‘சிறுமிகளை பலாத்காரம் செய்தால் மரண தண்டனை’ விதிக்கும் மசோதா மக்களவையில் நிறைவேற்றம்

புதுடெல்லி, காஷ்மீரில் கடந்த ஜனவரி மாதம் கதுவா மாவட்டத்தை சேர்ந்த 8 வயது சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டு, கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடெங்கிலும் கடும் அதிர்வலையை ஏற்படுத்தியது. அதன்பின்னர் உத்தரபிரதேசம், பீகார் உள்ளிட்ட சில மாநிலங்களில் இதே போன்ற சம்பவங்கள் நிகழ்ந்தன. எனவே சிறுமிகளை பலாத்காரம் செய்யும் நபர்களுக்கு அதிக பட்சமாக மரண தண்டனை விதிக்கப்பட வேண்டும் என்கிற குரல் நாடு முழுவதும் எழுந்தது. இதையடுத்து, 12 வயதுக்கு உட்பட சிறுமிகளை பலாத்காரம் செய்யும் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்கும் வகையில் அவசர சட்டம் கொண்டு வரப்பட்டது.

மேலும் சிறுமிகள் பலாத்கார வழக்குகளை விரைவாக விசாரித்து தீர்ப்பு அளிக்கும் வகையில் நாடு முழுவதும் விரைவு சிறப்பு கோர்ட்டுகளை அமைத்திடவும் இந்த புதிய சட்டம் வழிவகை செய்கிறது.

அவசரச்சட்டத்துக்கு மாற்றாக திருத்த மசோதாவை மக்களவையில், மத்திய உள்துறை இணை அமைச்சர் கிரண் ரிஜிஜு கடந்த 23-ம் தேதி தாக்கல் செய்தார். இன்று இந்த மசோதா மீது 2 மணிநேரம் விவாதம் நடந்தது. இறுதியில் குரல் வாக்கெடுப்பின் மூலம்  சட்டத்திருத்த மசோதா நிறைவேறியது.

சட்டத்தின்படி, 12 வயதுக்கு உட்பட்ட சிறுமிகள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டால் ஆயுள் முழுவதும் சிறை தண்டனை அல்லது அதிகபட்சம் மரண தண்டனை விதிக்கப்படும். இது முன்பு 20 ஆண்டுகள் சிறை தண்டனை என இருந்தது.

மேலும் குற்றச்சாட்டுக்கு ஆளாகும் நபருக்கு முன்ஜாமீன் கிடைக்காது. இந்த வழக்கை 2 மாதத்துக்குள் விசாரித்து கோர்ட்டு தண்டனை அளிக்க வேண்டும். மேல்முறையீடு வழக்குகளை 6 மாதங்களில் முடிக்க வேண்டும். 16 வயதுக்கு உட்பட்ட சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்பவர்களுக்கு முன்பு இருந்த 10 ஆண்டுகள் சிறை தண்டனை தற்போது 20 ஆண்டுகளாக அதிகரிக்கப்பட்டு உள்ளது. குற்றத்தின் தன்மையின் அடிப்படையில் அதிகபட்சமாக ஆயுள் முழுவதும் சிறை தண்டனை விதிக்கப்பட வாய்ப்பு இருக்கிறது.

இதில் தொடர்புடைய குற்றவாளிகளுக்கும் முன்ஜாமீன் கிடைக்காது. பெண்களை கற்பழிக்கும் குற்றவாளிகளுக்கு முன்பு இருந்த 7 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை தற்போது 10 ஆண்டுகளாக அதிகரிக்கப்பட்டு உள்ளது. அதிகபட்சமாக ஆயுள் தண்டனையும் விதிக்கப்படும்.

-dailythanthi.com

TAGS: