ஆந்திராவை போல இரண்டாக பிரிகிறதா கர்நாடகா? கொடியேற்றி மிட்டாய் கொடுத்தாச்சில்ல

பெங்களூர்: ஆந்திராவை போல கர்நாடகாவையும் இரண்டாக பிரிக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுக்க துவங்கியுள்ளன.

தென் கர்நாடகாவில் பெங்களூர், மைசூர், தும்கூர் உள்ளிட்ட பகுதிகள் நீர் வளம் மற்றும் தொழில் வளத்தால் மேம்பட்டுள்ளன.

ஆனால், பெல்காம், பிஜாப்பூர், பீதர் உள்ளிட்ட வட கர்நாடக மாவட்டங்கள் தொழில் வளர்ச்சியின்றி காணப்படுகின்றன. வட கிழக்கு கர்நாடக மாநிலங்கள் கடும் வறட்சியால் குடிநீருக்கும் கஷ்டப்படும் சூழல் உள்ளது.

செழிப்பான மாவட்டங்கள்

தெற்கு, மேற்கு மலையோர மாவட்டங்கள் செழுமையாக உள்ள நிலையில், வட கிழக்கு மாவட்டங்கள் வறட்சியை போக்க இதுவரை எந்த அரசும் நடவடிக்கை எடுக்கவில்லை. தொழில் வளர்ச்சிக்கும் முன்னுரிமை தரவில்லை. இதையடுத்து வட கர்நாடகாவை தனி மாநிலமாக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் முணுமுணுப்பாக ஆரம்பித்து இப்போது, பெரும் கோஷமாக உருமாறத் தொடங்கியுள்ளது.

இணைந்த அமைப்புகள்

24 அமைப்புகளை ஒன்றாக்கி, வட கர்நாடகாவை தனி மாநிலமாக அறிவிக்க அமைப்பு ஒன்று உருவாகியுள்ளது. இதன் தலைவர் சோமசேகர் கொடாம்பரி கூறுகையில், மொத்தம் 13 வட கர்நாடக மாவட்டங்களை இணைத்து தனி மாநில அந்தஸ்து கேட்கிறோம். ஆகஸ்ஸட் 2ம் தேதி இதற்காக வட கர்நாடகாவில் பந்த் நடத்த உள்ளோம் என்றார்.

மடாதிபதிகள் கைகோர்த்தனர்

இதேபோல வட கர்நாடகாவை சேர்ந்த மடாதிபதிகள் இன்று பெல்காமிலுள்ள சட்டசபை கட்டிடம் எதிரேக அடையாள போராட்டம் நடத்தினர். மாற்றாந்தாய் மனப்பான்மையோடு வட கர்நாடக மாவட்டங்களை நடத்த கூடாது என அவர்கள் கோரிக்கைவிடுத்தனர். பாஜகவை சேர்நதவரும் ரெட்டி சகோதரர்களின் நண்பருமான முலக்கல்முரு எம்எல்ஏ ஸ்ரீராமலுவும் தனி மாநில கோரிக்கைக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.

கொடியேற்றல்

இதனிடையே பெல்காமில் இன்று, தனி மாநில கொடியை போராட்ட குழு ஏற்ற உள்ளதாக அறிவித்துள்ளது. கர்நாடகா தனக்காக ஒரு கொடியை சித்தராமையா ஆட்சி காலத்தில் அறிமுகம் செய்தது. ஆனால் இப்போது, வட கர்நாடக மக்கள், அவர்களுக்கு தனி கொடியை அறிவிக்க முற்பட்டுள்ளனர். இந்த பிரிவினை கோஷம் இந்திய அளவில் பரபரப்பாகியுள்ளது.

tamil.oneindia.com

TAGS: