சென்னை: மாற்றுத்திறனாளி சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த 17 பேர் மீதும் நீதிமன்ற வளாகத்தில் வக்கீல்கள் சரமாரியாக தாக்கினர். இதைத்தொடர்ந்து 17 பேரையும் பத்திரமாக சிறைக்கு அழைத்து செல்வது தொடர்பாக நீதிபதி தருமன் வழக்கறிஞர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.
சென்னை அயனாவரத்தில் வாய் பேச முடியாத காது கேளாத 11 வயது சிறுமி 15 பேரால் கடந்த 7 மாதங்களாக பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். மயக்க ஊசி போதை ஊசி போட்டும் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது அம்பலமானது.
இதுதொடர்பாக 17 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் 17 பேரும் சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் உள்ள மகிளா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களுக்கு வரும் 31ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது.
சரமாரி தாக்குதல்
இந்நிலையில் நீதிமன்றத்தில் இருந்து அவர்கள் 17 பேரையும் புழல் சிறைக்கு கொண்டு செல்ல போலீசார் ஆயத்தமாயினர். அப்போது நீதிமன்ற வளாகத்தில் இருந்த வழக்கறிஞர்கள் 17 பேர் மீதும் சரமாரியாக அடித்து உதைத்து தாக்குதல் நடத்தினர்.
நீதிமன்றத்தில் பதற்றம்
இதனால் நீதிமன்ற வளாகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து 17 பேரையும் பத்திரமாக மீட்டு வேனில் அமர வைத்தனர். அப்போதும் வழக்கறிஞர்கள் வேனை சூழ்ந்துகொண்டு தாக்க முயன்றதால் பதற்றம் ஏற்பட்டது.
போலீஸ் குவிப்பு
இதையடுத்து மகிளா நீதிமன்ற வளாகத்தில் பாதுகாப்புக்காக போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். 17 பேரையும் பத்திரமாக அழைத்து செல்வது தொடர்பாக வழக்கறிஞர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
நீதிபதி பேச்சுவார்த்தை
நீதிபதி தருமன், வழக்கறிஞர் சங்கத் தலைவர் மோகன கிருஷ்ணன் வழக்கறிஞர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றனர்.