கமல்ஹாசனை ஆண்டவரே என்றுதான் அழைக்க வேண்டுமாம்.. தொண்டர்களுக்கு துண்டு பிரசுரம் கொடுத்த ம.நீ.ம

சென்னை: நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு தேர்தல் ஆணையம் சமீபத்தில் அங்கீகாரம் வழங்கியது. இதற்கு பிறகு முதல் முறையாக, ஆழ்வார்பேட்டையிலுள்ள கட்சி அலுவலகத்தில் இன்று அக்கட்சி கொடியை ஏற்றினார் நடிகரும், மக்கள் நீதி மய்யம் தலைவருமான கமல்ஹாசன்.

இதன்பிறகு, மக்கள் நீதி மய்யத்தின் தற்காலிக உயர்நிலைக்குழு கலைக்கப்படுவதாக நடிகர் கமல்ஹாசன் அறிவித்தார். இதனிடையே, கமல்ஹாசன் வருகையால் ஆழ்வார்பேட்டை சிக்னல் முதல் சுற்றிலுமுள்ள இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள் அவதிப்பட்டனர்.

இது ஒருபக்கம் என்றால், கட்சி அலுவலகத்திற்கு வெளியே கூடிய தொண்டர்கள் வாழ்த்து கோஷம் போடுவது எப்படி என்பதற்காக துண்டு பிரசுரங்களை அடித்து வினியோகித்துள்ளனர் கட்சி நிர்வாகிகள்.

ஆண்டவரே ஆள வாங்க

ஒருவர் இப்படி சொல்ல வேண்டும், அதை கேட்டு அனைவரும் சேர்ந்து இப்படி சொல்ல வேண்டும் என்று வகை பிரித்து அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதல் வரியில், ஒருவர் இப்படி சொல்வாராம்: ஆள வாங்க.. ஆள வாங்க ஆழ்வார்பேட்டை ஆண்டவரே. இதையடுத்து அனைவரும் சேர்ந்து இப்படி சொல்ல வேண்டுமாம்: ஆழ்வார்பேட்டை ஆண்டவரே ஆள வாங்க.. ஆள வாங்க. இப்படியாக 8 வகை கோஷங்களை எழுதி கொடுத்துள்ளனர்.

தனி நபர் துதி

இதில் மற்றவற்றையாவது பொறுத்துக்கொள்ளலாம். ஆழ்வார்பேட்டை ஆண்டவரே என தனி மனிதனை கடவுளுக்கு நிகராக வைத்து கோஷமிட கட்சி நிர்வாகிகளே துண்டு பிரசுரம் வினியோகித்துள்ளதுதான் மக்கள் நீதி மய்யம் கட்சி குறித்தான ஐயப்பாடுகளை அதிகரித்துள்ளது.

தனித்துவ கட்சி

தனி மனித துதி, ஊழல், பொதுமக்களுக்கு இடையூறு செய்தல் போன்ற செயல்பாடுகளில் இருந்து மாறுபட்டதாக இருக்க வேண்டும் என்பதுதான் மக்கள் நீதி மய்யம் மீதான நடுநிலை மக்கள் எதிர்பார்ப்பாக இருந்தது. கமல்ஹாசன் அப்படிப்பட்டவரான தோற்றத்தையே மக்களிடம் காட்டி வந்தார். ஆனால், டிராபிக் ஜாம் செய்வது, தனி நபர் துதி பாட துண்டு பிரசுரம் கொடுப்பது என தமிழக பாணி பிற அரசியல் கட்சிகளை போல மக்கள் நீதி மய்யம் செய்ல்படுகிறதோ என்று நடுநிலையாளர்கள் வருத்தப்படுகிறார்கள்.

கிண்டல்கள்

அதிமுக, திமுகவினர் நடத்தும் கட்சி கூட்டங்கள், ஆர்ப்பாட்டங்களிலும், கட்சியினர் கோஷம் எழுப்புவர். ஆனால் இப்படி கட்சியே துண்டு பிரசுரம் கொடுத்து அதன்படி கோஷம் போடுவது இல்லை. அவர்கள் பழகிவிட்டார்கள், இது புதுக் கட்சியில்லையா, அதனால்தான் பழக்குகிறார்கள் என்று நமட்டு சிரிப்பு சிரிக்கிறார்கள் மூத்த பத்திரிகையாளர்கள். வார இறுதி நாளில் பிக்பாஸ் வீட்டில் உள்ளோரின் தவறுகளை சுட்டி காட்டினால் மட்டும்போதாது, கட்சியினரின் தவறுகளை கமல்ஹாசன் சுட்டிகாட்ட வேண்டியதும் காலத்தின் கட்டாயம்தான்போலும்.

-tamil.oneindia.com

TAGS: