கோவை நரசிபுரத்தில் தனியார் கல்லூரியில் பேரிடர் மேலாண்மை பயிற்சியின் போது மாணவி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோவையில் தனியார் கலை அறிவியல் கல்லூரி இயங்கிவருகிறது. இந்நிலையில், அந்தக் கல்லூரியின் நாட்டுநலப் பணித்திட்டம் சார்பாக, பேரிடர் மேலாண்மைப் பயிற்சி நடைபெற்றிருக்கிறது. அந்த கல்லூரியில் பி.பி.ஏ இரண்டாம் ஆண்டு பயின்றுவந்த லோகேஸ்வரி என்ற மாணவி, கல்லூரியில் பேரிடர் மேலாண்மை பயிற்சியின் போது 2-வது மாடியில் இருந்து பாதுகாப்பு கயிறு கட்டாமல் பயிற்சியாளர் தள்ளியதில் மாணவி லோகேஸ்வரி உயிரிழந்ததாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாணவியை பிடிப்பதற்காக மாணவர்கள் வலையுடன் இருந்தபோது சன்ஷேடில் அடிபட்டு உயிரிழந்துவிட்டார். மாணவி குதிப்பதற்கு முன்னதாக பயிற்சியாளர் அவரை கீழே தள்ளும் காட்சிகள் அடங்கிய வீடியோ வெளியாகியுள்ளது. மாணவி எதிர்பாராத விதமாக சன்ஷேடில் மோதி கீழே விழுந்தார். அவருடைய தலைப்பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது.
இதனையடுத்து அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் செல்லும் வழியில் அவரது உயிர் பிரிந்தது. இச்சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
-athirvu.in