ஆரணி அருகே கண்ணமங்கலத்தில் சிலை கடத்தலில் ஈடுபட்ட 4 இளைஞர்கள் கைது

ஆரணி: ஆரணி அருகே கண்ணமங்கலத்தில் அம்மன் சிலையைக் கடத்தி விற்பனை செய்ய முயன்ற 4 இளைஞர்களை போலீஸார் கைது செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி வட்டம் கண்ணமங்கலத்தில் சிலர் சிலை கடத்தல் சம்பவங்களில் ஈடுபடுவதாகவும், கிராமத்தில் சிலர் மர்மமான முறையில் சந்தேகப்படும்படியாக நடமாடுவதாகவும் காட்டுகாநல்லூர் கிராம நிர்வாக அலுவலர் முனிவேல் கண்ணமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

அலுவலரின் சிலை கடத்தல் புகாரின் பேரில், ஆரணி டிஎஸ்பி செந்தில் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு போலீஸார் நடத்திய விசாரணையில், கண்ணமங்கலத்தைச் சேர்ந்த கணேசன் மகன் கோகுலன்(29), முருகன் மகன் அரிராஜா(26), துவரந்தல் கிராமத்தைச் சேர்ந்த விஸ்வநாதன் மகன் தினேஷ்(24), அமிர்தி நாகநதியைச் சேர்ந்த லோகு மகன் திருமலை(27) ஆகிய நான்கு பேர் சிலை கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்டதாக நேற்று சனிக்கிழமை இரவு கைது செய்யப்பட்டனர்.

இந்த 4 பேரும் புவனேஸ்வரி அம்மன் வெங்கலச் சிலையைக் கடத்திவந்து கண்ணமங்கலத்தில் விற்பனை செய்ய முயன்றதாகவும் அதற்குள் போலீஸாரிடம் சிக்கிக்கொண்டுள்ளனர். இவர்களிடம் இருந்து புவனேஸ்வரி அம்மன் சிலை ஒன்று பறிமுதல் செய்யப்பட்டது. இந்த சிலை எந்த கோயிலில் இருந்து கடத்தப்பட்டது என்பது இன்னும் தெரியவில்லை.

சிலை கடத்தலில் கைது செய்யப்பட்ட இந்த 4 பேரும் ஆரணி நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டனர்.

அண்மையில் தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் சிலை கடத்தல் சம்பங்களும் சிலை கடத்தல்காரர்களின் கைது நடவடிக்கைகளும் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

tamil.oneindia.com

TAGS: