மேட்டூர்: மேட்டூர் அணை கடந்த 8 ஆண்டுகளில் இந்த ஆண்டு அதிகபட்சமான நீர் அளவை எட்டியுள்ளது விவசாயிகளிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இன்று இரவு மேட்டூர் அணை அதன் முழு கொள்ளளவை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கர்நாடகாவில் காவிரி ஆற்று நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்மழை பெய்ததால் கர்நாடகா அரசு கபினி கிருஷ்ணராஜ சாகர் அணையிலிருந்து தண்ணீர் திறந்துவிட்டது. இதையடுத்து மேட்டூர் அணையில் நீர்மட்டம் 102 அடியைத் தாண்டியபோது ஜூலை 19 ஆம் தேதி மேட்டூர் அணையிலிருந்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பாசனத்துக்காக தண்ணீர் திறந்துவிட்டார்.
தற்போது மேட்டூர் அணையிலிருந்து காவிரியில் பாசனத்துக்காக 20 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்துவிடப்படுகிறது. அதே நேரத்தில் கர்நாடகா அரசு கே.ஆர்.எஸ். அணையிலிருந்து 77 ஆயிரம் கன அடி நீரை திறந்துவிடப்பட்டுடுவருகிறது.
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து வருவதால் தற்போது மேட்டூர் அணையின் நீர் மட்டம் 117 அடியாக உள்ளது. ஐந்தாண்டுகளுக்குப் பிறகு இன்று இரவுக்குள் மேட்டூர் அணையின் முழு கொள்ளளவான 120 அடியை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த சூழலில் மேட்டூர் அணை இதுவரை எத்தனை முறை திறந்துவிடப்பட்டுள்ளது. கடந்த 8 ஆண்டுகளில் எத்தனை முறை நீர்மட்டம் 100 அடியை தாண்டியுள்ளது என்பதை சிறிது திரும்பிப் பார்ப்போம்.
இதுவரை மேட்டூர் அணை 85 முறை திறக்கப்பட்டுள்ளது. மேட்டூர் அணை கடந்த 8 ஆண்டுகளில் 2011 ஆம் ஆண்டு அதிகபட்சமாக 116.01 அடி தண்ணீர் நிரம்பியுள்ளது.
2013 மற்றும் 2014 ஆண்டுகளில் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 100 அடியைத் தாண்டியுள்ளது. 2015, 2016, 2017 ஆண்டுகளில் மேட்டூர் அணை 100 அடியை கூட எட்டவில்லை.

























