பழனி கோவில் சிலை செய்ததில் முறைகேடு வழக்கு: அறநிலையத்துறை முன்னாள் ஆணையர் சிலை கடத்தல் தடுப்பு பிரிவில் ஆஜர்

திருச்சி, பழனி தண்டாயுதபாணி(முருகன்) கோவிலில் நவபாஷாண மூலவர் சிலை செய்தது தொடர்பாக 4½ கிலோ தங்கம் மோசடி செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக ஐகோர்ட்டிலும் வழக்கு தொடரப்பட்டது. மேலும் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு பல்வேறு புகார்கள் சென்றன.

இந்த முறைகேடு தொடர்பாக ஐ.ஜி. பொன்.மாணிக்கவேல் விசாரிக்க ஐகோர்ட்டு உத்தரவிட்டது. அதன்பேரில் சில மாதங்களுக்கு முன்பு பழனி முருகன் கோவிலுக்கு நேரடியாக சென்று அவர் விசாரணை நடத்தினார். இதைத்தொடர்ந்து இந்த முறைகேட்டில் ஈடுபட்டதாக ஸ்தபதி முத்தையா, கோவில் செயல் அலுவலர் ராஜா ஆகியோர் கைது செய்யப்பட்டனர். தற்போது அவர்கள் நிபந்தனையின் பேரில் ஜாமீனில் வெளியே உள்ளனர்.

முன்னாள் ஆணையருக்கு வலைவீச்சு

இதற்கிடையில் இந்த விவகாரம் தொடர்பாக, முறைகேடு நடந்தபோது இந்து அறநிலையத்துறை ஆணையராக பதவி வகித்து தற்போது ஓய்வு பெற்ற தனபால் விசாரணைக்கு ஆஜராக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரால் சம்மன் அனுப்பப்பட்டது. ஆனால், அவர் ஆஜராகாமல் தலைமறைவாகி விட்டார்.

இந்த நிலையில் முன்னாள் ஆணையர் தனபால், மதுரை ஐகோர்ட்டில் முன் ஜாமீன்கேட்டு மனுதாக்கல் செய்திருந்தார். ஐகோர்ட்டு நீதிபதி, கும்பகோணத்தில் உள்ள சிலை கடத்தல் தடுப்பு குறித்து விசாரிக்கும் சிறப்பு கோர்ட்டில் ஆஜராகி, ஜாமீன் பெற உத்தரவிட்டார். கும்பகோணம் கோர்ட்டில் ஆஜரான தனபாலுக்கு ஜாமீன் வழங்க கூடாது என சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் கடும் ஆட்சேபம் தெரிவித்தனர்.

பின்னர், கும்பகோணத்தில் தங்கி விசாரணைக்கு ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்ற நிபந்தனையின்பேரில் தனபாலுக்கு ஜாமீன் வழங்கப்பட்டது.

1½ மணி நேரம் விசாரணை

அதன்பேரில் திருச்சியில் உள்ள சிலை கடத்தல் பிரிவு ஐ.ஜி. சிறப்பு முகாம் அலுவலகத்தில் முன்னாள் ஆணையர் தனபால் நேற்று காலை 10.45 மணிக்கு ஆஜரானார். அங்கு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ராஜாராமன், அவரிடம் பழனி முருகன் கோவில் உள்பட பல்வேறு கோவில்களில் நடந்த முறைகேடு குறித்து கேள்விகள் கேட்டு அவற்றை பதிவு செய்தார். 1½ மணி நேர விசாரணைக்கு பின்னர், மதியம் 12.15 மணிக்கு அலுவலகத்தை விட்டு வெளியே வந்தார்.

இதுபற்றி தனபாலிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பியபோது “கோர்ட்டு உத்தரவின்பேரில் ஆஜராகி விளக்கம் அளித்துள்ளேன். வேறு எதுவும் சொல்வதற்கில்லை” என்று புறப்பட்டு சென்றார்.

-dailythanthi.com

TAGS: