உத்தரபிரதேசத்தில் மழை விபத்து சம்பவங்களில் மேலும் 10 பேர் உயிரிழப்பு, பலி எண்ணிக்கை 80 ஆக உயர்வு

லக்னோ,  உத்தரபிரதேச மாநிலத்தில் கடந்த வாரம் முதல் இடைவிடாது கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. இதனால் ஆறுகள், கால்வாய்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு ஊர்களுக்குள் தண்ணீர் புகுந்து உள்ளது. தலைநகர் லக்னோ, ‌ஷரான்பூர், முசாபர்நகர், பரேலி உள்பட எண்ணற்ற மாவட்டங்கள் வெள்ளத்தில் தத்தளிக்கின்றன. பல்வேறு இடங்களில் வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டு உள்ளது. மேலும் பல இடங்களில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு இருப்பதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் முடங்கி விட்டது.

வீடுகளுக்குள் வெள்ள நீர் புகுந்ததால் உடைமைகளை இழந்ததோடு, இருப்பிட வசதியும் இன்றி மக்கள் தவித்து வருகின்றனர்.

மழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி கடந்த 4 நாட்களில் 70 பேர் உயிர் இழந்ததாக தகவல்கள் வெளியாகியது. மழை மற்றும் வெள்ளத்தால் பாதிப்புக்குள்ளான மாவட்டங்களில் மீட்பு பணிகளை துரிதமாக நடத்திட அதிகாரிகளுக்கு முதல்–மந்திரி யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார். மேலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான நிதி உதவிகளை செய்து கொடுக்கவும் அதிகாரிகளை அவர் வலியுறுத்தி இருக்கிறார். மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மாநிலத்தில் பலம் இழந்த வீடுகளில் இருப்பவர்களை வெளியேற்றும் பணியை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மீட்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது.

மாநில மீட்புகுழு கமிஷனர் சஞ்சய் பிரசாத் பேசுகையில், “உத்தரபிரதேச மாநிலத்தில் நேற்றில் இருந்து பல்வேறு பகுதிகளில் நேரிட்ட மழை தொடர்பான விபத்து சம்பவங்களில் 10 பேர் உயிரிழந்து உள்ளனர். இதுவரையில் 80 பேர் உயிரிழந்து உள்ளனர். 84 பேர் காயம் அடைந்துள்ளனர். 44 கால்நடைகள் உயிரிழந்து உள்ளது. 451 வீடுகள் சேதம் அடைந்துள்ளது,” என கூறியுள்ளார். மழையினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிதி மற்றும் மருத்துவ உதவிகளை வழங்கவும் அதிகாரிகளுக்கு மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

-dailythanthi.com

TAGS: