கடலாக மாறிய காவிரி ஆறு!

தமிழகத்தில் 5ஆண்டுகளுக்கு பிறகு முழு கொள்ளளவை எட்டியுள்ள மேட்டூர் அணையை தொடர்ந்து காவிரியில் கரையை தொடும் அளவிற்கு கரைபுரண்டு ஓடுவதால் பொதுமக்கள் திரண்டு வருவதால் அங்கு விழா கோலம் பூண்டுள்ளது. மேட்டூர் அணையிலிருந்து திறந்துவிடப்படும் உபரி நீர் காவிரியில் பரந்து விரிந்து பாய்ந்து வரும் காட்சியை காண சுற்றுலா பயணிகள் மட்டுமின்றி உள்ளூர் வாசிகளும் குடும்பம் குடும்பமாக வந்து செல்கின்றனர். எனவே போதிய போலீஸ் பாதுகாப்பு கொடுத்து வருகிறார்கள்.

மாயனூர் கதவணை கரூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. ஆயிரத்து 230 மீட்டர் அகலம் கொண்ட இந்தக் கதவணையில் 98 மதகுகள் உள்ளன. கரூர் மாவட்டத்திலுள்ள 22ஆயிரம் ஏக்கர் விளைநிலங்கள் இந்தக் கதவணையில் தேக்கி வைக்கப்படும் தண்ணீர் மூலம் பாசன வசதி பெறுகின்றன. மாயனூர் கதவணைக்கு நீர்வரத்து ஒருலட்சம் கன அடியாக அதிகரிக்கும் என அதிகாரிகள் கூறுகின்றனர்.

காவிரி நீரால் கடல் போல் காட்சியளிக்கிறது முக்கொம்பு தடுப்பணை. டெல்டா பாசனத்திற்காக தண்ணீரை பிரித்து அனுப்பும் இடமாகவுள்ளது. முக்கொம்பு தடுப்பணையிலிருந்தே கொள்ளிடத்தில் திறக்கப்படும் தண்ணீரே தஞ்சை, திருவாரூர் மற்றும் கடைமடை பகுதி விளைநிலங்களை செழிப்படைய செய்கிறது.

முக்கொம்பு அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து வருவதால் சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. கொள்ளிடம் ஆற்றிலும் தண்ணீர் திறக்கப்படுவதால் அம்மா மண்டபம், கம்பரசம்பேட்டை தடுப்பணை, சிந்தாமணி படித்துறை உள்ளிட்ட இடங்களில் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இதனிடையே மேட்டூர் அணையிலிருந்து திறந்துவிடப்பட்டு வீணாகும் உபரி நீரை சேலம் மாவட்டத்தில் உள்ள ஏரி குளங்களில் நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேட்டூர் அணை 2013-ம் ஆண்டிற்கு பிறகு முழுகொள்ளவை எட்டியுள்ளது. அணை கடல் போல காட்சி அளிப்பதை காண சுற்றுலா பயணிகளின் வருகை நாளுக்கு நாள் அதிகரித்துவருவது குறிப்பிடத்தக்கது.

-nakkheeran.in

TAGS: