அசாம் விவகாரம் உள்நாட்டு போருக்கு வழிவகுக்கும்: மோடி அரசு மீது மம்தா பானர்ஜி குற்றச்சாட்டு

புதுடெல்லி, அசாம் மாநிலத்தில் வசிப்போர் குறித்த தேசிய குடிமக்கள் இறுதி வரைவு பதிவேடு நேற்று முன்தினம் வெளியிடப்பட்டது. இதில் 40 லட்சம் பேரின் பெயர்கள் நீக்கப்பட்டு இருந்தன. இதற்கு எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன.

இந்த நிலையில், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவரும், மேற்கு வங்காள முதல்-மந்திரியுமான மம்தா பானர்ஜி இதுபற்றி மோடி அரசை கடுமையாக விமர்சித்து உள்ளார்.

அவர் கூறுகையில், “தனது அரசியல் லாபங்களுக்காக மோடி அரசு லட்சக்கணக்கானவர்களை நாடு இல்லாதவர்களாக ஆக்க முயற்சி செய்கிறது. நாட்டு மக்களை இரண்டாக பிளக்க சதி செய்கிறது. இது நாட்டில், உள்நாட்டு போருக்கும், ரத்தகளரிக்கும் வழி வகுக்கும். இதேபோல் தேசிய குடிமக்கள் பதிவேட்டை மேற்கு வங்காளத்தில் உங்களால் வெளியிட முடியுமா?… அப்படி செய்தால் உங்களால் ஒரு போதும் மாநிலத்தில் ஆட்சியை பிடிக்க முடியாது” என்று சாடினார்.

எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகளுக்கு பதில் அளித்த பா.ஜனதா தலைவர் அமித்ஷா, “அசாமில் வெளியிடப்பட்ட தேசிய குடிமக்கள் இறுதி வரைவு பதிவேடு நாட்டின் பாதுகாப்பு விவகாரத்துடனும், இந்தியர்களின் உரிமைகளுடனும் தொடர்புடையது. எனவே இதற்கு நாங்கள் முன்னுரிமை அளிப்போம். மற்ற கட்சிகளும் இதுகுறித்து தங்களது நிலைப்பாட்டை தெரிவிக்க வேண்டும்” என்றார்.

-dailythanthi.com

TAGS: