பெங்களூரு, இந்தியா முழுவதும் குழந்தை கடத்தல், பலாத்காரம் மற்றும் மதவாத மோதல்கள் தொடர்பாக வாட்ஸ்-அப்பில் பரவும் வதந்தியால் ஏற்படும் கும்பல் தாக்குதலில் அப்பாவி மக்கள் உயிரிழந்து வருகிறார்கள். போலிச் செய்திகளை நம்பி அப்பாவி மக்களை கொல்லும் துரதிஷ்டவசமான சம்பவம் தொடர்ந்து நடந்த வண்ணமே உள்ளது. இவ்விவகாரத்தில் மத்திய அரசின் எச்சரிக்கையை அடுத்து வாட்ஸ்-அப் நிறுவனம் முன்னெச்சரிக்கை நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது. இதற்கிடையே கும்பல் தாக்குதலில் உயிரிழப்பு என்ற துரதிஷ்டவசமான சம்பவம் தொடர்ந்து வருகிறது.
கர்நாடக மாநிலம் பிதார் மாவட்டத்தில் குழந்தை கடத்தல் வாட்ஸ்-அப் வதந்தியால் ஐதராபாத்தை சேர்ந்த என்ஜினியர் கொடூரமான முறையில் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார். அவருடன் சென்ற 4 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். பிதார் மாவட்டம் முர்கி கிராமம் வழியாக ஐதராபாத்தை என்ஜினியர் முகமது அசாம் (கூகுள் நிறுவனத்தில் பணியாற்றுகிறார்) கத்தாரில் இருந்த வந்த நண்பர் முகமது சலாம் மற்றும் உறவினர்களுடன் காரில் சென்றுள்ளார். கிராமத்தில் சாலை ஓரத்திலிருந்த கடையில் காரை நிறுத்தியுள்ளனர், அப்போது அங்குவந்த பள்ளி குழந்தைகளுக்கு கர்த்தாரில் இருந்து கொண்டுவந்த சாக்லேட்களை முகமது சலாம் வழங்கியுள்ளார். வெளிநாட்டில் இருந்து கொண்டுவந்த சாக்லேட்களை ஆசையுடன் கிராமத்தை சேர்ந்த குழந்தைகளுக்கு வழங்கியுள்ளார்.
ஆனால் குழந்தை கடத்தல் வாட்ஸ்-அப் வதந்தியை நம்பி, அவர்களை தவறாக நினைத்து கிராம மக்கள் தாக்கியுள்ளனர். இதனையடுத்து கிராம மக்கள் அவர்களை மோட்டார் சைக்கிளில் வேகமாக பின்தொடர்ந்து உள்ளனர். அப்போது கார் சாலையில் சென்ற மோட்டார் சைக்கிள் மற்றும் சாலை தடுப்பில் மோதி விபத்துக்குள் சிக்கியது. அவர்களை பொதுமக்கள் தாக்கியுள்ளனர். நூற்றுக்கணக்கான மக்கள் கூடியிருந்த அந்த இடத்தில் யாரும் அவர்களை காப்பாற்ற முன்வரவில்லை. இதுதொடர்பாக தகவல் தெரிந்ததும் போலீஸ் சம்பவ இடத்திற்கு விரைந்தது. அப்போது முகமது அசாம் உயிரிழந்துவிட்டார் என்பது தெரியவந்தது. மற்றவர்களை போலீஸ் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தது.
இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரித்து வரும் பிதார் போலீஸ் 30-க்கும் அதிகமானோரை கைது செய்து விசாரணையை மேற்கொண்டு வருகிறது.
முகமது அசாமின் சகோதரர் அக்ரம் பேசுகையில், “சுற்றிப்பார்ப்பதற்கே நாங்கள் வெளியே சென்றோம், அப்போது குழந்தைகளுக்கு வெளிநாட்டில் இருந்து கொண்டுவரப்பட்ட சாக்லேட் என கொடுத்தோம். ஆனால் அவர்களுடைய பெற்றோர்கள் என்ன நினைத்தார்கள் என்பது எங்களுக்கு தெரியாது, அவர்கள் எங்களை கடுமையாக தாக்கினார்கள். அவர்கள் எப்படி எங்களை கடத்தல்காரர்கள் என்று நினைக்கலாம்?” என்று கேள்வியை எழுப்பினார். மேலும் பேசுகையில் உயிரிழந்த என்னுடைய சகோதரன், 2 குழந்தைகளுக்கு தந்தை, என்ஜினியராக பணியாற்றினான். எல்லோரிடமும் அன்பாக பழகக்கூடியவன் என்று கண்ணீர் விட்டு அழுகிறார். தவறான செய்தியை நம்பி யாரையும் தாக்க வேண்டாம், சந்தேகம் நேரிட்டால் பொதுமக்கள் போலீசிடம் தகவல் தெரிவிக்கலாம் என்று கேட்டுக்கொள்ளப்பட்டாலும் இதுபோன்ற துயரச் சம்பவங்கள் நடைபெற்றுதான் வருகிறது. யோசனையின்றி பொதுமக்கள் நடத்திய தாக்குதல் ஒரு குடும்பம் இப்போது சிதைந்துள்ளது.
இவ்விவகாரத்தை தொடர்ந்து கண்காணித்து வருவதாக கூறியுள்ள கர்நாடக உள்துறை அமைச்சகம், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளது.
-dailythanthi.com