சேலம்: நேற்று சேலத்தில் கைது செய்யப்பட்ட நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்ட 9 பேர் தற்போது சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டு இருக்கிறார்கள்.
சென்னை-சேலம் இடையே அமைக்கபட உள்ள 8 வழி பசுமை சாலை திட்டத்திற்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். அதேபோல் சேலம் விமான நிலைய விரிவாக்க பணிகளுக்காக பெரிய அளவில் விவசாய நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டு வருகிறது.
இதற்காக கடந்த சில மாதங்களாக மக்கள் போராடி வருகிறார்கள். அதேபோல் இதற்கு எதிராக போராடுபவர்கள் அரசால் ஒடுக்கப்பட்டும் வருகின்றனர். இந்த நிலையில் இதுகுறித்து கருத்து கேட்பதற்காக கூமாங்காடு என்ற இடத்திற்கு சீமான் சென்றார். அப்போது அவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
இது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மொத்தமாக சீமான் உள்ளிட்ட 11 பேர் 3 பிரிவின் கீழ் கைது செய்யப்பட்டனர். அதன்பின், 2 பேர் சொந்த ஜாமீனில் வெளியானார்கள். சீமான் உள்ளிட்ட மீதமுள்ள 9 பேர் கோர்டில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
இந்தநிலையில் சீமான் உள்ளிட்ட 9 பேர் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டு இருக்கிறார்கள். 3 பிரிவுகளின் கீழ் 9 பேரும் சிறையில் அடைக்கப்பட்டு இருக்கிறார்கள்.