”சேலத்தில் ராம ராஜ்ஜியம் நடப்பதாக நினைத்துக் கொண்டிருக்கிறேன். ஆனால் சந்துக்கடைகள் மூலமாக மது விற்பனை நடப்பதாக மக்களிடம் இருந்து புகார்களை பார்க்கும்போது என் நம்பிக்கை பொய்த்துவிட்டது. குற்றங்களை தடுக்காத இன்ஸ்பெக்டர்கள் மீது கடுமையான ஆக்ஷன் எடுக்கப்படும்,” என்று சேலம் போலீஸ் கமிஷனர் சங்கர் எச்சரித்துள்ளார்.
சேலம் மாநகரில் ரவுடிகளின் கொட்டத்தை ஒடுக்குவதற்கு மாநகர போலீஸ் கமிஷனர் சங்கர் உத்தரவிட்டுள்ளார். அதையடுத்து கடந்த பத்து நாள்களாக போலீசார் ரவுடிகளை கைது செய்வதில் தீவிரம் காட்டி வருகின்றனர். இந்த பரபர ஆக்ஷனில் கடந்த 9ம் தேதி 37 ரவுடிகள் உள்பட 57 பேரும், 12ம் தேதி 39 பேரும் கைது செய்யப்பட்டனர்.
இவர்களில் அன்னதானப்பட்டியைச் சேர்ந்த பிரபல ரவுடிகள் ஜவஹர், அறிவு என்கிற அறிவழகன், மணியனூர் வைத்தி, கி ச்சிப்பாளையத்தைச் சேர்ந்த திருநாவுக்கரசு, சுலைமான், ஜான், டெனிபா, மோசஸ், ஜீசஸ், சிலம்பரசன், விக்கி என்கிற வி க்னேஷ், ஜான்சன்பேட்டைச் சேர்ந்த சத்தியா என்கிற போட்டி சத்தியா உள்ளிட்டோரும் அடங்குவர்.
ஆனாலும், கட்டப்பஞ்சாயத்து, வியாபாரிகளை மிரட்டி பணம் பறிப்பு, சட்டவிரோத மது விற்பனை போன்ற குற்றங்கள் குறைந்தபாடில்லை.
இந்நிலையில் சேலம் மாநகர சட்டம் – ஒழுங்கு குறித்த மாதாந்திர ஆய்வுக்கூட்டம் போலீஸ் கமிஷனர் சங்கர் தலைமையில் நேற்று நடந்தது. துணை கமிஷனர்கள் சுப்புலட்சுமி, தங்கதுரை மற்றும் அனைத்து இன்ஸ்பெக்டர்களும் கலந்து கொண்டனர். கூட்டம் தொடங்கியது முதல் முடியும் வரை போலீஸ் கமிஷனர் டென்ஷன் மோடிலேயே இருந்ததாகச் சொல்கின்றனர் இன்ஸ்பெக்டர்கள்.
ஒருகட்டத்தில் அவர், ”நான் சொன்ன வேலைகளை யாருமே சரிவர செய்வதில்லை. இன்ஸ்பெக்டர்கள் கடமைக்காக பணியாற்றினால் எப்படி? ரவுடிகளை கைது செய்யச்சொன்னால் ஒன்றுக்கும் ஆகாத போகாத ஆள்களை எல்லாம் கைது செய்து கணக்குக் காட்டுகிறீர்கள்,” என விரக்தியும் கோபமும் கலந்த தொனியில் பேச ஆரம்பித்துள்ளார்.
”சேலம் மாநகரில் சட்டம் – ஒழுங்கு எல்லாம் சரியாக இருக்கிறது. இங்கு ஏதோ ராமராஜ்ஜியம் நடப்பதாக நான் நினைத்துக் கொண்டிருக்கிறேன். ஆனால் பொதுமக்களிடம் இருந்து என் மொபைலுக்கு வரும் புகார்களைப் பார்த்தால் அப்படி தெரியவில்லை. மதுபானங்களை சந்துக்கடைகளில் பதுக்கி விற்கின்றனர். அவர்களை கைது செய்யச்சொல்லி பொதுமக்கள் போராடும் நிலை உள்ளது.
உங்கள் பகுதியில் நடக்கும் குற்றங்களை தடுக்காவிட்டால் உங்களுக்குதான் அவமானம். மக்கள் இரவில் எந்தவித பயமுமின்றி நடமாட வேண்டும். இரவு நேரங்களில் மோட்டார் சைக்கிளில் ரோந்து போகச் சொன்னால் அதையும் யாரும் சரிவர செய்ய மாட்டேன் என்கிறீர்கள். குற்றங்களை தடுக்காத இன்ஸ்பெக்டர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்,” என இன்ஸ்பெக்டர்களை கொஞ்சம் காட்டமாகவே எச்சரித்து அனுப்பி உள்ளார்.
-nakkheeran.in