கேரளாவில் அராஜகம்.. தமிழக லாரி மீது சரமாரி கல்வீச்சு.. கிளீனர் பலி!

பாலக்காடு தமிழக லாரி மீது கேரளாவில் நடத்தப்பட்ட கல்வீச்சு சம்பவத்தில் கிளீனர் பரிதாபமாக உயிரிழந்தார்.

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்தும் ஜி.எஸ்.டி. வரம்பிற்குள் கொண்டு வந்து, அவற்றின் விலையை குறைக்க வேண்டும், நாடு முழுவதும் உள்ள சுங்கச்சாவடிகளை அகற்றி ஆண்டுக்கு ஒருமுறை சுங்கக்கட்டணம் வசூலிக்கும் முறையை அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 20ஆம் தேதி முதல் நாடு முழுவதும் லாரிகள் காலவரையற்ற வேலைநிறுத்தம் நடைபெற்று வருகிறது.

கடந்த 4 நாட்களாக நடைபெற்று வரும் போராட்டத்தால் காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அவற்றின் விலையும் கணிசமாக உயர்ந்துள்ளது.

கேரளா சென்ற லாரி

எனினும் மேட்டுப்பாளையத்தில் இருந்து கேரளாவிற்கு காய்கறிகள் ஏற்றிச்செல்லும் பெரும்பாலான லாரிகள் இயங்கிக் கொண்டிருக்கின்றன. இந்நிலையில் நேற்றிரவு காய்கறி ஏற்றிக்கொண்டு கேரள மாநிலம் ஆலப்புழா என்ற பகுதிக்கு மேட்டுப்பாளையத்தில் இருந்து லாரி ஒன்று சென்றுகொண்டிருந்தது.

தமிழக லாரி மீது கல்வீச்சு

கேரள மாநிலம் பாலக்காட்டை அடுத்த வாளையார் அருகே கஞ்சிக்கோடு பகுதியில் லாரி மீது கற்களை வீசித்தாக்குதல் நடத்தப்பட்டது. 10க்கும் மேற்பட்ட அடையாளம் தெரியாத நபர்கள் லாரி மீது சரமாரியாக கற்களை வீசினர்.

கிளீனர் உயிரிழப்பு

இந்த தாக்குதலில் லாரியில் கிளீனராக இருந்த முபாரக் பாட்ஷா என்பவர் பலத்த காயமடைந்தார். படுகாயமடைந்த கிளீனரைஅருகில் உள்ள மருத்துவமனைக்கு ஓட்டுனர் நூருல்லா கொண்டு சென்றார். மேல்சிகிச்சைக்காக பாலக்காடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே கிளீனர் பாட்ஷா உயிரிழந்தார்.

லாரி ஸ்ட்ரைக்

இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். லாரிகள் வேலைநிறுத்தம் நடைபெறும் சூழலில் லாரி இயக்கியதால் தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்தவர்

மேலும், உயிரிழந்தவரின் உடல் பிரேத பரிசோதனைக்காக பாலக்காடு அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. உயிரிழந்த கிளீனர் பாட்ஷா, கோவையை அடுத்த அன்னூர் பகுதியைச் சேர்ந்தவர் என்பதும் மிகவும் ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்தவர் என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

-tamil.oneindia.com

TAGS: