கன்னியாகுமரி: குமரி கடலில் 30 அடி உயரத்திற்கும் மேல் கடலலை எழும்பி அம்மாவட்ட மக்களை பயமுறுத்தி வருகிறது.
தமிழகம் மற்றும் புதுச்சேரி கடலோரப் பகுதிகளில் கடல் சீற்றமாக இருக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவிப்பினை வெளியிட்டு மீனவ பகுதி மக்களை எச்சரித்திருந்தது. அதன்படி, வள்ளவிளை, மார்த்தாண்டம் துறை, நீரோடி உள்ளிட்ட மீனவ பகுதிகளில் 35 அடிவரை அலைகள் எழும்பி வருகிறது.
இவ்வாறு கடலலை எழும்புவதால் தங்கள் வீடுகளுக்குள் கடல்நீர் உட்புகுந்துவிடுமோ என மீனவ மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். கடல் சீற்றம் அதிகமாக உள்ள காரணத்தினால் மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை. அதனால் இரயுமன்துறை முதல் நீரோடி வரை மீனவர்கள் மீன்பிடிக்க செல்லாமல் தங்களது படகுகளை கரையோரங்களில் கட்டி வைத்துள்ளனர். வள்ளவிளை, மார்த்தாண்டம் துறை, நீரோடி பகுதிகளிலுள்ள வீடுகளுக்குள்ளும் கடல் நீர் உட்புகா வண்ணம் தூண்டில் வளைவு அமைத்துத் தர வேண்டும் என மீனவ மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த 3 பகுதிகளுக்கும் தூண்டில் வளைவுகள் அமைக்கும் பணிகளுக்காக தமிழக அரசு 116 கோடி ரூபாய் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.