திருப்பூர்: திருப்பூர் மாவட்டம், அவிநாசி அருகே திருமலைக்கவுண்டன்பாளையத்தில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் அருந்ததியர் சமுதாயத்தைச் சேர்ந்த பாப்பம்மாள் என்ற பெண் கடந்த திங்கள் கிழமை சத்துணவு திட்டத்தின் கிழ் சமையல் பணியாளராக பணியமர்த்தப்பட்டார்.
பாப்பம்மாள் அருந்ததியர் சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால் அப்பகுதி ஆதிக்க சாதியினர் சாதி காரணமாக பாப்பம்மாள் சத்துணவு சமைக்க எதிர்ப்பு தெரிவித்து அந்த ஊரைச் சேர்ந்த ஆதிக்க சாதியினர் பள்ளியை முற்றுகையிட்டுள்ளனர்.
தொடர்ந்து, அவினாசி ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் அருந்ததியர் சமுதாயத்தைச் சேர்ந்த அந்தப் பெண் பணியாளரை வேறு பள்ளிக்கு மாற்றி உத்தரவிட்டுள்ளார்.
இது சட்டவிரோதமான தீண்டாமை செயல் என்று கி.வீரமணி மற்றும் தீண்டாமை ஒழிப்பு அமைப்புகள் வலியுறுத்தினர். மேலும், சாதி காரணமாக பெண் பணியாளரை பணி செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்தவர்கள் மீது எஸ்சி. எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டப்படி கைது செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுத்தன.
இந்த சம்பவம் தொடர்பாக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தைச் சேர்ந்தவர்கள் பள்ளிக்குச் சென்று, பாப்பம்மாளுக்கு ஆதரவாக முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து, சப் கலெக்டர், டிஎஸ்பி, ஆதி திராவிடர் நலத்துறை அதிகாரிகள் பள்ளிக்குச் சென்று விசாரணை நடத்தினர். பின்னர், பாப்பம்மாவை சமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதாகவும் மீண்டும் அவர் இதே பள்ளியில் பணி செய்வார் என்று உறுதியளித்தனர்.
இதையடுத்து முற்றுகைப் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. இந்த பிரச்சனையில், சத்துணவு அமைப்பாளர் பாப்பம்மாளுக்கு அதே பள்ளியில் மீண்டும் பணி நியமனமும், சாதி இந்துக்கள் மீது வழக்குப் பதிவுகளும், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் மூலம் நடவடிக்கையும் எடுக்கப்படும்” என அரசு மற்றும் ஆதிதிராவிட நலத் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, சேவூர் காவல் நிலைய போலீஸார், அருந்ததியர் சமூக சத்துணவு பணியாளரை சாதி காரணமாக சமைக்க எதிர்ப்பு தெரிவித்த திருமலைக்கவுண்டன்பாளையத்தைச் சேர்ந்த 75 பேர் மீது எஸ்சி, எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டப்படி வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த சம்பவம் திருமலைக்கவுண்டன்பாளையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், இந்தச் சம்பவம் தொடர்பாக, இயக்குனர் பா.ரஞ்சித் தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில், “சாதிஎன்பதுவிதி??? அப்படியா..?? இவுங்க அழுகைக்கு பரிதாபம்லாம் பட வேணாம். திரும்பவும் அந்த பள்ளிகூடத்தலதான் சமைக்கணும்.. என்ன பண்ணலாம் சொல்லுங்க ???? இவுங்கள இடமாற்றம் செய்த அரசு அதிகாரிய என்ன பண்ண போறோம்????” என்று கேள்வி எழுப்பியுள்ளார்