மும்பை: இந்தியர்களின் பணம் சுமார் ரூ.300 கோடி கேட்பாரற்று கிடப்பதாக சுவிஸ் நேஷனல் பாங்க் வெளியிட்ட தகவலில் குறிப்பிடப்பட்டுள்ளது. மூன்று இந்தியர்களுக்கு சொந்தமான பணம் அது என்று கூறப்படுகிறது.
பணத்திற்கு சொந்தக்காரர்களோ அல்லது அவர்களது வாரிசுதாரர்களோ உரிய ஆவணங்கள், சான்றிதழ்களை காண்பித்து ரூ.300 கோடியை திரும்ப பெற்றுச் செல்லலாம் என்று சுவிஸ் நேஷனல் பாங்க் அறிவித்துள்ளது.
உலக அளவில் நிதி சார்ந்த சொத்துகளை பாதுகாப்பாக வைத்திருப்பதற்கான நாடுகளில் ஒன்றாக சுவிட்சர்லாந்து கருதப்பட்டு வந்தது. இருப்பினும் ஸ்விஸ் வங்கிகளின் மூலம் நிகழும் வரி ஏய்ப்புகள் குறித்து உலக அளவில் எழுந்த சர்ச்சைகளைத் தொடர்ந்து சுவிட்சர்லாந்து தனது விதிமுறைகளை மாற்றியமைத்துள்ளது.
சுவிஸ் வங்கிகளில் இந்திய பணக்காரர்களுக்கு சொந்தமான பல ஆயிரம் கோடி ரூபாய் கருப்புப் பணம் பதுக்கப்பட்டுள்ளது. நாங்கள் ஆட்சிக்கு வந்தால் சுவிஸ் வங்கிகளில் உள்ள கருப்பு பணத்தை மீட்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று மோடி தலைமையிலான பாஜக தேர்தல் அறிக்கையாக வெளியிட்டது. தேர்தலில் வெற்றி பெற்று 2014 ஆம் ஆண்டு பாஜக ஆட்சி அமைந்தது.
கருப்புப் பணத்தை மீட்க மத்தியில் ஆளும் பாஜக அரசு பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டது. அதன் பலனாக பணம் முதலீடு செய்து இருப்பவர்களின் பெயர்களை சுவிஸ் வங்கிகள் வெளியிட்டன. ஆனால் அதில் எதிர்பார்த்த அளவுக்கு பலன் கிடைக்கவில்லை.
எனினும் பண மோசடி மற்றும் வரி ஏய்ப்பில் ஈடுபடுவோரின் சுவிஸ் வங்கி கணக்குகள் குறித்த விவரங்களை பிற நாடுகளுடன் பகிர்ந்துகொள்ளும் வகையில் தனது சட்டங்களையும் சுவிட்சர்லாந்து மாற்றியமைத்துள்ளது. இதுதொடர்பாக இந்தியாவுடனும் சுவிட்சர்லாந்து ஒப்பந்தம் செய்துகொண்டுள்ளது. சுவிஸ் தேசிய வங்கியின் சமீபத்திய புள்ளிவிபர கணக்குப்படி 2017ஆம் ஆண்டில் சுவிஸ் வங்கிகளில் இந்தியர்கள் வைத்திருக்கும் தொகை முன்பைவிட 50 சதவிகிதம் அதிகரித்து ரூ.7,000 கோடியாக உள்ளது.
சுவிஸ் வங்கிகளில் உள்ள இந்தியர்களின் பணம் முழுமையும் கருப்பு பணம் அல்ல என மத்திய அரசும் நிதி அமைச்சர் அருண் ஜெட்லியும் கருத்து தெரிவித்துள்ளார். சுவிஸ் வங்கிகளில் வைக்கப்பட்டுள்ள மொத்த பணத்தில் இந்தியர்களின் பங்களிப்பு 0.07 சதவீதம் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.
முதல்முறையாக கடந்த 2015ஆம் ஆண்டு சுவிஸ் நாட்டினர் மற்றும் இந்தியா உள்ளிட்ட வெளிநாட்டினரின் செயல்படாத கணக்குகளை உள்ளடக்கிய பட்டியலை சுவிஸ் வங்கிகள் வெளியிட்டன. செயல்படாத கணக்குகள் கண்டறியப்படுவதற்கு ஏற்ப இந்தப் பட்டியல் தொடர்ந்து புதுப்பிக்கப்பட்டு மூன்றாவது ஆண்டாக தற்பொழுது வெளியிடப்பட்டுள்ளது.
இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ள இந்தியர்களின் சுவிஸ் வங்கிக் கணக்குகளிலுள்ள ரூ.300 கோடி அளவுக்கான தொகையை உரிமைகோர இதுவரை யாரும் முன்வரவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. இதன்மூலம் இந்த வங்கிக் கணக்குகளின் உரிமையாளர்கள் அல்லது சட்டபூர்வ வாரிசுகள் தகுந்த ஆதாரங்களை சமர்ப்பித்து இந்தக் கணக்குகளிலுள்ள தொகையைப் பெற முடியும்.
2017ஆம் ஆண்டில் 40 செயல்படாத சுவிஸ் வங்கி கணக்குகளிலுள்ள தொகை இந்த முறையின்மூலம் வெற்றிகரமாக உரிமைகோரப்பட்டுள்ளதாக சுவிஸ் வங்கிகள் தெரிவித்துள்ளன. இருப்பினும் இந்தப் பட்டியலில் இன்னமும் 3,500 செயல்படாத சுவிஸ் வங்கி கணக்குகள் இடம்பெற்றுள்ளன.