நிலம் ஆர்ஜிதம் செய்ய மக்களை துன்புறுத்துவதை கைவிடவேண்டும்!

சென்னை – சேலம் 8 வழி பசுமைச்சாலை திட்டத்துக்கு தடை கோரி சென்னை ஐகோர்ட்டில் பலர் வழக்கு தொடர்ந்துள்ளனர். இந்த வழக்கிற்கு, திட்ட இயக்குனர் கடந்த வாரம் பதில் மனு தாக்கல் செய்தார். அதில், ‘8 வழி பசுமைச்சாலை திட்டத்துக்கு, அனுமதிக் கேட்டு மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றம் அமைச்சகத்திடம் விண்ணப்பம் செய்துள்ளோம்’ என்று கூறியிருந்தார்.

மேலும், அந்த பதில் மனுவில், இந்த 8 வழிச்சாலை திட்டத்தினால், போக்குவரத்து நெரிசலையும், பயண நேரத்தையும் குறைக்கும் என்றும் கூறியிருந்தார்.

இந்த வழக்குகள் நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், பவானி சுப்பராயன் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, மத்திய அரசு தரப்பில் ஆஜரான உதவி சொலிசிட்டர் ஜெனரல் கார்த்திகேயன், ‘தமிழகத்தில் எந்த திட்டமாக இருந்தாலும், அதற்கு மக்கள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். இந்த வழக்கிற்கு மத்திய சாலை போக்குவரத்துத்துறை சார்பில் பதில் அளிக்க அவகாசம் அளிக்க வேண்டும்’ என்றார்.

இவரது கருத்துக்கு மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான வக்கீல்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ‘ஏற்கனவே சென்னை – சேலத்துக்கு போதுமான சாலைகள் உள்ளன. அதனால், இந்த 8 வழி பசுமைச்சாலை திட்டம் என்பது தேவையில்லாத ஒன்று. பசுமை வழிச்சாலை என்று கூறி பசுமையை அழிக்கின்றனர்.

இந்த திட்டத்தால் பயண நேரம் வெகுவாக குறையும் என்பதும் சாத்தியமில்லாத ஒன்று. இந்த திட்டத்துக்கு மத்திய சுற்றுச்சூழல் துறையின் அனுமதி பெறவில்லை‘ என்றனர்.

மேலும், 8 ஏக்கர் நிலம் வைத்துள்ள நில உரிமையாளரிடமிருந்து, சரிபாதியாக நிலத்தை குறுக்காக பிரித்து அதிகாரிகள் நிலஆர்ஜிதம் செய்துள்ளனர். இதனால் தனது ஒரு பகுதி நிலத்தில் இருந்த மற்றொரு பகுதிக்கு செல்ல பல கி.மீ., தூரம் சுற்றிச்செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அதிகாரிகள் தங்கள் விருப்பம் போல நிலத்தை ஆர்ஜிதம் செய்து வருகின்றனர். முன்னேற்பாடுகள் எதையும் செய்யவில்லை. எனவே இந்த திட்டத்துக்கு தடை விதிக்கவேண்டும்‘ என்றும் வக்கீல்கள் வாதிட்டனர்.

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள், அரசின் செயலுக்கு கடும் கண்டனம் தெரிவித்தனர். அவர்கள் கூறியதாவது:-

8 வழி பசுமைச்சாலையில் வாகனம் எவ்வளவு வேகத்தில் செல்லும்? என்பதில் தான் அரசு அக்கறை காட்டுகிறது. அதைவிட அங்குள்ள விவசாயிகளின் உணர்வுகளுக்கும், அவர்களின் நிலங்களுக்கும் அரசு மதிப்பளிக்க வேண்டும். இதுபோன்ற பெரிய திட்டங்கள் வரும்போது பொதுவாக எதிர்ப்பு வரத்தான் செய்யும். அதற்காக போலீஸ் பலத்தை பயன்படுத்தி வயதான முதியவர்களைக்கூட கீழே பிடித்து தள்ளிவிடுவதா?

அவர்களை துன்புறுத்தி விவசாய நிலத்தை கையகப்படுத்தும் நடவடிக்கைகளை தமிழக அரசு கைவிட வேண்டும்.

எதற்காக அரசு இவ்வளவு அவசரம் காட்டுகிறது?, அரசின் செயல் எங்களால் புரிந்துக்கொள்ள முடியவில்லை? இந்த செயல் கடும் கண்டனத்துக்குரியது. தமிழக அரசு காட்டும் இந்த அவசரத்தை பேனர்களை அப்புறப்படுத்துவதிலும், சட்டவிரோத ஆக்கிரமிப்பாளர்களை அப்புறப்படுத்துவதிலும் காட்ட வேண்டும்.

பசுமைச்சாலை திட்டத்துக்கு பல இடங்களில் பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர் என்றால் என்ன அர்த்தம்? முதலில் இந்த திட்டம் பற்றிய சரியான புரிதலை பொதுமக்களிடம் தமிழக அரசு முறையாக கொண்டு செல்லவில்லை என்றுதான் அர்த்தம்.

இந்த 8 வழி பசுமைச்சாலையில், விவசாயிகள் யாரும் சொகுசு கார்களில் பயணிக்கப் போவதில்லை. இந்த திட்டத்துக்காக நிலம் கையகப்படுத்தும்போது விவசாயிகள் அல்லது நில உரிமையாளர்கள் எக்காரணம் கொண்டும் துன்புறுத்தலுக்கு ஆளாகக்கூடாது.

ஏனெனில், நிலஆர்ஜிதம் தொடர்பாக மேற்கொள்ள வேண்டிய பணிகள் இன்னும் ஏராளமாக உள்ளதாக தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையம் தெரிவித்துள்ளது. மேலும், இந்த வழக்கில் மத்திய சாலை போக்குவரத்து துறையை சேர்ந்த அதிகாரிகள் யாரும் ஆஜராகவில்லை. அவர்கள் ஆஜராக வேண்டாமா?

இவ்வாறு நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.

அப்போது குறுக்கிட்ட, அட்வகேட் ஜெனரல் விஜய்நாராயண், ‘இந்த திட்டத்துக்காக நிலம் ஆர்ஜிதம் செய்யும்போது விவசாயிகள் அல்லது நில உரிமையாளர்கள் யாரும் துன்புறுத்தப்படமாட்டார்கள். இதுதொடர்பாக போலீசாருக்கும் உரிய அறிவுறுத்தல் வழங்கப்படும். தற்போது நிலத்தை அளவிடும் பணிதான் நடைபெற்று வருகிறது’ என்று உத்தரவாதம் அளித்து வாதிட்டார்.

இதைப்பதிவு செய்துகொண்ட நீதிபதிகள், ‘இந்த வழக்கிற்கு மத்திய தரைவழிப் போக்குவரத்து அமைச்சகம் வருகிற ஆகஸ்டு 2-ந்தேதிக்குள் பதிலளிக்க வேண்டும்’ என்று உத்தரவிட்டு விசாரணையைத் தள்ளி வைத்தனர்.

-dailythanthi.com

TAGS: