சென்னை: பரங்கிமலை ரயில் நிலையத்தின் அருகே இன்று காலை நடைபெற்ற விபத்தில் 5 பேர் உயிரிழந்துள்ள நிலையில், அங்கு ஒரு மாதத்தில் மட்டும் 20க்கும் மேற்பட்டோர் சுவர் மோதி பலியானதாக சில பயணிகள் முறையிட்டு வருகிறார்கள்.
சென்னை கடற்கரையில் இருந்து திருமால்பூர் சென்ற ரயிலில் படிக்கட்டில் தொங்கியபடி பயணித்தவர்களில் 4 பேர் தண்டவாளம் அருகே இருந்த தடுப்பு சுவர் மோதி பலியாகியுள்ளனர். பலர் படுகாயமடைந்தனர்.
இதுகுறித்து பயணிகள் சிலர் நிருபர்களிடம் கூறுகையில், நேற்று இரவும் இதேபோன்று இங்கு சம்பவம் நடந்து 2 பேர் பலியாகினர். சடலங்களை எடுத்து அனுப்பி வைக்க அதிகாரிகளுக்கு இரவு 9.30 ஆகிவிட்டது. எனவே இதுபற்றி உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கவில்லை என நினைக்கிறோம். அதையடுத்தாவது, இரவோடு, சுவரை அகற்றியிருக்க வேண்டும் என்றார் ஒரு இளம் பயணி.
ஒரு முதியவர் கூறிய தகவல் ஷாக் ரகம். கடந்த ஒரு மாதத்தில் மட்டும் இந்த சுவர் மோதி 20 பயணிகள் இங்கு கொல்லப்பட்டனர் என்றார். ஆனால் ரயில்வே நிர்வாகம் அவ்வாறு எந்த தகவலும் இல்லை என கூறியுள்ளது. ரயில்வே ஏடிஜிபி சைலேந்திர பாபு சம்பவ இடத்தை பார்வையிட்ட பிறகு கூறுகையில், இந்த சுவர் பல காலமாக அங்கேதான் உள்ளது. அதிக கூட்டம்தான் விபத்துக்கு காரணம். இந்த சுவரை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கிறோம்.
ஆனால், பாலங்களின் ஓரச்சுவர், மின் கம்பங்களிலும் பயணிகள் அடிபட வாய்ப்பு உள்ளது. எனவே டூவீலர் வாகனங்களில் செல்வோர் ஹெல்மெட் அணிவது கட்டாயம் என்பதை போல படிக்கட்டில் பயணிக்காமல் மக்கள் தங்களை பாதுகாக்க வேண்டியதும் அவசியம் என்றார்.