தமிழக அரசின் நெடுஞ்சாலைத்துறை தனியார் ஒப்பந்த நிறுவனமான எஸ்.பி.கே. நிறுவனத்தின் உரிமையாளர் செய்யாதுரைக்கு சொந்தமான சென்னை, அருப்புக்கோட்டை உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட இடங்களில் 60க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று காலை முதல் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். இந்த சோதனையின் போது மூட்டையாக பணமும் பெட்டி பெட்டியாக தங்கமும், முக்கிய ஆவணங்களும் சிக்கியதாக தகவல் வந்துள்ளது. மேலும் பண மூட்டையுடன் பல கார்கள் தப்பிவிட்டன என்றும், அந்த கார்களை பிடிக்கும் நடவடிக்கையிலும் அதிகாரிகள் தீவிரம் காட்டி வருகின்றனர். சோதனையில் இருந்து தப்பிக்க பணமூட்டை, தங்கம், ஆவணங்களுடன் சென்னையில் பல கார்கள் உலா வந்துகொண்டிருக்கின்றன. இவற்றை அடையாளம் கண்டு மீட்பதில் அதிகாரிகளுக்கு சவாலாக அமைந்திருக்கிறது.
சேத்துப்பட்டில் உள்ள செய்யாதுரை உறவினர் வீட்டின் கார் பார்க்கில் இருந்து மட்டும் 30 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இவை அனைத்தும் 2 ஆயிரம் ரூபாய் புதிய நோட்டுகள் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னையில் வருமான வரி சோதனையில் சுமார் 100 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. பெரம்பூரில் 81 கிலோ தங்கமும், தாம்பரத்தில் 19 கிலோ தங்கமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. காலை முதல் நீடிக்கும் சோதனையில் கணக்கல் வராத 120 கோடி பணம் சிக்கியுள்ளதாக தகவல். இந்தப்பணம் அனைத்தும் புத்தம் புதிய 2 ஆயிரம் நோட்டுகள் ஆகும்.
பொதுவாகவே வருமான வரித்துறை சோதனையில் சோதனையின் முடிவில்தான் கைப்பற்றப்பட்ட பணம், தங்கம் ஆவணங்கள் குறித்த
விவரம் தெரியவரும். ஆனால் எஸ்.பி.கே. நிறுவனங்களில் சோதனை நடத்திய சில மணி நேரத்திலேயே மூட்டை மூட்டையாக பணமும் பெட்டி பெட்டியாக தங்கமும் சிக்கியதாக தகவல் வந்தது குறிப்பிடத்தக்கது. பாலவாக்கத்தில் ஒரு வீட்டில் நடைபெற்ற சோதனையில் ஏராளமான ஆவணங்கள் சிக்கியுள்ளன.
எஸ்.பி.கே. நிறுவனத்தின் இந்த சோதனை பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
-nakkheeran.in