதிராக விழிப்புணர்வு நிகழ்சிகளை நடத்தும் பல இடங்களிலும் முருகேசன் குடும்பத்திற்கு நேர்ந்ததைப் போன்ற சம்பவங்களை கேட்டுள்ளோம். ஒரு சில தொழிலாளர்கள் தண்ணீர் குடிக்க கூட அனுமதி வாங்கிப்போக வேண்டிய சூழலில் வேலைசெய்துள்ளனர்,”என்றார்.
தமிழகத்தில் கொத்தடிமையில் இருந்து மீட்கப்பட்டவர்கள் குறித்து பேசிய அவர், ”தகவல் அறியும் உரிமைச்சட்டத்தில் எங்களுக்கு கிடைத்த தகவலின்படி 2003 முதல் 2018 ஜூன் மாதம் வரை, தமிழகத்தில் சுமார் 7,000க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கொத்தடிமை முறையில் இருந்து எங்களைப் போன்ற அமைப்புகள் மற்றும் அரசுஅதிகாரிகள் மூலம் மீட்கப்பட்டுள்ளனர், 261வழக்குகள் பதிவாகியுள்ளன. கொத்தடிமை முறை விரைவில் ஒழியவேண்டும் என்பதற்காக அரசோடு இணைந்து விழிப்புணர்வு நிகழ்சிகளை நடத்துகிறோம். கொத்தடிமையாக இருந்தவர்கள் வாழ்கையில் முன்னேறிய கதைகளை வெளிச்சத்திற்கு கொண்டுவருகிறோம்,”என்றார்.
”கொத்தடிமை தொழிலாளர்களை கணக்கெடுக்கும் பணி தொடக்கம்”
கொத்தடிமை முறை ஒழிப்பதற்கான சட்டம் 1976ல் கொண்டுவரப்பட்டாலும், தற்போதும் அடிமைமுறை தொடர்வதற்கான காரணங்கள் என்ன என்றும் இந்த பிரச்சினையை தீர்க்க தமிழகஅரசு எடுத்துவரும் நடவடிக்கைகள் குறித்தும் தொழிலாளர் நலத்துறையின் முதன்மைசெயலர் மங்கத் ராம் ஷர்மா பிபிசி தமிழ் கேட்டறிந்தது.
”கொத்தடிமை முறையில் யாரவது சிக்கியிருந்தால் தகவல் தெரிந்ததும் அவர்களை மீட்கிறோம். மீட்ட நபர்களுக்கு உடனடியாக வழக்கு பதிவு செய்து, பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவித்தொகை கிடைக்க ஏற்பாடு செய்கிறோம். தற்போது, தமிழகத்தில் கொத்தடிமைமுறை நிலவ வாய்ப்புள்ள 11 மாவட்டங்களை கண்டறிந்துள்ளோம். காஞ்சிபுரம், திருவள்ளூர்,திருவண்ணாமலை,வேலூர்,புதுக்கோட்டை, சேலம்,தஞ்சாவூர்,ஈரோடு,திருச்சி,நாமக்கல் மற்றும் விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் கொத்தடிமை தொழிலாளர்கள் குறித்த கணக்கெடுப்பு செய்யவுள்ளோம். செங்கல் சூளை, அரிசிஆலை,மரம் வெட்டும் தொழில் மற்றும் விவசாய கூலி போன்ற தொழில்களில் பெரும்பாலும் கொத்தடிமை முறை பின்பற்றப்படுகிறது,” என்றார்.
கடந்த இரண்டு ஆண்டுகளில் 418 கொத்தடிமை தொழிலாளர்கள் மீட்கப்பட்டுள்ளதாக கூறும் மங்கத் ஷர்மா ஒவ்வொரு மாவட்டத்திலும் கொத்தடிமை தொழிலாளர்களை கண்டறிந்து அவர்களை மீட்பதற்கும், அவர்களுக்கான மறுவாழ்வு திட்டங்களை செயல்படுத்தவும் அதிகாரிகளுக்கு கடந்த மூன்று மாதங்களாக பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது என்று குறிப்பிட்டார். -BBC_Tamil