லக்னோ, உத்தரபிரதேச மாநிலத்தில் நேற்று முன்தினம் இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்ய தொடங்கியது. நேற்றும் மழை கொட்டி தீர்த்தது. இதனால் மதுரா, ஆக்ரா, மீரட், முசாபர்நகர், காசியாபாத், ஜான்சி உள்ளிட்ட பல்வேறு நகரங்கள் வெள்ளக்காடானது.
வீடு இடிந்தும், மின்னல் தாக்கியும், வெள்ளத்தில் சிக்கியும் மாநிலம் முழுவதும் கடந்த 2 நாட்களில் 43 பேர் இறந்தனர். பலர் காயம் அடைந்தனர். மதுராவில் அதிகபட்சமாக 19 செ.மீ. மழை பதிவானது. கனமழை மேலும் சில நாட்கள் நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்து இருக்கிறது.
இதையடுத்து மீட்பு மற்றும் நிவாரண பணிகளை முதல்–மந்திரி யோகி ஆதித்யநாத் முடுக்கி விட்டு உள்ளார். காயம் அடைந்தவர்களுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கவும், வீடு இழந்தவர்களை நிவாரண முகாம்களில் தங்கவைக்கவும், அவர்களுக்கு உணவு உள்ளிட்ட அத்தியாவசிய வசதிகளை செய்து கொடுக்கவும் அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார்.
-dailythanthi.com

























